நமது வேலை
“குடி அரசு” பத்திரிகை தோன்றி 27 மாதங்கள் ஆகின்ற தெனினும் அதன் மூலம் தேசத்திற்கும் சமூகத்திற்கும் நமக்கு சரி என்று தோன்றிய வழியில் நம்மால் கூடிய தொண்டை ஆற்றி வந்திருக்கிறோம் எனினும் செய்யவேண்டிய வேலை எவ்வளவோ பாக்கி இருக்கிறது. முன் ஒரு சமயம் நாம் எழுதியதுபோல் “குடி அரசு” பத்திரிகை வேலை மாத்திரம் அல்லாமல் அதன் கொள்கையைப் பரப்ப மக்கள் மனதில் பதியச் செய்ய ஊர் ஊராய் திரிந்து பிரசாரமும் செய்ய வேண்டிய பொறுப்பு இனியும் எவ்வளவோ மடங்கு அதிகமாயிருந்து வருகிறது. கோவை மகாநாட்டுத் தீர்மானங்களின் மூலம் பார்ப்பனரல்லாதாருக்குள் இனி அபிப்பிராய பேதம் இருக்காது என்றும், பார்ப்பனரல்லாத தலைவர்கள் என்போர்களும் பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் நமது கொள்கைகளை பிரசாரம் செய்யும் என்றும், நமக்கும் போதிய ஓய்வு கிடைக்கும் என்றும், பல நண்பர்கள் கருதினார்கள். இப்போது அவைகள் ஒரு வினாடி கனவு போலவே முடிந்து விட்டது. பார்ப்பன ரல்லாதார் கக்ஷியிலேயே யார் யாரை நமது சமூக முன்னேற்றத்திற்கும் உண்மையான தேச முன்னேற்றத்திற்கும் உதவி செய்வார்கள் என்று எண்ணி இருந்தோமோ அவர்கள் எல்லோரும் இப்போது காங்கிரஸ் பேரில் நாட்டம் கொண்டவர்களாக ஆகி விட்டார்கள். அரசியல் புரட்டும், தேர்தல் பைத்திய மும் மக்களை அவ்வழி இழுக்கிறது. கோவைத் தீர்மானமானது யாரோ இரண்டொருவர் ‘காங்கிரசில் சேர இஷ்டப்படுகிறவர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்’ என்று இருந்தாலும் ஏறக்குறைய பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் யாவருமே அதில் போய்ச் சேர தீர்மானித்துக் கொண்டதாகவே தெரியவருகிறது.
இது நிற்க, காங்கிரசிலிருந்து புதிதாக சிலர் பார்ப்பனரல்லாத கக்ஷியில் வந்து சேர்ந்து இக்கக்ஷிக்கு உதவிபுரிவார்கள் என்று எண்ணி இருந்தவர்கள் மகாநாட்டின் போது மாத்திரம் பொது மக்கள் மனம் திருப்தியடையும்படி பேசினார்களேயொழிய அவரவர்கள் ஊர் போய்ச் சேர்ந்தவுடன் “வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது” என்பது போல் பழைய படியே பார்ப்பனரல்லாத கக்ஷியை வைவதன் மூலம் பலனடைவதும் நமது எதிரியைப் புகழ்வதும் “நான் இன்னமும் பார்ப்பனரல்லாதார் கக்ஷியில் சேர வில்லை” என்று சொல்லிக் கொள்ளுவதுமாயிருக்கிறார்கள். பார்ப்பனரல்லா தார் பத்திரிகைகளும் இக்கக்ஷியை வைதால் தான் நாட்டில் தமக்கு செல்வாக் குண்டு என்று எண்ணும்படி ஆகி விட்டதாகவே அறியக்கிடக்கின்றது. இவற்றை பார்க்கும்போது நாம் இது வரை என்னதான் மகாநாடுகள் கூட்டி இருந்தாலும் எவ்வளவுதான் பிரசாரங்கள் செய்திருந்தாலும் பொதுவாகவே பார்ப்பனரல்லாதாரில் பல பிரபுக்களுக்கும் பொது வாழ்க்கையில் இறங்கி இருப்பவர்களுக்கும் பத்திரிகைகாரர்களுக்கும் பார்ப்பனர்களிடம் உள்ள பயம் இனியும் நீங்க வில்லை என்றேதான் சொல்ல வேண்டியிருக்கிறது. உதாரணமாக “தமிழ் நாடு” பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்கள் கோவை மகாநாட்டிற்கு வந்து தனது அபிப்பிராயத்தைச் சொல்லிப் பார்ப்பன ரல்லாதாருக்கு உழைக்கும் கக்ஷி இது தான் என்பதை ஒப்புக்கொண்டு தானும் இதில் சேர்ந்து விட்டதாக எல்லாரையும் நம்பும்படியாகச் செய்து இவ்வளவும் ஆனபின் மறுபடியும் “தமிழ்நாடு” பத்திரிகையில் இன்னமும் பார்ப்பன ரல்லாதார் கக்ஷியை ஜஸ்டிஸ் என்னும் பேரால் வைவதற்கு இடம் வைத்துக் கொண்டும் அதற்கு ஏதேதோ வியாக்கியானம் செய்து கொண்டும் “ஜஸ்டிஸ் கக்ஷியாரோடு தேசியவாதிகள் ஒருநாளும் ஒத்துழைக்க முடியாது” என்றும் ஒரே அடியாய் எழுதிவிட்டார். இவற்றைக் கவனிக்கும்போது இது வரையிலும் பார்ப்பனரல்லாதார் கக்ஷியைப் பற்றி எப்படி தூற்றி வந்தாரோ அதே மாதிரிதான் இப்போதும் தூற்ற ஆரம்பித்திருக்கிறாரே அல்லாமல் கோவை மகாநாட்டால் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களின் நிலைமையில் ஒன்றும் மாற்றமில்லை என்றே நினைக்கும்படி இருக்கிறது. ஜஸ்டிஸ் அரசியல் கொள்கையில் இவருக்குள்ள வித்தியாசம் என்ன என்பதை எழுதி இருந்தால் அது நன்றா யிருந்திருக்கும். ஜஸ்டிஸ் கக்ஷியாரானாலும் சரி, தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தாரானாலும் சரி அவர்கள் உத்தியோகம் ஏற்றுக்கொண்டிருந்த காலத்திலும் ஸ்ரீவரதராஜுலு நாயுடுவுக்கு அக் கக்ஷியினது அரசியல் திட்டம் பிடிக்கவில்லை. கவர்னருடன் சிநேகமா யிருந்த காலத்திலும் அரசியல் திட்டம் பிடிக்கவில்லை.
இப்போது உத்தியோகம் பெற்றுக்கொள்ளுவதில்லை என்று தீர்மானித் திருப்பதும் பிடிக்கவில்லை. கவர்னரிடம் நம்பிக்கையில்லை என்று தீர்மானித் திருப்பதும் பிடிக்கவில்லை. இனி இக்கக்ஷி எப்படி நடந்து கொண்டால் ஸ்ரீமான் வரதராஜுலுக்கு பிடிக்குமோ நமக்கு தெரியவில்லை.
தவிரவும் மேட்டூர் புரட்டுகளைப் பற்றி மகாநாட்டில் பேசும்போதும், தீர்மானிக்கும் போதும் அதன் ஆபாசங்களைப்பற்றி ‘ஜஸ்டிஸ்’, ‘திராவிடன்’, ‘குடி அரசு’ ஆகியவைகள் கலம் கலமாய் எழுதிவரும்போதும், பார்த்துக் கொண்டு சும்மாயிருந்த ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு திடீரென்று ஸ்ரீமான் சர்.சி.பி. அய்யருக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டார் என்றால் இதற்கு நாம் என்னதான் செய்து அவருக்கு உண்மை அறியும்படி செய்ய முடியும் என்பது நமக்குப் புரியவில்லை.
ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் அவர்களும் இதே மனப்போக் கையே காட்டி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
“வகுப்பு வாதமிட்டுக்கொண்டிருந்த ஜஸ்டிஸ் கக்ஷியார் காங்கிரசில் நுழைய முன் வந்துள்ளனர்” என்றும், “ஜஸ்டிஸ் கக்ஷிக்காரர்கள் நேரிய நெஞ்சுடன் காங்கிரசில் சேர வேண்டும்” என்றும், “சமுதாய சீர்திருத்தத்தில் பற்றுடைய ஜஸ்டிஸ் கக்ஷியார் நாட்டிலெழும் அரசியல் கக்ஷிக்கு இடையூறு செய்யாமல் தன்னந்தனியராய் தமது தொண்டை நிகழ்த்துவாராக” என்றும் எழுதி இருப்பதிலிருந்தே அன்னாருடைய மனப்பான்மை வெளியாகிறது. ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியாருடைய விளக்க உரையை ஸ்ரீமான் முதலியார் நன்றாய் கேட்டுக்கொண்டிருந்தார் என்பது அவரே ஒப்புக் கொள்ளக் கூடிய விசயம். ஸ்ரீ செட்டியாரவர்களது சொற்பொழிவில் காங்கிர சுக்கும் ஜஸ்டிஸ் கக்ஷிக்கும் கொள்கையில் வித்தியாசம் இல்லை என்றும், ஜஸ்டிஸ் கக்ஷி கேள்க்கும் சுயராஜ்யம் தான் காங்கிரஸ் கேள்கிறது என்றும், காங்கிரஸ் மற்ற வகுப்பாருக்கு (அதாவது மகமதியர், கிருஸ்தவர்களுக்கு) கொடுத்திருக்கும் வகுப்புவாரி உரிமையைத்தான் ஜஸ்டிஸ் கட்சி கேள்கிறது என்றும், இதற்குப் பார்ப்பனர்களே முட்டுக்கட்டையாயிருக்கிறார்கள் என்றும் நன்றாய் எடுத்துரைத்தார். இவைகளை நன்றாய் அறிந்தும் தெரிந்தும் மனப்பூர்வமாக தானும் ஒப்புக்கொண்டும், தனது வாக்காலேயே இன்னமும் என்ன என்னமோ பேசியும் ஆனபின் ஊர்போய்ச் சேர்ந்தவுடன் ஜஸ்டிஸ் கட்சி ‘வகுப்புவாதக் கட்சி’ அரசியல் கிளர்ச்சிக்கு இடையூறு செய்யக்கூடாது, என்கிற பழைய பல்லவியைப் பாடிக்கொண்டு இருப்பாரானால் இதற்கு நாம் என்ன சமாதானம் சொல்லக்கூடும். தேசிய அரசியல் கிளர்ச்சிக்கோ அல்லது காங்கிரஸ் அரசியல் கிளர்ச்சிக்கோ ஸ்ரீமான் முதலியார் போற்றும் மகாத்மா வின் அரசியல் கிளர்ச்சிக்கோ ஜஸ்டிஸ் கக்ஷி எந்த விதத்தில் மற்ற கட்சி களைவிட இடையூறு செய்யக்கூடியதாயிருக்கிறது. இடையூறு செய்த கட்சிகளுக்கெல்லாம் தான் ஆக்கமளித்ததை அடியோடு மறந்துவிட்டு இப்படி பேசவும் எழுதவும் ஆரம்பித்து விட்டால் நாம் என்ன செய்யலாம்- நம்முடைய கால வித்தியாசம் என்றுதான் சொல்ல வேண்டும். இதுபோலவே ஸ்ரீமான் ஜோசப்பு போன்ற சில காங்கிரஸ்காரர்கள் என்பவர்களும் இதே பாடத்தைப் படிக்கிறார்கள். முன் எழுதியது போலவே பல பார்ப்பனர் அல்லாத பத்திரிகைகளும் அப்படியே நடக்கிறார்கள். ஆகவே, இக்கட்சிக்கு உள்ள கஷ்டம் “காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார்”களுக்குள்ளாகவே எவ்வளவு ஏற்படுகிறது என்பதும், இக்கட்சிக்காரர் பலர் காங்கிரஸ் அரசியல் வேஷம் போட்டுக்கொண்டதின் பயனாய் ஏற்படக்கூடிய கஷ்டம் எவ்வளவு என்பதும் நாம் எடுத்துக்கூற வேண்டியதில்லை. ஆகவே கோவை மகாநாட்டால் நமக்கு நன்மை ஏற்பட்டதா? தீமை ஏற்பட்டதா? என்பதை ஒருவாறு இதன் மூலம் ஊகித்துக் கொள்ளலாம். இது எப்படியோ இருக்கட்டும் இனிச் செய்ய வேண்டியது என்ன? தலைவர்கள் என்போர்களை நம்புவதில் பயனில்லை. பாமர மக்களுக்கு பகுத்தறிவு வரும் வரை தலைவர்கள் யோக்கியமாய் நடந்து கொள்வார்களென்று எண்ணுவது பைத்தியக்காரத்தனமே ஆகும். எனவே, நாம் இனி பாமர மக்களை கண் விழிக்கச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டியதுதான் உண்மையான தொண்டு. இதற்காகப் பிரயாசைப்பட போதிய பத்திரிகை இல்லை, ஆள்கள் இல்லை, பணமும் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். நமது நாட்டில் உள்ள பத்திரிகைகள், ஆள் கள், பணம் ஆகியவை எல்லாம் போலி தேசீயத்திற்கும், போலி சுயராஜ்யத் திற்கும் உபயோகப்படுத்தும் முறையில் வாழ்வும், கீர்த்தியும் அடையக் கூடிய தாய் இருக்கிறதே ஒழிய உண்மைக்கு உதவக்கூடியதாக ஒன்றும் தென்படுவ தில்லை. புதிதாக நமக்கு ஆள்களும் பத்திரிகை உதவிகளும் சேர்க்கத்தக்க காலம் இன்னும் வரவில்லையானாலும் இருப்பவைகளையாவது நழுவ விடாமல் வைத்திருக்க வேண்டிய தாயிருக்கிறது. சுமார் நான்கு மாதத்திற்கு முன் ‘குடி அரசில்’ ‘வேண்டுகோள்’ என்னும் தலைப்பின் கீழ் திராவிடன் பத்திரிகையை ஒப்புக் கொள்ளலாமா என்பதைப் பற்றி ஒரு தலையங்கம் எழுதி இருந்ததும், அதற்கு 500 கனவான்கள் வரை பதில் எழுதியிருந்ததும் அவர்களுள் 20 கனவான்கள் தவிர மற்றவர்கள் ஒப்புக்கொள்ளும்படி எழுதி யிருந்ததும் அதன் பேரில் சில நிபந்தனைகளின்படியானால் ஒப்புக் கொள்ளக் கூடும் என்று தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தாருக்கு நாம் எழுதியிப்பதாக எழுதியிருந்ததும், வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அந்நிபந்தனை களுக்கு இப்போதுதான் பதில் வந்திருக்கிறது. நமது நிபந்தனைகளில் முக்கியமானது என்னவென்றால் ‘குடி அரசு’ கொள்கைப்படிதான் ‘திராவி டனை’யும் நடத்த முடியும் என்றும், தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தையோ ஜஸ்டிஸ் கட்சியையோ அதன் கொள்கைகளையோ அதில் சம்மந்தப்பட்ட தனிப்பட்ட நபர்களையோ கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் கண்டிக்கத் தகுந்த உரிமை நமக்கு இருக்க வேண்டும் என்றும் எழுதி இருந் தோம். நாம் ஏன் அப்படி எழுத நேர்ந்தது என்றால் ‘தேசீயம்’, ‘சுயராஜ்யம்’ என்கிற அரசியல்புரட்டுப் பதங்கள் அக்கட்சிக் கொள்கையிலும் கலந்திருப் பதால் அதன் மூலம் அக்கட்சியார்களும் காங்கிரஸ்காரர்களைப் போல் பாமர மக்களை ஏமாற்றும் வழியில் செல்ல நேரிட்டால் அம்மோசத்திலிருந்து பாமர மக்களை தப்புவிக்க யார் யாரை அல்லது எந்த எந்த கட்சியை கண்டிக்க வேண்டுமானாலும் கண்டிப்பதற்கு பாத்தியமிருக்கவும் மற்றும் சர்க்கார் அதின் உத்தியோகஸ்தர்கள் முதலியவர்களை கண்டிக்கும் விஷயத்தில் எவ்வித தடையும் இருக்கக்கூடாது என்பதற்காகவுமே அந்நிபந்தனை எழுதி இருந்தோம். அதற்கு பதில் எழுத ஏறக்குறைய 2 மாதத்திற்கு மேலாகி விட்டது.
இப்போது பதில் வந்திருக்கிறது. அதாவது நம்மிஷ்டம் போல் நடத்த ஒப்புக்கொண்டதாகவும், காலவரையரை கட்டியும் ஒரு தீர்மானம் நிறை வேற்றி அனுப்பி இருக்கிறார்கள். ஆகஸ்டு முதல் தேதி முதலே ஒப்புக் கொள்ளும் படியாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அநேக நண்பர்கள் ஒப்புக்கொள்ளும் படியும் எழுதியிருக்கிறார்கள். இரண்டொரு கனவான்கள் மாதம் ஒன்றுக்கு 100, 200 ரூபாய்வீதம் நஷ்டத்திற்கு உதவுவதாகவும் வாக்களிக்கிறார்கள் சில நண்பர்கள் ஊதியம் எதிர்பாராமல் தொண்டு செய்வதாகவும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். ஆகவே, இந்நிலையில் சிறிது காலத்திற்காவது நாமும் அதை ஒப்புக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதாகவே கருதுகிறோம்.
ஆனால், முக்கிய நண்பர்களில் பலர் உடல் நிலையை கவனிக்கும் படிக்கும், ஓய்வெடுத்துக்கொள்ளும்படிக்கும் எழுதி வருகிறார்கள். ஓய்வெ டுத்துக்கொள்ள வேண்டிய சமயம் நமக்குத்தெரியும். அதாவது நமது தொண்டு நாட்டிற்கு உதவாது என்றாவது நமது தொண்டை நாட்டார் ஏற்பதில்லை என்றாவது நமக்கு தெரிந்தால் யாரிடமும் சொல்லாமல் நாமே ஓய்வெடுத்துக் கொள்ளுவோம்.
அதுவரை எடுத்துக்கொள்ளும் ஓய்வு உண்மையான ஓய்வாகாது. அப்படி கடுமையாக ஓய்வு எடுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும் என்கிற முறையில் நமது உடலில் கோளாறு ஒன்றும் இது சமயம் இல்லை என்றே நினைக்கிறோம்.
தனவைசிய நாட்டுச் சுற்றுப்பிரயாணம் முடிந்தவுடன் ஒரு வாரத்தில் “திராவிடன்” சம்மந்தமான ஏற்பாடுகளைப் பற்றி முடிவு செய்ய சென் னைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இது விஷயத்தில் நண்பர்கள் தங்கள் தங்கள் கடமையைச் செய்ய தவற மாட்டார்கள் என்றே முடிவு செய்து கொண்டு இம்முயற்சியில் ஈடுபடலாமெனக் கருதுகிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 17.07.1927