வாசகர்களிடமிருந்து…

திராவிட இயக்கங்களின் பகடி இலக்கியங்கள் குறித்து பேராசிரியர் ராஜ் கவுதமன் கட்டுரை மிக அருமை. இத்தகைய சிறப்பான கட்டுரையை வெளியிட்ட ‘நிமிர்வோம்’ இதழுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

“உன்னதமானவற்றை உன்னதமில்லாதவர்கள் கேலி செய்து சிரிக்கிறபோது, உடன் நிகழ்ச்சியாக உன்னதங்கள் தலைகீழாகப் புரட்டப்படுகின்றன. சர்வ வல்லமை பெற்றவையாக உள்ளவை இந்தப் பகடியின் மூலமாக சாமானியமானவையாக ஆக்கப்படுகின்றன. உயர்ந்தவற்றின் அசாதாரணத் தன்மைகள் அகற்றப்படுகின்றன. மாற்றத்துக்காகக் குரலிடும் சாமானியர்களின் மருகிப்போன தன்னிலைகள் களிப்படைகின்றன. மனச்சுமை, குத்தல், குற்ற உணர்வு, பயம் எல்லாம் கழன்று, தன்மானமும் சுயமரியாதையும் ஏற்படுகின்றன. குழு உணர்வும் போர்க் குணமும் இணக்கமும் கைகூடுகின்றன. ………………

இந்துப் பண்பாட்டில் சீரியஸானவையாகக் கருதி, மதிக்கப்பட்ட அனைத்தையும் அனைவரையும் நகைப்புக் குள்ளாக்கும் கலகத்தைத் திராவிட இலக்கியமே தொடங்கி வைத்தது. இதற்கு முன் தமிழகத்தில் சித்தர்கள் இதனைச் செய்தார்கள்தான். ஆனால், இவர்களின் பகடி, மதத்துக் குள்ளேயே மற்றொரு மாற்று மதத்தை உண்டாக்கும் இலக்கினையே கொண்டிருந்தது. ஆனால், திராவிட இலக்கியத்தின் பகடி, இந்து மதத்தையே நிர்மூலம் ஆக்கும் இலக்கைக் கொண்டிருந்தது, ஆட்சி அதிகாரம் என்ற மதத்தைக் கைப்பற்றும் வரை” என்று சிறப்பாக குறிப்பிட் டுள்ளார் கட்டுரை ஆசிரியர்.

– கனல்மதி, திருப்பூர்

‘வரலாற்றின் வரலாறு’ என்ற தலைப்பில் இரண்டே பக்கத்தில் மனித குல வரலாற்றைச் சுருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார், எழுத்தாளர்  நோவா ஹராரி, தனது ‘சேப்பியன்ஸ்’ நூலில். ‘சேப்பியன்ஸ்’ உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நூல். அதன் தமிழாக்கமும் வெளி வந்துள்ளது. மதம், ஜாதி, கடவுள் அத்தனையும் ‘புனைவுகளே’ என்பதை மறுக்க முடியாத ஆதாரங்களுடன் விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட அந்த நூலை ‘நிமிர்வோம்’ தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது; பாராட்டுகள்!

– ஏதி, சென்னை

சமூக அவலங்களை அண்ணா எப்படி இலக்கிய மாக்கினார் என்பதற்கு சான்று ‘கருப்பண்ணசாமி’ யோசிக்கிறார் ‘சிறுகதை’, அண்ணாவின் பகுத்தறிவு சிந்தனைகளை எழுத்துகளை தி.மு.க. போன்ற கட்சிகளே பரப்ப முன் வருவது இல்லை என்பது வேதனை. இப்படியே போனால் திராவிட இயக்கத்துக்கு பகுத்தறிவு சிந்தனைகளோ கருத்துகளோ கிடையாது என்ற நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை. தி.மு.க.வில் உள்ள ஜாதி, மத, கடவுள் மறுப்பாளர்கள் கவலை யோடு இது குறித்து சிந்திக்க வேண்டும். இந்த கருத்துகள் நீர்த்துப் போகும் போது தமிழ் மண், அதன் தனித்துவத்தை இழந்து நிற்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

– கார்த்திக், திருச்செங்கோடு

பெரியாரை தமிழின் எதிரியாகப் பேசி வரும் சில தமிழ்த் தேசியத் தலைவர்களுக்கு பெருஞ்சித்திரனாரின் கட்டுரையே சரியான பதில்.

“தமிழ் மொழியையும் அவர் அறிவியல் கண்ணோட்டத் துடன் தான் அணுகினார். அது ஒரு பழைமையான மொழி என்பதற்காகவோ, சிறந்த இலக்கண இலக்கியச் செழுமை வாய்ந்தது என்பதற்காகவோ, அவர் அதைப் பாராட்டவில்லை.

அதில் உள்ள பாட்டு இலக்கியங்களையும், கதை இலக்கியங்களையும், வேறு சில கூறு களையும் மக்கள் மனநலன் அறிவுநலன் இவற்றுக்குப் பயன் தரும் வகையில் ஆராய்ந்தார். அவற்றிலுள்ள மூட நம்பிக்கைகளையும் மக்களுக்கு உதவாத பழமைக் கருத்துகளையும் அவர் ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவற்றைக் கடுமையாகச் சாடினார். பொதுவாக மக்கள் வாழ்க்கைக்குப் பயன் தராத எந்த மொழிக் கூறையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் தமிழ்மொழி புலவர்கள் பாங்கிலேயே அடைபட்டுக் கிடந்து, பொதுமக்கள் நிலைக்கு எளிமையாக பயன்படுத்த முடியாமல் இருப்பதை அவர் எண்ணி வருந்தினார். அதை அறிவியல் சிந்தனையுடன் முன்னேறுவதற்கு வாய்ப்பில்லாமல் சிறைபடுத்தி வைத்திருந்த பழமை விரும்பும் புலவர்களைக் கண்டித்தார். அவர்களுக்கு உணர்வில் உறைக்கும்படியாகத் தமிழ் மொழியை ‘ஒரு காட்டுமிராண்டி மொழி’ என்றும் கூறினார்” என்று பாவலரேறு மிகச் சரியாக மதிப்பிட்டிருக்கிறார்.

-தபசி. குமரன், சென்னை

அறிவியல் பார்வைக்கு முன் மதங்களின் கற்பனைகளை நியாயப்படுத்தவே முடியாது; இஸ்லாம் மதமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இஸ்லாம் மதத்தின் அறிவியலுக்கு எதிரான கருத்துகளை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது, ‘நிமிர்வோம்’ வெளியிட்ட கட்டுரை.

– ஜின்னா, கோவை

நிமிர்வோம் ஜுலை 2019 இதழ்

You may also like...