நாடார் மஹாஜன சங்க 11 – வது மகாநாடு
இம்மாதிரியான வகுப்பு மகாநாடுகள் நமது நாட்டில் நடந்து வருவது நாட்டின் முற்போக்குக்கு ஏற்றதா இல்லையா என்பது கேள்வி. பலர் இது கெடுதல் எனச் சொல்லுகிறார்கள். எனினும் வகுப்பு மகாநாடு அல்லாத (வகுப்பு வாதமல்லாத) மகாநாடுகளே இந்நாட்டில் இல்லை என்பதே எனது அபிப்பிராயம். ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுடைய உரிமைகளைக் கேட்கவே மகாநாடுகள் நடத்துகிறார்கள் . மற்றொரு வகுப்பார் தலையெடுக் காமல் அடிக்கவும், மற்ற வகுப்பார் உரிமைகள் பெறாமலிருக்கவுமே பலர் பல மகாநாடுகளை நடத்துகிறார்கள் . ஆனால் நமது நாடார் மகாநாடோ அப்படி இல்லை. பிறருக்கு கெடுதல் செய்யாமல் நாடார் மகாஜனங்களின் நன்மையை நாடியும், உரிமைகளைப் பெறவுமே இம்மகாநாடு நடைபெறு கின்றது. வகுப்பு மகாநாடுகளும், வகுப்பு வாதங்களும் மேல் ஜாதியாராலும் அவர்களுடைய கொடுமைகளாலும் தான் ஏற்பட்டவை. துவேஷத்தை உண் டாக்க நாம் மகாநாடுகள் கூட்டுவதில்லை. துவேஷம் வேண்டாம், எல்லோ ரும் சமம் என்று சொல்லுங்கள் என்று சொல்லவே நாம் இம்மகாநாடு கூட்டியிருக்கிறோம். நம் நாட்டில் அடிக்கடி சொல்லப்பட்டு வரும் ‘ஒற்றுமை’ என்ற வார்த்தைகளும், பிரச்சனைகளும் வெளி வேஷமே. தங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய நிலைமை ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட பின்னரே உண்மை ஒற்றுமை ஏற்படும். ஒருவருக்கொருவர் ஒற்றுமையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டியது அவசியம். அதற்கான வேலைகளைச் செய்ய சுதந்திரம் ஒவ்வொரு சமூகத்திற்கும் இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் சுயமரியாதை, சமத்துவம், சுயமதிப்பு ஏற்பட வேண்டும். அதன்மூலந்தான் தேச முன்னேற்றமடையும். உண்மையான தேசீயமென்பது சுயமரியாதை ஒன்றே. சுயமரியாதையைப் பொறுத்தேதான் சுயராஜ்யமிருக் கிறது. சகலரும் ஒன்று. மேலோர் கீழோர் என்ற உணர்ச்சி இருக்கவே கூடாது.
குறிப்பு : 01.10.1927 ஆம் நாள் கும்பகோணத்தில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்கத்தின் 11 ஆவது மாநாட்டில் சொற்பொழிவு.
குடி அரசு – சொற்பொழிவு – 09.10.1927