கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள்

திராவிட அரசியலின் பெருமைக்குரிய அடையாளம் கருஞ்சட்டைக் கலைஞர் என்ற தலைப்பில் செப்டம்பர் 30ஆம் தேதி திருச்செங்கோட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது.

திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் து.சதிசுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கின் தொடக்கத்தில் பெரியார் பிஞ்சு இரா.தர்சினி வரவேற்புரையாற்றினார். கழகத்தின் மாவட்ட தலைவர்  மு.சாமிநாதன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்செங்கோடு நகர பொறுப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். மூர்த்தி மற்றும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலைஞரின் செயல்பாடுகளை விளக்கி சிறப்புரையாற்றினர். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் சிவகாமி, நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் ஆகியோரும் உரையாற்றினர்.

சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி பேசுகையில், “காவிகளை தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், தலைவராக பொறுப்பேற்றபோது உறுதியளித்திருக்கிறார். அவருடைய பாதையில் நாங்களும் காவிகளை எதிர்க்க உறுதியாய் செயல்படுவோம்” என்றார்.  திராவிடத்தால் தமிழ்நாடு பின்தங்கிவிட்டது என்ற பொய்ப்பிரச்சாரத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பார்ப்பனிய இந்துத்துவவாதிகளுக்கும், போலித் தமிழ்தேசியவாதிகளுக்கும் பதில் கூறும் விதமாக வரலாற்று ஆதாரங்களுடன் சுமார் 2 மணிநேரம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். அடித்தட்டு மக்களைப் பற்றிய கலைஞரின் பார்வை எவ்வாறு இருந்தது என்பதையும், 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் வட மாநிலங்களுடன் ஒப்பிடவே இயலாத அளவுக்கு தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதையும் புள்ளிவிவரங்களுடன் தனது உரையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டார். இறுதியாக திருச்செங்கோடு நகர கழகத் தோழர் பூபதி நன்றியுரையாற்றினார்.

இந்த நிகழ்வில் ஆதித் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் செல்வ வில்லாளன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி, ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியன், நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன், பள்ளிபாளையம் நகரத் தலைவர் பிரகாசு மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், தோழர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

16-9-2018 ஞாயிறு அன்று, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருச்சி கே.சவுந்தரராஜன், அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், கவரபாளையத்தில் கட்டியுள்ள பெரியார்-அண்ணா அரங்கத்தின் திறப்புவிழா நடைபெற்றது. அரங்கத்தின் முன்புறம் நிறுவப்பட்டுள்ள பெரியார், அண்ணா. எம்.ஜி.ஆர்., காமராசர் சிலைகளின் திறப்புவிழா அன்று மாலை 5.00 மணியளவில் நடந்தது. தந்தை பெரியாரின் சிலையை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அறிஞர் அண்ணாவின் சிலையை முனைவர் மணியம், காமராசர் சிலையை சி.பி.எம். கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சிலையை முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.இராதா திறந்து வைத்து உரையாற்றினர். விழாவில் ம.தி.மு.க அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன், சென்னை வழக்கறிஞர் அஜிதா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பாலகுருசாமி ஆகியோரும் கருத்துரையாற்றினர். இரவு 9 மணியளவில் டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகக் குழுவினரின், அறிஞர் அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” நாடகம் மிக சிறப்பாக நடைபெற்றது.

22.9.2018 சனிக்கிழமை, முற்பகல் 11-00 மணியளவில், திருவண்ணாமலை, நல்லவன்பாளையம், காந்திமதி அரங்கில் கழகத் தோழர் அ.சத்தியராஜ் எம்.ஏ., பி.எல்., -வெ.ஷீலா பி.எஸ்.சி (அக்ரி) ஆகியோரின் சடங்கு மறுப்பு, தாலி மறுப்பு இல்லற இணையேற்பு விழா, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தேறியது. விழாவில் பு.இ.மு வழக்குரைஞர் கல்விச் செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், வி.சி.க. நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ஏ.நேரு, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், செஞ்சி கழகத் தோழர் சாக்ரடீசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையில் நடைபெற்ற அந்நிகழ்வின் நிறைவில் அனைவருக்கும் புலால் உணவு வழங்கப்பட்டது.

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர் அன்பரசன் (அன்பு ஏகலைவன்) – இளமதி வாழ்க்கை இணை ஏற்பு நிகழ்வு 2.9.2018 ஞாயிறு காலை 10 மணியளவில் மயிலாடுதுறை கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் நிகழ்ந்தது. தலைமைக் குழு உறுப்பினர் இளையராஜா வரவேற்புரையாற்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மணவிழாவை நடத்தி வைத்தார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.

பெரியார் முழக்கம் 04102018 இதழ்

You may also like...