பெரியார் யுவராஜ்-லீலாவதி ஜாதி-தாலி சடங்கு மறுப்பு மணவிழா

சென்னை மாவட்ட ‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட அமைப்பாளரும் கழக செயற்பாட்டாளருமான பெரியார் யுவராஜ்-லீலாவதி ஜாதி-சடங்கு-தாலி மறுப்பு மணவிழா, செப். 22, 2019 அன்று மயிலாடுதுறை சோழம்பேட்டை கே.ஜி.ஆர். திருமண மண்டபத்தில் மாலை 7 மணியளவில் நிகழ்ந்தது. நாகை மாவட்ட கழகச் செயலாளர் மகேஷ் வரவேற்புரையாற்றினார். தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று மணவிழாவை நடத்தி வைத்தார். முன்னதாக கோவை கழகத் தோழர் இசைமதி – பெண்ணுரிமைப் பாடல் பாடினார். கோவை கழக செயல்பாட்டாளர் நிர்மல்குமார், கழகத் தோழர் இசைமதி ஆகியோர் ஜாதி மறுப்பு மணவிழாவை பொதுக் கூட்ட மேடையில் நடத்திக் கொண்டனர். தோழர் இசைமதியின் சகோதரியே லீலாவதி என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்கையை உறவாக்கிக் கொள்ளும் பண்பாட்டுப் புரட்சியை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நிகழ்த்தி கழகத்துக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். கோவையிலிருந்து தனி வாகனத்தில் கழகத் தோழர்கள் மணவிழாவுக்கு வந்திருந்தனர். மயிலாடுதுறை கழகத் தோழர்கள் மணவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்தனர். பரப்புரைப் பயணம் நிறைவு விழா  மாநாட்டில் பள்ளிபாளையத்தில் பங்கேற்ற சென்னை மாவட்டக் கழகப் பயணக் குழுவினர் பரப்புரை வாகனத்திலேயே மண விழாவுக்கு வந்திருந்து சிறப்பித்தனர்.

பெரியார் முழக்கம் 03102019 இதழ்

You may also like...