கீழேவிழுந்தும் மீசையில் மண்ணொட்டவில்லையாம்
நமது பார்ப்பனர்கள் எவ்வளவோ பாடுபட்டும் இந்துமத பரிபாலன மசோதாவானது சட்டசபையில் ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக நிறை வேறி இரண்டு கவர்னர் பிரபுக்கள், இரண்டு வைசிராய் பிரபுக்கள் ஆகிய வர்கள் சம்மதமும் அரசர் பெருமான் சம்மதமும் பெற்று சட்டமாகிவிட்டது. இனி மகந்துகள், மடாதிபதிகள் பணம் நமது பார்ப்பனர்களுக்கும் அவர்களது தேர்தலுக்கும் கிடைப்பது முடியாத காரியம். இதற்காக நமது பார்ப்பனர்கள் ஒரு தோது கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்பதுபோல் மறுபடியும் இதைப் பற்றி திருத்தவோ புகுத்தவோ செய்யலாம் என்பதாக மந்திரியைக் கொண்டு ஒரு வார்த்தை வாங்கி விட்டார்களாம். இது இன்னமும் ஏமாற்றி மடாதிபதிகளிடம் பணம் வாங்கவே அல்லாமல் வேறல்ல.
நமது ஊரில் ஒரு பார்ப்பனக் கிழ வக்கீலிருந்தார். அவர் மேஜிஸ்ட் ரேட் வீட்டிற்குப் போய் தனியாய் தன்னைப் பற்றி கொஞ்சம் கவனித்துக் கொள்ளும்படி கெஞ்சுவார். மேஜிஸ்ட்ரேட் என்னய்யா செய்யச் சொல்லு கிறீர் என்று கேட்டால் “எஜமானர் செய்கிறபடி செய்து கொள்ளுங்கள். ஆனால் என் கட்சிக்காரனிடம் தாங்கள் தீர்ப்பு சொல்லுகிறபோது இந்த கேசு இன்னமும் அதிகமாக தண்டிக்க வேண்டும். உங்கள் வக்கீலுக்காக இவ்வளவோடு விட்டேன்” என்று சொல்லி விடுங்கள். அதுவே போதும் நான் பிழைத்துக்கொள்வேன் என்று சொல்லுவார். அதுபோல் மந்திரி இடம் போய் கெஞ்சி இப் பார்ப்பனர்கள் பிழைக்க வழி தேடிக்கொண்டார்கள். மற்றபடி சட்டத்திற்கு ஒன்றும் ஆபத்து இல்லை. ஆனால் உண்மையான மத பரிபாலனத்திற்கு இந்த சட்டம் போதாது என்பதும் இன்னமும் பலமான சட்டம் செய்ய வேண்டும் என்பதும் நமது கோரிக்கை. இந்த மந்திரி சபை கலைந்தோ அல்லது இந்த சட்டசபை கலைக்கப் பட்டோ மறுபடி கூடும் சபைகளில் அதுவும் கண்டிப்பாய் நடைபெறுமென்றே நினைக்கிறோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 30.01.1927