பெரியாரின் கனவு நனவாகும் மாட்சி!
உற்பத்தி சேவைத் துறைகளில் பணியாற்றும் பெண்களில் தமிழ் நாடே முதலிடம்
வேலைக்குப் போகும் பெண்களில் இந்தியாவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ந்திருக்கிறது.
இந்தியா முழுமைக்கும் மொத்தம் 15.93 சதவீதப் பெண்கள் வேலைக்குப் போகும் நிலையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது 7.08 இலட்சம் பெண்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
இரண்டா வது இடத்தில் கருநாடகம் இருந்தாலும் கருநாடகத்தைவிட மூன்று மடங்கு தமிழ்நாட்டில் அதிகம். 2017-2018ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலைகளுக்கான ஆண்டறிக்கை இத்தகவலைத் தெரிவித்துள்ளது. பெண்களையும் உள்ளடக்கிய தொழில் கொள்கைகளை தமிழ்நாடு அரசு உருவாக்கி அமுல்படுத்துவதே இதற்குக் காரணம்.
இரவு நேரப் பணிகளுக்கு அனுமதி; அதற்கான பாதுகாப்பு; உயர் தொழில் நுட்பத் திறன் பயிற்சி பயிற்சி; குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் (இதற்கு ஒன்றிய ஆட்சி 10 கோடி மான்யம் வழங்குகிறது); பெண்கள் தங்கும் விடுதி வசதிகள்; உதிரி பாகங்கள் தயாரிப்புப் பூங்கா போன்ற திட்டங்களால் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தமிழ்நாட்டில் பெண்களின் பங்கேற்பு அதிகமாக இருக்கிறது.
ஜவுளி மற்றும் காலணி தாரிப்பு தொழிற்சாலைகளில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கிறார்கள். 2021 முதல் கோவை கிரிலேஸ்கர் நிறுவனம் பெண்களை மட்டுமே பணிக்கு அமர்த்தி வருகிறது. இந்த நிறுவனம் குஜராத்தில் தொடங்கிய தொழிற்சாலையில் 35 சதவீத பெண்களை பணிகளில் அமர்த்தி யுள்ளது. இராணிப்பேட்டை மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியில் 70 சதவீதம் பெண்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. எண்ணூர் அசோக் லேலாண்ட், கோவை பிரிக்கோல்ஸ், ஒரகடம் ராயல் என்பீல்டு, வல்லம் வடகல், ‘சிஈஏடி’ சென்னை உள்ளிட்ட பல நிறுவனங்கள் பெண்களுக்கே அதிக வேலை வாய்ப்புகளைத் தந்து வருகின்றன.
சேவைத் துறைகளான டி.சி.எஸ்., காக்ளிசன்ட் இந்தியா, வால்மார்ட் உலக தொழில் நுட்ப மய்யம் உள்ளிட்ட ஏராளமான சேவைத் துறை தொழில் மய்யங்கள் பெண்களையே அதிக எண்ணிக்கையில் வேலையில் அமர்த்தி யுள்ளன.
‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?’ என்று கேட்ட சமூகத்தில் பெரியார் இயக்கம் பெண்கள் உரிமைக்காக நடத்திய இயக்கத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றி இது.
தமிழ்நாடு ‘பெரியார் மண்’ என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
தகவல்: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’, ஜூலை 4, 2022
பெரியார் முழக்கம் 07072022 இதழ்