வாசகர்களிடமிருந்து…

 

மே 2018 ‘நிமிர்வோம்’ இதழில் இடம் பெற்றிருந்த ‘சுயமரியாதை-சமதர்மக் கட்டுரைகள்’ மிகவும் சிறப்பு. ‘பணக்காரன்-ஏழை’ முரண்பாடுகளைக் கோட்டையாக இருந்து பாதுகாப்பதே இந்தியாவின் ‘மேல்ஜாதி-கீழ்ஜாதி’ அமைப்புதான் என்று 1931ஆம் ஆண்டிலேயே பெரியார் எவ்வளவு சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்பது பெரும் வியப்பைத் தருகிறது.

இந்தியாவில் ‘வர்க்கப் போராட்டம்’ என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு ஜாதிய ஒடுக்குமுறை காரணமாக நடக்கும் மோதல்களுக்கு முகம் கொடுக்கும் காலகட்டத்திலேதான் இருந்து கொண்டிருக்கிறோம்.

“நான் ஏன் நாத்திகனானேன்?” என்ற பகத்சிங் நூலை தமிழில் மொழி பெயர்த்த ப. ஜீவானந்தம் மீது தேசத் துரோக வழக்கை அன்றைய பிரிட்டிஷ் அரசு போட்டபோது அதற்கு ‘மன்னிப்புக் கேட்டு’ எழுதச் சொன்னது நான்தானே தவிர, ப.ஜீவானந்தம் அல்ல என்று பெரியார் எழுதியதைப் படித்தபோது அவரது நேர்மை வியக்க வைத்தது. இத்தகையத் தலைவர்களை இப்போது பார்க்க முடியுமா?

– தமிழ்நேசன், திருச்சி

ஜாதி-மதப் பண்பாட்டை எதிர்க்காமல், ஆணாதிக்க எதிர்ப்பு மட்டுமே சமத்துவத்தை உறுதி செய்யாது என்ற ஜெயராணியின் கட்டுரை ஆழமாக சிந்திக்க வைத்தது. ஆணாதிக்க எதிர்ப்போடு பெண்ணுரிமை முடிந்து விடுவதில்லை.

கடவுள், மத, ஜாதி நம்பிக்கைகளிலிருந்து விடுபடாமல், நகைகளும் அலங்காரங்களும் தங்களுக்கு ‘சமூக அந்தஸ்தை’ உருவாக்குகிறது என்ற போலி நம்பிக்கைகளிலிருந்து விடுவித்துக் கொள்ளாமல் பெண்கள் சமத்துவத்தை எட்ட முடியாது என்பதையும் கல்வி, பொருளாதார அரசியல் தளங்களில் பெண்கள் பெற்றுள்ள பயன் அவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கலாமே தவிர, சமத்துவத்தைப் பெற்றுத் தர முடியாது என்பதையும் மிகச் சரியாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் ஜெயராணி.

காலத்துக்குத் தேவையான கட்டுரை; பெண் விடுதலையை விரும்பும் ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது இக்கட்டுரை.

– பகுத்தறிவாளன், தஞ்சை

தமிழகத்தில் வைகுண்ட சாமிகள் நடத்திய வைதிக எதிர்ப்பு இயக்கத்தின் வரலாற்றுச் சுருக்கத்தை வெளியிட்ட ‘நிமிர்வோம்’ இதழுக்கு நன்றி. உண்மையில் இப்படி ஒரு இயக்கம் நடந்ததே இளைய தலைமுறைக்குத் தெரியாது. வைதிகத்துக்கு எதிராக எந்த சமூகத்துக்காக ‘அய்யா’ (வைகுண்டசாமி) போராடினாரோ, அதே சமுதாய மக்களில் பலர் மதவாத சக்திகளுக்கு ஆதரவாக இருப்பது வேதனை தருகிறது.

– கணேசன், தூத்துக்குடி

‘நிமிர்வோம்’ மே மாத இதழில் வெளிவந்த அனைத்து கட்டுரைகளுமே சிறப்பு. ஆனால் இதழ் பரவலாகக் கிடைப்பதில்லையே என்பதுதான் குறை. தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி பேசிய ஒரு கூட்டத்துக்குப் போகும்போதுதான் இதழை வாங்கினேன். இதழ் பரவலாக சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

– மணியன், தர்மபுரி

நிமிர்வோம் ஜுன் 2018 இதழ்

You may also like...