சமாதானமும் வந்தனமும்
நமது “குடி அரசு” இரண்டு வாரம் நிறுத்தப்பட்டதைப் பற்றி அநேக ஆவலாதிகள் வந்தன. அவற்றில் ஒன்று இன்று யார் முகத்தில் முழித்தேனோ “குடி அரசு” வரவில்லையென்றும், மற்றொன்று “குடி அரசு” வராததால் இன்று முழுதும் சாப்பிட மனமில்லை யென்றும், மற்றொன்று “குடி அரசை” ஒழுங்காய் அனுப்புவதானால் அனுப்புங்கள் இல்லாவிட்டால் நிறுத்திவிட்டு என் பணத்தை திருப்பி அனுப்புங்கள், பத்திரிகை திங்கட் கிழமை தபால் நேரத்திற்குக் கிடைக்காவிட்டால் மனம் வருத்தப்படும் என்றும், ஒரு மகமதிய கனவான் மற்றொன்று இந்த ஒரு பத்திரிகையை ஒழுங்காய் நடத்த முடியா விட்டால் எப்படி உங்களை பிராமணரல்லாதார் பின்பற்ற முடியும், இது ஒன்றுதான் உள்ள நிலைமையை எழுதுவதால் அது கிடைக்கா விட்டால் மனது அவ்வளவு வருத்தப்படுகிறது என்றும், மற்றொருவர் திராவிடர்க ளுக்கு ஆசையிருக்கிறதே தவிர பிராமணர்கள் போல் காரியம் நடத்தத்தக்க சக்தியில்லை, வீணாய் அவர்களுடன் போட்டி போட்டு என்ன செய்வது, இந்த ஒரு சிறிய பத்திரிகையை சரியாய் நடத்தத் தங்களால் ஆகவில்லையே, வெறும் வாய்ப் பேச்சில் என்ன பலன் என்றும், இன்னும் பல விதமாகப் பலர் எழுதியிருக்கிறார்கள். இந்தக் குற்றங்களை அன்போடு ஏற்றுக் கொள்ளு கிறேன். ஆனால் நான் ஒருவன், ராஜீய உலகத்தில் எனக்கு சகாயம் செய்ய யாரும் தைரியமாய் வர பயப்படுகிறார்கள். வருவதானால் சர்க்கார் பயம், பிராமணர்கள் பயம் இவ்விருவரின் இடைஞ்சல்கள் இவைகளுக்குத் தயாரா யிருக்கவேண்டும். தபால் தகரார், ரயில்வே தகரார் அல்லாமலும் நானே பத்திரிகை முழுதும் எழுத வேண்டும். இவ்வளவும் இருப்பதோடு பண நஷ்டம் ஒரு புறம் அடைந்து வரவேண்டியிருக்கிறது. அல்லாமலும் வாரம் ஒரு தடவை வெளியூர்களுக்கு பிரசாரத்திற்கும் போகவேண்டும். ஒருநாள் பிரசாரத்திற்கு 3 நாள் மெனக்கேடு. அதாவது போக வர 2 நாள், பிரசாரம் ஒரு நாள். இவ்வளவு கஷ்டமும் பண நஷ்டமும் ஏற்படுவதைக் கவனியாமல் ஆவலாதிகள் மாத்திரம் ஏற்பட்டால் என்ன செய்யக்கூடும். இந்தத்தடவை கூட சொந்த அச்சுக்கூடம் ஏற்படுத்த முடியவில்லை. கோயமுத்தூரிலுள்ள ஸ்டார் பிரஸ் லிமிடெட் கம்பெனியார் தங்களிடம் மீதியாய் ஒரு டிரடிலும், ஒரு டிம்மி பிரஸும் ரிப்பேர் செய்து ஈரோட்டில் ஒரு பிராஞ்ச் ஏற்படுத்து வதாயும் அதற்கு வேண்டிய எழுத்துக்கள் முதலியதுகளில் தங்களுக்குப் போதுமானது போக பாக்கிக்கு மகா ஸ்ரீ சா.ராமசாமி நாயக்கர் போட்டுக் கொண்டு அந்தத் துகையை ஷேராக எடுத்துக் கொள்வதென்றும் முன் நாம் இங்கு கொடுத்த கூலியாகிய பாரம் 1- க்கு 4 ரூபாய் வீதம் கூலி போட்டு பத்திரிகையை ஸ்ரீமான் சா. ராமசாமி நாயக்கரைக் கொண்டே பத்திரிகை நடத்திக் கொடுப்பதாகவும் ஒப்புக் கொண்டதால் அந்தப் படி ஏற்பாடு செய்து இவ்வாரம் பத்திரிகை தொடங்கியிருக்கிறது. இன்னமும் சாமான்கள் சரியாய் வந்து சேரவில்லை. ஆனாலும் 2 வாரத்தில் பத்திரிகை அனுப்புவதாய் சொன்னபடிக்கு அவசரத்தில் உள்ள சாமான்களைக் கொண்டு ஏதோ ஒரு விதத்தில் இந்த வாரத்தில் வெளியாக்கிவிட்டோம். எல்லா சாமானும் காலத்தில் வருமென்று நினைத்து இவ்வாரம் 16 பக்கம் நெம்பர் போட்டு அச்சேறிய பின்பு சாமான்கள் வராததால் வழக்கம் போல் 12 பக்கமாகவே பத்திரிகை போடப்பட்டிருக்கிறது. ஈரோட்டில் பிராஞ்ச் வைத்த ஸ்டார் பிரஸ் லிமிடெட் கம்பெனியார் லாபத்திற்கு வைத்திருந்தபோதிலும் அதில் பங்கெடுத்துக் கொண்டு நமக்கு சரியாய் பத்திரிகை நடத்திக் கொடுப்பதாய் முன் வந்ததின் மேனேஜிங் டைரெக்டர் எனது மைத்துனர் ஸ்ரீமான் சா.ராமசாமி நாயக்கரவர்களுக்கும் நமது சார்பாகவும் “குடிஅரசு” சந்தாதாரர்கள் சார்பாகவும் வந்தனமளிக்கின்றோம்.
குடி அரசு – அறிக்கை – 18.04.1926