வாசகர்களிடமிருந்து

சுயநிர்ணய உரிமை

“ இந்தியாவில் சுயநிர்ணய உரிமை கோருவது குற்றமா?” என்ற கட்டுரை பல உண்மைகளை வெளிச்சப்படுத்தியுள்ளது; இந்தியாவின்அரசியல் சட்டம் இது குறித்து மவுனம் சாதித்தாலும் உச்சநீதிமன்றம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலங்களைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கில் வழங்கிய தீர்ப்பின்படி இந்தியாவின் ஒரு பகுதியை பிரித்துக் கொள்வதற்கான உரிமையையும் உறுதிப்படுத்தியிருப்பதை கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. உண்மையில் பிரிட்டிஷ் ஆட்சியில் தான் இந்தியா என்பதே உருவானது. இந்தியாவின் பெரும்பகுதி பிரதேசங்களை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்தது முகலாயமன்னர் அவுரங்கசீப் தான்.

கி.பி.1707ல் அவர் இறந்தவுடன் மொகலாயப் பேரரசில் அடங்கியிருந்த அனைத்து நாடுகளும் சுதந்திரநாடுகளாகி விட்டன. அனைத்து இந்தியத் தலைமை ஒன்று இல்லாத நிலையில் அந்த வெறுமையை பிரிட்டிஷார்தந்திரமாகப் பயன்படுத்தி நாடு பிடிக்கத் தொடங்கினர். இதைத்தான் “18ம் நூற்றாண்டில்உருவானஅகில இந்திய தேசியம் ஆங்கிலேயேரின் துப்பாக்கி முனையில் உருவாக்கப்பட்டதாகும்“ என்று வரலாற்றுப் பேராசிரியர் கே.எம்.பணிக்கர் கூறுகிறார். உண்மையில் இந்தியாவும் அதற்கு “மத்திய அரசு” என்று ஒன்றும் உருவானது.

1773ம் ஆண்டில் பிரிட்டிஷார் கொண்டு வந்த “ஒழுங்குமுறைச் சட்டத்தின்” கீழ் தான் வங்காள மாநிலத்தின் ஆளுநராக இருந்தவருக்கே சென்னை, பம்பாய் மாகாணங்களை நிர்வகிக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டு “ கவர்னர் ஜெனரல்” ஆக்கப்பட்டார். அவர் மேலும் நான்கு நிர்வாக உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டு “கவர்னர் ஜெனரல் குழு” என்ற ஒன்றை உருவாக்கிக் கொண்டு மத்திய அரசு என்ற ஒற்றை ஆதிக்க அமைப்பை உருவாக்கிக் கொண்டனர்.அதுவரை தனிநாடுகளாக இயங்கி வந்த நாடுகளின் அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. அய்.நா ஏற்றுக் கொண்டுள்ள “சுயநிர்ணயஉரிமை”க்கோட்பாடுஇந்தியாவுக்கு பொருந்தாது என்பதிலிருந்தே இங்கே நடப்பது ஜனநாயகமல்ல; பார்ப்பன நாயகம் என்றுபெரி யார் கூறியதுஎவ்வளவுசரியானகருத்துஎன்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

-மு.தன்மானி. தஞ்சை

 

 

“ஹோமக் குண்ட புகை உடலுக்கு நல்லது” என்று பார்ப்பனர்கள் செய்யும் பிரச்சாரத்துக்கு நல்ல மறுப்பு நக்கீரன் எழுதிய கட்டுரை; புகையிலேயே நல்ல புகை, கெட்ட புகை என்று கிடையாது. ஓமகுண்டப் புகையில் ஒரு வேளை தீமைகள் இருந்தாலும் மந்திரங்கள் உச்சரிக்கப்படும் போது அத்தீமைகள் விலகி புகை புனிதமடைந்து விடுவதாக பார்ப்பனர்கள் அறிவியல் விளக்கம் தருவதை கட்டுரை விளக்கி கூறுகிறது.அண்மையில் சென்னை தியாகராயர் நகர் பகுதியில் “சென்னை சில்க்ஸ் “ ஜவுளி மாளிகை தீ விபத்துக்குள்ளான போது கடும் புகை சூழ்ந்தது. மக்கள் பாதிப்படைந்தார்கள். அந்தப் பகுதியில் வாழும் மக்களே வீட்டைவிட்டு வெளியேறும் நிலை வந்தது. வேத புரோகிதர்களை அழைத்து அங்கே வேத மந்திரங்களை ஓதச் சொல்லி, கெட்ட புகையை நல்ல புகையாக மாற்றியிருக்கலாமே! ஏன் எந்த வைதீகப் பார்ப்பனரும் இதற்கு முன்வரவில்லை?

-நா.கண்மணி, திருவரங்கம்

 

இந்தியாவின் முதல் “நாத்திக மாநாடு”

தமிழர்களின் கடவுள் மறுப்பு மரபு குறித்து முனைவர் க.நெடுஞ்செழியன் எழுதிய கட்டுரையில் 1933ல் நடந்த நாத்திகர் மாநாடு குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது. 1933 டிசம்பர் 31ம் தேதி அந்த மாநாடு சென்னை எழும்பூரில் உள்ள ஒயிட்ஸ் நினைவுக் கூடத்தில் சிங்கார வேலர் தலைமையில் நடந்தது. மாநாட்டின் தலைவர் சிங்கார வேலர், அப்போது அவருக்கு வயது 73. மாநாட்டில் பங்கேற்று “நான் ஒரு நாத்திகன்” என்று அறிவித்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கு வயது 27. இந்தியாவிலேயே முதன் முதலாக “நாத்திகர் மாநாடு” என்ற பெயரில் நடைபெற்ற முதல் மாநாடு அதுதான். சிங்கார வேலர், எஸ்.இராமநாதன், குத்தூசி குருசாமி, ஜீவானந்தம், பொன்னம்பலனார் ஆகியோர் முன்னின்று இம்மாநாட்டை ஏற்பாடு செய்தனர். அதிர்ச்சியடைந்த கத்தோலிக்கர்களும், பார்ப்பனர்களும் மாநாட்டுக்கு தடை போட முயற்சிகளை மேற்கொண்டனர். தடைகளைத் தகர்த்து நடந்த அம்மாநாட்டில் “நாத்திகர் பதிவேடு” ஒன்று வைக்கப்பட்டது. அதில் முதலாவது நாத்திகராக மா.சிங்கார வேலர், இரண்டாவதாக ப.ஜீவானந்தம், மூன்றாவது குருசாமி தொடர்ந்து குஞ்சிதம் குருசாமி , பாரதிதாசன், சாமி.சிதம்பரனார், பொன்னம்பலனார், சி.டி.நாயகம், கே.டி.கே.தங்கமணி, கே.எம்.பாலசுப்ரமணியன், மாயவரம் கி.நடராசன், மன்னார் குடி கே.ஆர்.ஜி.பால் உள்ளிட்ட பலரும் நாத்திகராக பதிவு செய்து கையப்பமிட்டனர். அப்போது பெரியார் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தார். மாநாட்டின் இறுதியில் சிங்காரவேலர் குருசாமி, ஜீவானந்தம் இருவரையும் தனது இருபக்கத்தில் நிற்க வைத்து “ எனக்குப் பிறகு எனது வாரிசாக குருசாமியும், ஜீவானந்தமும் இருப்பார்கள்” என உணர்ச்சி பொங்கக் கூறினார். “புரட்சி” இதழ் (07.01.1934) இந்த தகவல்களை பதிவு செய்துள்ளது.

-ப.திருநாவுக்கரசு. பாபநாசம்

 

 

ஒரே ஒட்டு வித்தியாசத்தில்

இந்தியாவின் நிர்வாக மொழியாக ஒரே ஓட்டு வித்தியாசத்தில் தான் இந்தி இடத்தைப் பிடித்துக் கொண்ட வரலாற்றை “நிமிர்வோம்“ – பதிவுசெய்தது மிகவும் சிறப்பு; இளைஞர்கள் அறிய வேண்டிய வரலாற்றுத் தகவல்; இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையே நாட்டுக்கு உண்மைக்கு மாறான கருத்தைத் தான் கூறுகிறது.” இந்திய மக்களாகிய நாம் நமது அரசமைப்புச் சபையில், இந்த அரசமைப்பை இயற்றி, அங்கீகரித்து அதனை நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்“ என்கிறதுஅந்த முகப்புரை. உண்மையில் இந்தியாவில் வயது வந்த அனைவருக்குமான வாக்குரிமை வழங்கப்பட்டு அவர்களால் தேர்தெடுக்கப்பட்டது அல்ல இந்திய அரசியல் நிர்ணயசபை படித்தவர்கள், சொத்துரிமையுள்ளவர்கள் என்று 100க்கு 14 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து தேர்தெடுக்கப்பட்ட ஒரு அரசியல் நிர்ணயசபை உருவாக்கிய சட்டத்தை இந்திய மக்கள் அனைவரும் தங்களுக்கு தாங்களாகவே உருவாக்கிக் கொண்டதாகக் கூறுவதே ஒரு மோசடி.

அரசியல் சட்டத்தை உருவாக்கிய பிறகாவது இந்த சட்டத்தை முன்வைத்து மக்களிடம் ஒரு வாக்கெடுப்பை நடத்தினார்களா என்றால் அதுவும் இல்லை. பாகிஸ்தான் தனிநாடு பிரிவினை நடந்ததற்குப் பிறகு, எஞ்சியுள்ள பகுதியை வலிமையான மத்திய அரசாக உருவாக்கிட வேண்டும் என்ற வெறியோடு வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை தந்து அரசியல் சட்டத்தை உருவாக்குவதாக காங்கிரஸ் தந்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு விட்டு சட்டத்தை உருவாக்கிக் கொண்டார்கள் என்பதே உண்மை. நிர்ணய சபையில் இடம் பெற்றிருந்த பழமைவாதிகளிலும் மதவாத பார்ப்பனிய குரல்தான். நிர்ணய சபையில் மேலோங்கி நின்றது.

அரசியல் நிர்ணய சபை சட்டத்தை உருவாக்க 13 குழுக்களை அமைத்தது. இதில் வரைவுக் குழுவுக்கு மட்டுமே அம்பேத்கர் தலைவர். அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த 6 பேரில் 4 பேர் பார்ப்பனர்கள். அந்தக் குழுவிலும், ஏனைய 12 குழுக்களிலும் இடம் பெற்றிருந்த கே.எம்.முன்ஷி என்ற பார்ப்பனர். சட்ட உருவாக்கங்களில் தனது மேலாதிக்கத்தை செலுத்தி பார்ப்பனிய மதவாத திசையில் சட்டத்தை மாற்றுவதில் தீவிர கவனம் செலுத்தினார். ”தீண்டாமை”சட்டப்படி ஒழிக்கப்பட்டது என்று கூறிவிட்டு தீண்டாமைக்கு அடிப்படையான ஜாதியைக் காப்பாற்றுவதை அடிப்படை உரிமையாக்கி விட்டார்கள். இதன் காரணமாகத் தான் பெரியார் இது பார்ப்பனர்களால், பார்ப்பன மேலாண்மையைக் காப்பாற்ற பார்ப்பனர்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டம் என்றார். இந்த பார்ப்பன ஆதிக்க வட்டத்துக்குள் சிக்கியஅம்பேத்கர் -சுதந்திரமாக செயலாற்ற முடியாத நிலையில் தான் இந்த சட்டத்தை எரிப்பதில் நானே முதல் நபராக இருப்பேன் என்றுஅம்பேத்கரே கூறும் நிலை வந்தது. “நிமிர்வோம்“ இந்த சமூக அரசியல் வரலாறுகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் இதழாக வெளிவர வேண்டும்.

-எம்.மணிவண்ணன், தூத்துக்குடி

நிமிர்வோம் ஜுன் 2017 இதழ்

You may also like...