வாசகர்களிடமிருந்து…

‘செம்மொழித் தமிழ் மீது நஞ்சு கக்கும் நாகசாமி’ தலைப்பில் வெளி வந்த இரண்டு தொடர்களும் நாகசாமிக்கு மறுப்பு என்பதையும் தாண்டி மொழியியல் குறித்த சிறப்பான தகவல்களைக் கொண்டிருந்தன. ‘மனு நீதிக்கும் திருக்குறளுக்கும்’ உள்ள வேறுபாட்டை நாவலர் நெடுஞ்செழியன் நூல்களிலிருந்து ஓ. சுந்தரம் எடுத்துக் காட்டியிருப்பது சிறப்பு. ‘பிராமி’ எனும் பண்டைய எழுத்து வடிவ முறையை ‘பிராமணர்கள்’ தான் கண்டுபிடித்தார்கள் என்றால், தங்கள் வேத மொழியான சமஸ்கிருதத்துக்கு, ஏன் தனியாக எழுத்து வடிவத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்விக்கு பார்ப்பனர்கள் என்ன பதிலைக் கூறுவார்கள்?

– மலர்விழி, மஞ்சக்குப்பம்

மருத்துவமனையிலிருந்து பெரியார் பொதுக் கூட்டம் பேசச் சென்ற நிகழ்வை அவரது உதவியாளர் புலவர் இமயவரம்பன் பதிவு செய்திருந்ததைப் படித்தேன். இப்படியும் ஒரு தலைவரைப் பெற்றிருந்தோமே என்ற பெருமித உணர்வுதான் மேலிட்டது. பார்ப்பனர்களை எதிர்த்த போராட்டத்தில் பெரியார் வெற்றி பெற்றதற்கு அவர் பொது வாழ்க்கையில் உறுதியாகப் பின்பற்றிய நேர்மை, பொது ஒழுக்கம், ஒளிவு மறைவு அற்ற, இராஜ தந்திரம் இல்லாத வெளிப்படையான அணுகுமுறைகள் தான். பெரியார் தொண்டின் அவசியத்தை அக்காலத்தில் அவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்களும் புரிந்து வைத்திருந்ததையும் இக்கட்டுரையால் உணர முடிந்தது.

– அருண்குமார், இராயப்பேட்டை

‘இராமன் பிறந்த இடம் அயோத்தியா?’ என்ற எட்வின் பிரபாகரன் கட்டுரை ஏராளமான வரலாற்றுத் தகவல்களை முன் வைத்திருக்கிறது. புத்த மார்க்கம் செழித்து வளர்ந்த ‘சாகேதா’ என்ற பகுதி தான் புஷ்ய மித்திர சுங்கன் ஆட்சி காலத்தில் அழிக்கப்பட்டு, அயோத்தியாக்கப்பட்டு, பாசர், காளிதாசர் போன்ற பார்ப்பன கவிஞர்கள் பொய்யான சமஸ்கிருதப் பாடல்களை உருவாக்கி சாகேதா நகரத்தை ‘அயோத்தியாக’ மாற்றினார்கள் என்ற வரலாற்று உண்மையை கட்டுரை ஆதாரங்களுடன் பதிவு செய்திருக்கிறது.

– மு. கண்ணன், திருச்சி

இந்து பார்ப்பனிய பயங்கரவாதத்தோடு, ‘அய்.எஸ்.அய்.எஸ்.’ மத பயங்கரவாதத்தையும் அம்பலப் படுத்திய ‘நிமிர்வோம்’ இதழுக்குப் பாராட்டு. பயங்கரவாதம் எந்த மதத்திலிருந்து வெளிப்பட்டாலும் அதைக் கண்டித்தேயாக வேண்டும். இந்தியாவில் புறக்கணிப்புக்கு உள்ளாகும் இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுப்பதில் எவ்வளவு நியாயம் இருக்கிறேதா, அவ்வளவு நியாயம் இஸ்லாமியர்களுக்கு கடும்பாதிப்புகளை உருவாக்கி வரும் ‘அய்.எஸ்.அய்.எஸ்.’ பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும் இருக்கிறது.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளால் இப்போது இலங்கை அமைச்சரவையில் உள்ள இஸ்லாமிய அமைச்சர்கள் அனைவருமே பதவி விலகும் நிலை உருவாகிவிட்டது. சிங்களப் பேரினவாதம் இதில் வெற்றி பெற்றுவிட்டது. இந்தியாவின் பார்ப்பனிய சக்திகளும் வரவேற்று மகிழும் நிலை உருவாகிவிட்டது.

இலங்கை இஸ்லாமிய பெண் எழுத்தாளர்கள் துணிவுடன் பயங்கரவாதத்தை எதிர்த்து எழுதியிருப்பதை யும் பாராட்டி வரவேற்க வேண்டும்.

– டி. முரளிதரன், செவ்வாய்ப்பேட்டை

‘அழகர்சாமி’யின் வரலாறு இளைய தலைமுறைக்கு தெரியாத செய்திகள். சுயமரியாதைப் போராட்டக்களத்தில் நின்ற வீரர்களின் வரலாறுகளை ‘நிமிர்வோம்’ தொடர்ந்து வெளியிட வேண்டும்.

-பாஸ்கரன், நெல்லை

கோட்சேக்களோடு பார்ப்பன பயங்கரவாத இயக்கம் முடிவடைந்துவிடவில்லை. சனாதன் சன்ஸ்தா, பஜ்ரங்தள், ஹிந்து யுவவாஹினி, அபினவ் பாரத், போன்சாலா மிலிட்டரி ஸ்கூல் என்று பல்வேறு போர்வையில் இயங்கி வருவதை வரலாற்றுப் பின்னணியிடுன் ஆங்கில நூலை ஆதாரமாகக் கொண்டு சிறப்பாக விளக்கியிருந்தார் துரை.

– செந்தில், சென்னை-18

 

நிமிர்வோம் ஜுன் 2019 மாத இதழ்

You may also like...