‘தினமலர்’ பூணூல் மலர் தான்!
தினமலர் நாளேட்டை பொதுவாக ‘பூணூல்’ மலர் என்று பலரும் குறிப்பிடுவது வழக்கம். இது ஏதோ அந்த ஏட்டை அவமதிப்பது என்பது பொருள் ஆகாது; உண்மையிலேயே நாங்கள் பூணூல் மலர்தான் என்பதை அந்த ஏடும் ஒப்புக் கொண்டு இருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆவணி அவிட்டம் என்கிற பூணூல் மாற்றும் சடங்கு நடக்கின்ற நாள். அந்த நாளில் கட்டுரை ஒன்றை தினமலர் நாளேடு வெளியிட்டிருக்கிறது, அதில் பூணூல் மாற்றுகின்ற சடங்கை பிராமணனாக இரு பிறப்பு எடுக்கின்ற சடங்கை நமது பிராமண சந்ததிகளிடம் கொண்டு போய் சேர்ப்பது பிராமணர்கள் ஆகிய நமது கடமை என்று வலியுறுத்தி கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறது.
“இந்த நாளை காஞ்சி சங்கராச்சாரி கல்வித் திருநாள் என்கிறார். படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கு வேதம் கிடைத்த நன்னாள் தான் ஆவணி அவிட்டம். அந்த நாளில் தான் நாம் வேதத்தின்படி பூணூலை மாற்றிக் கொண்டு இருக்கிறோம். மாற்றுவதோடு காயத்ரி மந்திரத்தையும் நாம் ஜெபிக்கிறோம். காயத்ரி மந்திரத்தை ஜெபிப்போரின் மனதும் உடலும் தூய்மை பெறுகிறது. அதனால் ஏற்படும் ஆன்மீக அதிர்வலைகளால் உலகமே நன்மை பெறுகிறது.
உயிர்களெல்லாம் நலமுடன் வாழ்வதற்கு வழி ஏற்படுகிறது. வேதம் நமக்கு அளித்த அதாவது பிராமணர்களுக்கு அளித்த பெரும் செல்வமான காயத்ரி ஜெபத்தை நாம் நம் இளைய தலைமுறையிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் அது நமது கடமை” என்று அந்த ஏடு சிலாகித்து எழுதி இருக்கிறது.
பூணூல் அணிகின்ற உரிமை நமக்கே உண்டு; அது பிறப்பின் சிறப்பு என்பதோடு, காயத்திரி மந்திரம் ஓதுவதால் கிடைக்கக் கூடிய மனதும் உடலும் தூய்மையடைகின்ற சக்தி ‘பிராமணர்களுக்கு’ மட்டுமே கிடைக்க வேண்டும் என்று எழுதும் ஏட்டை “பூணூல் மலர்” என்று தானே சொல்ல வேண்டும்?
சபரிமலை பிரசாதம் பிராமணர்கள் மட்டுமே தயாரிக்கத் தடை
சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் பெரும்பவூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இது அண்மையில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அது பிரசாதம் தயாரிப்பதற்கான டெண்டர் விளம்பரம். இதில் ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டிருந்தது, “கேரள மாநிலத்தை சேர்ந்த பிராமணர்கள் மட்டுமே இந்த டெண்டரில் விண்ணப்பிக்க முடியும் பிராமணர்கள் மட்டுமே பிரசாதத்தை தயாரிக்க முடியும்” என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இதை எதிர்த்து அம்பேத்கர் கலாச்சார மய்யத்தினுடைய தலைவர் சிவன் கத்தாரி வழக்கு ஒன்றை தொடர்ந்தார். வழக்கு வந்தவுடன் சபரிமலை நிர்வாகம் தன்னுடைய உத்தரவை திரும்பப் பெறுவதாக இப்போது அறிவித்திருக்கிறது. ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு இதே தேவசம் போர்டு இப்படி மதத்தில் ஜாதியை புகுத்துகின்ற முறையை ஒழித்து விட வேண்டும் என்று அறிவுரை கூறி இருந்தாலும் கூட அதற்கு தடை போட்டு இருந்தாலும் கூட அதையும் மீறி கடந்த பல ஆண்டுகளாக பார்ப்பனர்களுக்கு மட்டுமே இந்த உரிமை வழங்கப்பட்டு வந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. வைணவக் குழுவை சேர்ந்த அய்யங்கார்கள் மட்டும்தான் அங்கே பிரசாதத்தை தயாரிக்க முடியும். சனாதன தர்மம், சனாதன தர்மம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே, சனாதன தர்மம் என்று சொன்னால் மாறாதது என்று பொருள்.
ஆக சனாதன தர்மத்தின்படி கோவிலில் பிரசாதம் தயாரிக்கின்ற உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு.
பெரியார் முழக்கம் 18082022 இதழ்