தொழிலாளர் இயக்கம்
தற்கால நிலைமை
தற்காலம் நமது நாட்டிலுள்ள தொழிலாளர் இயக்கங்கள் என்று சொல்லப்பட்டவைகள் எடுப்பார் கைக் குழந்தைகள் போல் தங்களுக்கென எவ்வித சக்தியும் இல்லாமலும், தங்களுக்கு தேவை இன்னதென்றுகூட அறிய முடியாமலும், தாங்களே தங்கள் சங்கத்தை நடத்திக்கொள்ள சக்தியற்றவர் களாகவும் இருந்து கொண்டிருப்பதுமல்லாமல் சுயநலத்துக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் அரசியலில் சம்பந்தப்பட்டு அரசியல் பேரைச் சொல்லிக் கொண்டு வாழும் சில பொறுப்பற்றவர்கள் தொழிலாளர்களில் வாயாடிகளாக வும் செல்வாக்குற்றவர்களாகவும் இருப்பவர்களை பணங் கொடுத்தோ உதவி செய்தோ அவர்கள் மூலமாய்த் தங்களை தொழிலாளர்களுக்குத் தலைவர் களாகும்படிச் செய்து, அதன் மூலமாய் தலைமை பெற்ற சில சுயநலக்காரர் களை தங்களுக்குத் தலைவர்களாகவைத்துக் கொண்டு அவர்கள் சொல்லுகிற படி ஆடவும் ஒருவரை அடியென்றால் அடிக்கவும் திட்டும்படி சொன்னால் திட்டவும் இம்மாதிரியான காரியங்களைச் செய்து கொண்டு அவர்களின் கை ஆளுகள் போலிருந்து அந்நியரின் நன்மைக்காக தங்கள் சங்கங்களை விட்டுக்கொடுக்கும்படியான நிலைமையிலிருந்து வருகிறது. இவ்விதமான நிலைமையிலுள்ள சங்கங்கள் நாட்டிற்காவது தொழிலாளர்களுக்காவது என்ன நன்மையைக் கொடுக்கமுடியும். உண்மையாகவே நம்நாட்டுத் தொழிலாளர்களுக்கு தங்களுக்குள்ளாகவே ஒரு தலைவரை ஏற்படுத்திக் கொண்டு தங்கள் நன்மைக்கு உழைக்க தங்களுக்குச் சக்தியில்லையானால் அரசியலில் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டு வாழும் பொறுப்பற்றவர் களும் சுயநலக்காரர்களுமான அரசியல் தலைவர்களை விட – பிராமணத் தலைவர்களைவிட – அவர்கள் சொற்படி ஆடும் தலைவர்களை விட இத் தொழிலாளர்களின் உண்மையான முதலாளிமார்களே மேலானவர்கள் என்று சொல்லவேண்டியிருக்கிறது. ஏனெனில், அரசியல் தலைவர்களென்போர் தொழிலாளர்களுக்குத் தாங்கள் தலைவர்களாயிருக்கிறோமென்கிற பெருமை யினாலும் அவர்களிடம் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதாய் பிறர் நம்பும்படி செய்து கொள்வதாலும் முதலாளிகளை விரட்டி தங்கள் சொந்த நன்மை பெறுவதும், தங்கள் பிள்ளைக் குட்டிகளுக்கும் இனத்தார்களுக்கும் முதலா ளிகள் தயவு பெற்று உத்தியோகங்கள் சம்பாதித்துக் கொடுப்பதும், தங்கள் தேர்தல் காலங்களில் வோட்டுகள் பெறவும், தங்களுக்கு வேண்டிய வேறு அபேக்ஷகர்களுக்கும் வோட்டு வாங்கிக் கொடுக்க பிரதிப் பிரயோஜனம் பெறுவதுமான காரியங்களுக்காகவே பிரயத்தனப்பட்டு தொழிலாளர் தலை வர்களாகிறார்களேயல்லாமல் உண்மையில் இவ்வரசியல் தலைவர்களும் பிராமணத் தலைவர்களும் தொழிலாளர் தலைவர்களாகுவதற்கு எவ்வித யோக்கியதை உடையவர்களுமல்ல, நம்பிக்கையுடையவர்களுமல்ல என் பதே நம்முடைய அபிப்பிராயம்.அல்லாமலும் முதலாளிமார்கள் தொழிலாளர் களுக்கு ஏதாவது நன்மையோ தீமையோ செய்ய வேண்டுமானால் இம்மாதிரி தலைவர்களுக்கு வேறே பலமாதிரி லஞ்சம் கொடுக்க வேண்டி வருகிறது. எது நன்மை? எது தீமை? என்று அறிய முடியாத பாமர தொழிலாளிகள் தங்களுக்குள்ளேயே ஒரு தலைவரை எடுத்துக் கொள்ள யோக்கியதையும் ஆசாமியும் இல்லையானால் அவ்வித யோக்கியதை வரும்வரை தங்களுக்கு சங்கம் வேண்டாமென்றிருப்பதே நலமென்றுகூடச் சொல்லலாம். அப்படிக் கில்லாமல் கண்டிப்பாய் தங்களுக்கு ஒரு சங்கம் இருந்துதான் தீரவேண்டு மென்கிற பயித்தியமிருக்குமானால் இவ்வித அரசியல் தலைவர்களை விட முதலாளிகள் தலைமை அதிக மோசமானதல்லவென்பதே நமது அபிப் பிராயம். அரசியல் தலைவர்கள் நமது தொழிலாளர்களை உபயோகப் படுத்திக் கொள்ளுவதை பல தடவைகளில் நாம் நேரிலேயே பார்த்திருக் கிறோம். உதாரணமாக கொஞ்ச காலத்துக்கு முன்பு கோகலே ஹால், சௌந் தர்ய மஹால், மகாஜன சபை முதலிய பல இடங்களில் நடந்த அரசியல் சம்பந்தமான கூட்டங்களின் தீர்மானங்களுக்கும் தேர்தல்களுக்கும் தொழி லாளர்களின் வோட்டுப் பெற்று வெற்றி பெறுவதற்காக தொழிலாளர்களி லேயே சில தரகர்களும் அரசியல்காரர்களில் சில தலைவர்களென்போர் களும் முறையே பணம் வாங்கிக் கொண்டும் பணம் சிலவு செய்தும் வோட்டுச் சம்பாதித்துக் கொடுத்ததும் பெற்றதும் நேரிலறிவோம். அல்லாம லும் சமீபகாலத்தில் நடந்த காங்கிரஸ் பெயரைச் சொல்லிக்கொண்டு பிராமணர் பிராமணரல்லாதார் கக்ஷித் தேர்தல்களுக்கும், தொழிலாளர் தரகர் களும் தலைவர்களும் முறையே 200-300 பணம் பெற்றும், சுயநலத்தைக் கோரியும் பிராமணர்களுக்கும் பிராமணர்கள் கக்ஷிக்கும் தொழிலாளர்களின் வோட்டுகளை சேகரித்துக் கொடுத்ததை கேட்டு அறிவோம். இந்நிலையி லுள்ள நமது தொழிலாள சகோதரர்களுக்கு சங்கமிருந்து என்ன பிரயோ ஜனம்? சங்கமில்லாமலிருந்தாலாவது வோட்டுக் கொடுப்பதன் பலன் தங்களுக்கு நேரே வந்தாலும் வரலாம்.
இம்மாதிரி தலைவர்களைக் கொண்ட சங்கமிருக்கிற காரணத்தால் வேறு ஒருவர் சுயநலத்துக்கு இரண்டுமறியாத தொழிலாளர்கள் தங்களது வோட்டுகளை வீணாய் உபயோகிக்க நேரிடுவதும் இதன் கிரையத்தை மற்றவர்கள் அநுபவிக்க நேரிடுகிறதுமாய் முடிகிறது. இப்பொழுதுகூட சில அரசியல் தலைவர் என்போர்களும், தொழிலாளர் தரகர்களும் தொழிலாளர் களிடம் கவலையும் அன்பும் இருப்பது போல் காட்டுவதும் அவர்களுக்குத் தாங்கள் பாடுபடுகிறவர்கள் போலப் பாசாங்கு செய்வதும், உஷார் உஷார் என்று சொல்லுவதும், விஷமிகள் சூழ்ச்சியில் சிக்காதீர்கள், பழய சங்கத்தைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லுவதும், பக்கத்தில் வரப் போகும் தேர்தல்களுக்கு வோட்டுச் சேகரிக்கவும், பணம் சம்பாதிக்கவும் கருத்துக் கொண்டுதான் என்பதாக நாம் கோபுரத்தின் மேலிருந்து கூவுவோம்.
அல்லாமலும் இப்பொழுது தொழிலாளர்களுக்குத் தலைவர்களா யிருக்கிறவர்களெல்லோரும் ஏதாவது ஒருவிதத்தில் முதலாளிகளாய்த் தானிருக்கிறார்கள். ஒவ்வொரு தலைவர்களென்போர்களும் அநேகமாய் தங்களிடம் 500,100,50,30,20 கணக்கான தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குகிற முதலாளிகளும் அவர்கள் உழைப்பில் வாழுகிறவர்களுமாயிருக் கிறார்களே தவிர உண்மையில் தொழிலாளர்களுக்கு அநுகூலமாயிருக்க வேண்டியவர்களாயில்லை. விவசாய சங்கத்துக்கு வியாபாரிகள் தலைவர் களாயிருப்பது போலவும், பிராமணரல்லாதார்களுக்கு பிராமணர்கள் மதகுரு வாயிருப்பது போலவும், இந்தியாவை ஐரோப்பா ஆளுவது போலவும் நமது தொழிலாளிகளுக்கு அரசியல் தலைவர்கள் என்று சொல்லும்படியானவர்கள் தலைவர்களாயிருக்கிறார்கள் என்று சொல்லுவது கொஞ்சமும் குற்றமாகாது. அரசியல் தலைவர்களான கசாப்புக் கடைக்காரன் மூலமாய் நமது தொழிலாளி கள் முதலாளிகளுக்கு உணவாவதைவிட நேரிலேயே போய்விட்டால் ஒரு சமயமில்லாவிட்டாலும் ஒரு சமயத்தில் முதலாளிகளுக்கு ஈவு இரக்கமுண்டா னாலும் உண்டாகலாம்.
அல்லாமலும் அரசியல் தலைவர்கள் தாங்கள் தங்கள் நன்மைக்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பல அரசியல் கக்ஷிகளை தொழிலாளர் சங்கங் களுக்குள் Žநுழைய வைத்து அதன் காரணமாய் தொழிலாளர் சங்கங்களுக் குள்ளும் கக்ஷிகளை உண்டுபண்ணி அநாவசியமாய் பொது ஜனங்களிடத் திலும் முதலாளிமார்களிடத்திலும் வீண் வெறுப்புகளையும் துவேஷத்தையும் உண்டாக்கி தொழிலாளர்களை கஷ்டத்துக்கு உள்ளாக்குகிறார்கள். தொழிலா ளர்களுக்கு வேலை செய்வதற்கும் தற்கால அரசியல் கக்ஷிகளுக்கும் என்ன சம்மந்தமிருக்கிறது. மகாத்மா கொள்கையைப் போல் தொழிலாளர் நன்மையே தேச விடுதலை என்கிற கொள்கையுடையது. அரசியல் கக்ஷிகளாயிருந்தால் அது நமது தொழிலாளர் சங்கத்தில் பிரவேசிப்பதைப்பற்றி நமக்குக் கவலை யில்லை. அப்படிக்கில்லாமல் தொழிலாளர்கள் வோட்டுப் பெற்று உத்தியோக மும் பதவியும் பணமும் சம்பாதிப்பதற்காய் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சுயராஜ்யக் கக்ஷி முதலிய பல அரசியல் கக்ஷிகளும் அவற்றின் தத்துவங் களை ஒத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் முதலியவைகளும் தொழிலாளர் களுக்கு என்ன நன்மை செய்யக் கூடும்? உண்மையிலேயே தொழிலாளர் தரகர்களுக்கு எந்த கக்ஷியார் அதிகம் பணங் கொடுக்கிறார்களோ அந்தக் கக்ஷியில் தொழிலாளர்கள் சேருகிறதாயிருக்கிறதேயல்லாமல் கக்ஷியின் தத்துவத்தை அறிந்து சேருவதாயில்லை. பிராமணர்களிடம் பணம் வாங்கிக் கொண்ட தொழிலாளர்களால் வசவு கேட்கும் ஜஸ்டிஸ் கக்ஷி கூட தொழிலா ளர்கள் தங்கள் வகுப்பார்களென்கிற காரணத்தினால் தொழிலாளர் களுக்கு பல நன்மைகள் செய்திருக்கிறதை நாம் கேட்டிருக்கிறோம்.அதாவது, சென்னையில் சில வருஷங்களுக்கு முன் ஏற்பட்ட தொழிலாளர் வேலை நிறுத்தங்களில் சில பிராமணத் தலைவர்கள் தொழிலாளர் சங்கத்தைக் கை விட்டு விட்டபோதும் சில பிராமணர்கள் சர்க்கார் தயவுக்கு ஆசைப்பட்டு தங்கள் உத்தியோகத்தைக் கொடுமையாய் நடத்தி தொழிலாளர்களை இம்சித்து பிரமோஷன் பெற்ற காலத்திலும் ஸ்ரீமான் ஸர். பி. தியாகராஜ செட்டி யாரும் அவருடைய கக்ஷி மந்திரிகளும்தான் தொழிலாளர்களையும் சில தொழிலாளர் தலைவர்களையும் நாடு கடத்த வொட்டாமலும், சுட்டுக் கொல்ல முடியாமலும் காப்பாற்றியிருக்கிறார்கள். இந்த ரகசியங்கள் தொழிலாளர் களின் இரண்டொரு உண்மைத் தலைவர்கள் இன்னமும் மறவாமல் சொல்லிக் கொண்டுதானிருக்கிறார்கள். பழைய கதைகள் வேண்டாமென்று வைத்துக் கொள்வதானாலும் இப்பொழுதும் தொழிலாளர்களுக்குத் தலைவர்களா யிருக்கும் இவ் அரசியல் தலைவர்கள் தொழிலாளிகளிடம் உண்மையான அன்பு இருக்குமேயானால் சென்னை, நாகை, கோவை முதலிய இடங்களில் தங்கள் கக்ஷிக்காக நிறுத்தப் போகும் சட்டசபை ஸ்தானங்களுக்கு தொழி லாளர்களிலேயே சில பிரதிநிதிகளை ஏன் நிறுத்தக் கூடாது. தொழிலாளர் களில் சட்டசபையில் நிறுத்தக்கூடிய யோக்கியதையுள்ளவர்கள் இல்லை யென்று சொல்வார்களா? சென்னையிலும், நாகையிலும், கோவையிலும் இத்தலைவர்களின் உபதேசத்தால் வேலைகளைப் போக்கடிக்கப்பட்டு பிழைப்புக்குக்கூட கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் யோக்யமும், அந்தஸ்த் தும், அறிவும், ஆற்றலுமுடைய பல தொழிலாளர்களி லிருந்து கொண்டுதானி ருக்கிறார்கள். அவர்களில் சிலரை ஏன் நிறுத்தக் கூடாது. பஞ்சமர், தீண்டாதவர் என்று சொல்லக் கூடிய கூட்டங்களிலிருந்து கூட நமது சர்க்கா ரார் சிலரை சட்டசபைக்கு நியமித்ததின் பலனாய் அவர்களால் அந்த வகுப்பு களுக்கு இப்போது எவ்வளவு நன்மை ஏற்பட்டிருக்கிறது. அல்லாமலும் நிர்வாக மெம்பர் வேலை கொடுத்தாலும் மந்திரி வேலை கொடுத்தாலும் பார்க்கத் தகுந்தவர்களாயிருக்கிறார்கள். அல்லாமலும் இப்பொழுது சட்ட சபையிலிருக்கிற அநேகம் பேரைவிட தேச நலத்திலும் சமூக நலத்திலும் இவர்கள் உழைப்பு உயர்ந்ததென்றே சொல்லலாம். அது போலவே நமது தொழிலாளர் கூட்டங்களிலேயும் அநேகர்கள் இருக்கிறார்களென்றே சொல்லுவோம். மேல் நாடு முதலிய இடங்களிலும் தொழிலாளர்களுக்கென்று தனிக் கக்ஷியும் தொழிலாளர்கள் பிரதிநிதிகளாக தொழிலாளர்களே இருக்கி றார்களல்லாமல் தொழிலாளர்களுக்காக தொழிலாளர்களல்லாதவர்களும், முதலாளிமார்களும், அரசியல் உத்தியோக ஆசை கொண்டவர்களும் தலைவர்களாகவும் பிரதிநிதிகளாயிருப்பதில்லை. ஆதலால் தொழிலாளர் களும் இது சமயம் கண் விழித்துக்கொண்டு அரசியல் பதவிகளுக்கும் ஸ்தானங்களுக்கும் தங்கள் பிரதிநிதிகளை நிறுத்தும்படி தங்களுக்குத் தலை வர்களென்று சொல்லிக் கொண்டிருப்பவர்களைக் கேட்க வேண்டியது. அவர் கள் சம்மதிக்காவிட்டால் அத்தலைவர்களிடமிருந்து விலகி தாங்களே தங்களுக்குள் ஒருவரை இப்பதவிகளுக்கு தெரிந்தெடுத்து அபேக்ஷகர்களாக நிறுத்தி ஒற்றுமையாய் வேலை செய்துப் பார்க்க வேண்டியது. இதிலிருந் தாவது தொழிலாளர்களுக்கு தங்கள் நன்மைக்கு உழைக்கிற உண்மைத் தலைவர்கள் யார்? தங்களுடைய சுயநலத்துக்கு தொழிலாளர்களை உபயோ கப்படுத்திக் கொள்ள உழைக்கும் போலித் தலைவர்கள் யாரென்று விளங்கும். ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுவது போல் இதுவரையிலும் உங்களை ஏமாற்றி வோட்டுக்கும் பெருமைக்கும் உங்களை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த போலித் தலைவர்களை இனியும் நீங்கள் நம்பாதீர்கள். மகாத்மா காந்தியால் உலகம் போலிகளை அறிந்து கொண்டு வருகிறது. நீங்கள் மாத்திரம் ஏன் இன்னும் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறீர்கள். கண் விழியுங்கள். இது சமயம் ஏமாந்தால் இனி வெகு நாளைக்கு உங்களுக்கு விமோஜனமில்லை. போலிகளை விட்டு விலகுங்கள்! விலகுங்கள்!! விலகுங்கள்!!!
குடி அரசு – கட்டுரை – 18.04.1926