சமாதானம்
சென்ற வாரம் ‘எது வீணான அவதூறு’ என்னும் தலையங்க முடிவில், ‘மற்ற விஷயங்களைப்பற்றி அடுத்த வாரம் எழுதுகிறோம்’ என்று எழுதி யிருந்தோம்.
ஸ்ரீமான் ராமநாதன் அவர்கள் கடிதம் கிடைத்து. அவர்களை நேரிலும் பார்த்து பேச நேர்ந்தது. அவைகளில் சம்பாஷணைகளின் தோற்றம் எப்படி இருந்தாலும் அதைப்பார்த்தவுடன் மற்றவர்களுக்கு எப்படி படக்கூடுமோ அந்த உணர்ச்சியோடு கூடி அந்த சம்பாஷணை நடைபெறவில்லை என்று சொன்னார். உதாரணமாக ‘ஊழியன்’ பத்திரிகையில் கண்ட சம்பாஷணையில் ‘ பிராமணர்களைக் காட்டிலும் தகுதிபெற்று கதர்வேலை செய்ய முன்வரும் பிராமணரல்லாத தொண்டர்களைத்தான் ஏற்றுக் கொள்ளுவதை முறையாக வைத்திருக்கிறேன்’ என்று காணும் வாசகம் அம்மாதிரி கருத்தோடு நான் சொல்லவில்லையென்றும் பிராமணர்களைவிட பிராமணரல்லாத தொண்டர் களைத்தான் ஏற்றுக்கொண்டு வந்திருப்பதாகச் சொன்னதாகவும், இனியும் அம்மாதிரி வழக்கத்தையே கையாளப்போவதாகவும் சொன்னார் என இம் மாதிரி இன்னும் சில விஷயங்களையும் குறிப்பிட்டார்.
அன்றியும் முக்கியமான விஷயங்களில் நமது கொள்கைக்கு அவரது உள்ளத்தில் எவ்வித மாறுபாடும் இருப்பதாய்க் காணப்படவில்லையாத லாலும் அதை அவ்வளவோடு நிறுத்திவிட்டோம்.
குடி அரசு – குறிப்புரை – 16.10.1927