சத்தியமூர்த்தியும் கதரும்
சில மாதங்களுக்கு முன்னர் சேலத்திலே கதர் சாலையைத் திறந்து வைத்த சென்னை டாக்டர் சி. நடேச முதலியார் அதுசமயம் கதராடை அணிந்து வராமல் சுதேச பட்டுடைகளைத் தரித்திருந்ததைப்பற்றி பிராமண சிகாமணியான ஸ்ரீமான் சத்தியமூர்த்தி எள்ளி நகையாடினார். அதாவது, டாக்டர் முதலியார் மில்லில் நெசவான பட்டாடை தரித்துக்கொண்டு கதர் சாலையைத் திறந்து வைத்ததானது, கொள்கைக்காக நெற்றியில் விபூதியும் வயிற்றுப் பிழைப்புக்காக வயிற்றில் நாமமும் தரித்திருப்பவன் கதையாக யிருக்கிறதென்று கூறினார். அதற்கு டாக்டர் முதலியார் இந்தியாவில் கையி னால் நெசவானாலும் ஆலை நெசவானாலும் இரண்டையும் சுதேசிய மென்றே தாம் கருதுவதாகவும் ஆகையால் சுதேசியத்தை ஆதரிக்க வேண்டியதே எங்கள் கொள்கை என்றும் உள்ளதை வெளிப்படையாகக் கூறினார்.
ஆனால் சத்தியத்திற்கே உழைக்கிறோமென்று சொல்லும் சத்திய கீர்த்தியின் பிள்ளைகளான சத்தியவந்தர் குலத்திலுதித்த நித்தியங்கத்தி “ஸ்ரீமான் சத்தியமூர்த்தி புதுவருஷத் திருநாளன்று திருவல்லிக்கேணி கடற்கரையில் நடந்த பெருங்கூட்டத்தில் முற்றிலும் பரதேசி மயமாய் விளங் கினார்” என்று “லோகோபகாரி”யில் பாரி எழுதியிருக்கிறார்.
இப்படியிருக்க, கொள்கைக்காகத் திருநீறும், பிழைப்புக்காக திரு நாம மும் போட்டுக் கொண்டலையும் பாசாண்டி என இப்பொழுது ஸ்ரீமான் சத்திய மூர்த்தியை அழைப்பதா? அல்லது டாக்டர் முதலியாரை அழைப்பதா? ஆம். பிராமணர்கள் செய்தால் அது மருந்துக்காகச் செய்ததாய்ப் போய் விடுகிறது. பிராமணரல்லாதார் எது செய்தாலும் அது வயிற்றுக்கில்லாமல் செய்தா னென்றாகிவிடுகிறது. ஏனென்றால் செல்வாக்குள்ள பத்திரிகைகள் பிராமணர் கைவசம் சிக்கியிருக்கிறது. நமது ஜனங்களும் அதையேதான் பார்க்கிறார்கள். லோகோபகாரியையும், நாடார்குல மித்திரனையும், குடியரசையும் பார்த்தால் அது தேசத் துரோகமாய்விடும். ஏன் பிராமணர்கள் என்னதான் சொல்ல மாட்டார்கள்?
குடி அரசு – செய்தி விளக்கம் – 25.04.1926