சுயராஜ்யக் கட்சியார் கார்ப்பொரேஷனில் செய்த வேலை
சுயராஜ்யக் கட்சியார் என்கிற பிராமணர்கள் சென்னைக் கார்ப்பொ ரேஷனைக் கைப்பற்ற ஆட்களை நிறுத்தி ஸ்ரீமான் திரு. வி. கலியாணசுந்தர முதலியாரை சுவாதீனம் செய்து கொண்டு மூலைமுடுக்கெல்லாம் ஜஸ்டீஸ் கட்சியாரை வைது பிரசங்கம் செய்த காலத்தில் தாங்கள் மிகுதியும் யோக்கியர் கள் என்றும், ஜஸ்டீஸ் கட்சியார் தேசத் துரோகிகள் என்றும், கார்ப்பொரேஷ னுக்குத் தாங்கள் மெம்பர்களானால் ஜனங்களுக்கு அதிக அனுகூலம் செய்வோம் என்றும், வரிகளைக் குறைப்போம் என்றும் பொய் மூட்டைகளை அளந்தார்கள். இப்பொய் மூட்டைகளை ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியா ரும் தலையில் தூக்கிக்கொண்டு போய் ஓட்டர்கள் வீட்டில் கொட்டினார். இப் பொய்யர்கள் வெற்றியடைந்து கார்ப்பொரேஷன் மெம்பர்களான பிறகு அவர்கள் யோக்கியதை என்ன என்பதை சென்னை வியாபாரிகள் சங்கத் தாரால் செய்த தீர்மானங்களிலிருந்தே பொது ஜனங்கள் அறிந்து கொள்ள லாம். அதாவது:-
“வியாபார சுணக்கத்தால் வியாபாரம் நடப்பதே கஷ்டமாயிருக்கும் போது வியாபாரிகளின் தொழில் வரியைக் கார்ப்பொரேஷன் கவுன்சிலர்கள் 100-க்கு 25 வீதம் அதிகமாக உயர்த்தியதை இச் சங்கம் பலமாகக் கண்டிக்கிறது என்றும், வரி உயர்வு தீர்மானத்தை இந்த டிவிஷன் கவுன்சிலரே ஆமோதித் ததையும் பிரசிடெண்டு இதற்கு அனுகூலமாய் ஓட்டுக் கொடுத்ததையும் இம்மகாநாடு இன்னும் பலமாய்க் கண்டிக்கிறது…….இந்த டிவிஷனின் சுகாதார நிலைமை மிகக் கேவலமாயிருப்பதற்காகவும், இதை கார்ப்பொரேஷன் கவுன்சிலர்கள் கவனிக்காமலிருப்பதற்காகவும் இச்சங்கம் வருந்துகிறது”/ என்று தீர்மானித்திருக்கிறார்கள். சுயராஜ்யக் கட்சியார் எலெக்ஷன் போது ஓட்டர்களிடம் கொடுக்கும் வாக்குத் தத்தத்திற்கும் அதன் பிறகு அவர்கள் நடந்து கொள்ளும் யோக்கியதைக்கும் அவர்களுக்கு ஓட்டு வாங் கிக் கொடுக்கும் ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரின் யோக்கிய தைக்கும் இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும். கார்ப்பொரேஷனில் வரி, சுகாதாரம் என்னும் இரண்டு முக்கிய காரியம் உண்டு. இந்த இரண்டு முக்கிய காரியத்திலும் இவர்கள் யோக்கியதையைப் பார்த்த ஓட்டர்கள் இனி யாவது சுய புத்தியுடன் நடப்பார்களா?
குடி அரசு – துணைத் தலையங்கம் – 09.05.1926