அய்.நா. அங்கீகரிக்கும் “திராவிடன் மாடல்”
சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சியின் கருத்தரங்கில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ஒன்றிய அரசு கொண்டுவரும் ஒரே நாடு என்ற கருத்தாக்கத்தை பொருளாதார ரீதியில் ஏற்க முடியாது. கூட்டாட்சி தத்துவத்தை அனுசரித்து செயல்பட்டால்தான் நாடு வளர்ச்சி காணும். அதேவேளையில், பிற மாநிலங்களை விட தமிழகம் பெரும்பாலான துறைகளில் சிறந்து விளங்குகிறது. ஆனால், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது. தமிழ்நாட்டின் தனிநபர் வருவாய் குஜராத்தை விட 10 இல் இருந்து 15 ஆயிரம் குறைவுதான். நிதி மேலாண்மையில் குஜராத் சிறப்பாக செயல்படுகிறது. மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் 100 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்கிறார்கள். பள்ளிக்கு போகாத 15 வயதிற்கு உட்பட்ட பெண்களே தமிழ்நாட்டில் இல்லை. அதே வேளையில், குஜராத்தில் 15 முதல் 20 சதவீதம் பெண்கள் பள்ளிக்கூடம் போவதில்லை. இது எந்த மாதிரி வளர்ச்சி? அதுமட்டுமல்லாது, தமிழ்நாட்டில் ஆயிரம் பேருக்கு நான்கு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதே குஜராத்தில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் தான் இருக்கிறார். இதில் எந்த சமூக நிலையை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்?உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி மட்டுமே வளர்ச்சியை நிர்ணயிக்காது. நாங்கள் எங்களுக்கென தனி வழி வைத்திருக்கிறோம், அது எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்கும். அதற்கு பெயர் திராவிட மாடல். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சரின் பேச்சு நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதே கருத்தை அய்.நா.வும் வலியுறுத்தியிருக்கிறது.
தனிநபர் வருவாய் மட்டும் வளர்ச்சியல்ல
இவற்றோடு ஒரு நாட்டின் நிலைத்த வளர்ச்சியை (sustainable Development) அளவிடும் 17 குறிக்கோள்களை உள்ளடக்கிய SDG (sustainable Development Goals) என்ற அளவீடு அய்.நாவால் பரிந்துரைக்கப்பட்டு நாடுகளின் வளர்ச்சி அதனடிப் படையில் மதிப்பிடப்படுகின்றது. இந்த 17 இலக்குகள் முறையே 1) வறுமை ஒழிப்பு, 2) பட்டினியின்மை, 3) உடல் நலன் மற்றும் நலமான வாழ்வு, 4) தரமான கல்வி, 5) பாலின சமத்துவம், 6) தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதாரம், 7) அனைவருக் குமான தூய்மையான எரிசக்தி, 8) நல்ல வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி, 9) தொழில்துறை – புதுமைகள் – உட்கட்டுமானம், 10) குறைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள், 11) நிலைத்த நகரங்களும் சமூகங்களும், 12) நிலைத்த நுகர்வும், உற்பத்தியும்,13) காலநிலை மாற்றத்திற்கான செயல்பாடுகள், 14) கடல்வாழ் உயிரினங்கள், 15) தரைவாழ் உயிரினங்கள், 16) அமைதி – நீதி மற்றும் உறுதியான நிறுவனங்கள், 17) குறிக்கோள்களை எட்டுவதற்கான கூட்டு என்பவை ஆகும். இவற்றை 2030க்குள் எட்டுவதற்கான தெளிவான வரையறைகள் அடங்கிய 17 குறிக் கோள்களைக் கொண்டு நாட்டின் நிலைத்த வளர்ச்சி அளவிடப்படுகிறது.
இவற்றை அளவிடும் வழிகாட்டிகளாக பள்ளிக் கல்வி பெறாத குழந்தை களின் எண்ணிக்கை, வேலையின்மை விழுக்காடு. சேரிகளில் வாழும் மக்கட் தொகை, மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை, சிசு மரணங்கள், கழிவு மேலாண்மை போன்ற அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அடிப்படையில் 2020ஆம் ஆண்டுத் தரவுகளின்படி 192 நாடுகளை உள்ளடக்கிய தரவரிசைப் பட்டியலில் 60 மதிப்பெண்களுடன் 117ஆவது இடத்தில் இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் தவிர்த்த அத்தனை தெற்காசிய நாடுகளும் இந்தியாவை விட அதிகப் புள்ளிகள் பெற்று முன்வரிசையில் இருக்கின்றன. என்பதையும் இங்கு சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
பெரியார் முழக்கம் 10032022 இதழ்