பத்திரப்பதிவு இலாக்காக்களில் மக்களுக்கு சுயராஜ்ஜியக் கக்ஷியார் செய்த அக்கிரமம்
சென்ற வாரத்தில் சென்னை சட்டசபை வரவு செலவு விவாதத்தின் போது பத்திரப்பதிவு இலாக்கா சம்மந்தமாக ஜனங்களுக்கு இப்போது இருக்கும் கஷ்டத்தை நீக்கும்படி அதாவது அதிகமாயிருக்கும் கட்டண விகிதத்தை குறைக்கும் படிக்கும் முக்கியமாக வெளியில் வர சௌகரியப் படாத பெண்களின் சௌகரியத்தை ஒட்டியும் காயலா முதலியவைகளால் அவஸ்த்தைப் பட்டுக்கொண்டு படுத்தப் படுக்கையில் கிடக்கும் ஏழை குடியானவர்களுக்கும் பத்திரம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமானால் ரிஜிஸ்டர் கட்டணம் முன்னையை விட இப்போது சரிபங்கு அதிகமாய் விட்டதால் அதாவது சப் ரிஜிஸ்ட்ரார் வீட்டுக்கு வருவதற்கு முன்னால் 10 ரூ. கட்டண மாயிருந்தது. இப்போது 20 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதை குறைத்து ஜனங்களுக்கு சவுகரியம் செய்யும்படி ஒரு தீர்மானம் ஜஸ்டிஸ் கக்ஷியாரால் கொண்டு வரப்பட்டது. இதை அறிந்து சுயராஜ்யக் கக்ஷியார் இப் பெருமை ஜஸ்டிஸ் கக்ஷிக்கு விடக்கூடாது என்பதாக தாங்களும் இந்த விஷயத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்ததாய் ஜனங்களுக்கு காட்டுவதற்காக வேஷத்திற்காக ஒரு தீர்மானம் அனுப்பி யிருந்தார்கள். அக்ராசனர் சுயராஜ்யக் கக்ஷியை சேர்ந்தவராயிருப்பதால் இம் மாதிரி தீர்மானங்கள் சுயராஜ்யக் கக்ஷியார் பேரில்தான் வெளிவரக் கூடும் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்காது. ஆதலால் ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டியார் பேரால் தீர்மானம் விவாதிக்கப்பட்டது.
ஜஸ்டிஸ் கக்ஷி அங்கத்தினர்கள் அதிக கட்டணத்திலுள்ள கஷ்டங் களை எல்லாம் நன்றாய் எடுத்துச்சொல்லி வாதாடினார்கள். ஆனால் கடைசியாய் ஓட்டு எடுக்கும்போது சுயராஜ்யக் கக்ஷியார் வெளியே ஓடி விட் டார்கள். இதன் பலனாய் அத்தீர்மானம் தோல்வி அடைந்துவிட்டது. ஏழை களுக்கு நன்மை செய்யும் சுயராஜ்யக் கக்ஷியாரின் யோக்கியதையை உணர புத்திசாலிகளுக்கும் யோக்கியர்களுக்கும் இதைவிட வேறு சாக்ஷியம் தேவை யில்லை என்றே சொல்லுவோம்.
குடி அரசு – கட்டுரை – 27.03.1927