அடுத்த வாரம்
27-9-27 தேதி ஊழியன் என்னும் ஒரு பத்திரிகையின் முதல் கலத்தில் “ வீணான அவதூறு” என்ற தலைப்பில் ஸ்ரீமான் காசி விஸ்வநாதன் செட்டியார் அவர்களுக்கும், ஸ்ரீமான். எஸ். ராமனாதன் அவர்களுக்கும் நடந்ததாக ஒரு சம்பாஷணை காணப்படுகின்றது. இதற்கு சமாதானம் எழுத வேண்டிய பொறுப்பு ‘திராவிடனுக்கும்’ ‘குடி அரசுக்கும்’ ஏற்பட்டதோடு ராமசாமி நாயக்கருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இம்மாதிரியான ஒரு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டதற்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம்.
எனினும் இந்த சம்பாஷணைகளில் கண்ட வர்த்தமானங்கள் முழுதும் ஸ்ரீமான் ராமநாதன் அவர்களால் சொல்லப்பட்டது தானா என்பதை நாம் மற்றுமொரு முறை கேட்டுத் தெரிந்து கொண்டு பதில் எழுத வேண்டிய நிலைமையில் அச்சம்பாஷணையில் சில பாகம் இருக்கின்றது.
ஆகவே அது முழுவதும் உண்மைதான் என்றாவது, உண்மையல்ல வென்றாவது தெரிந்துகொண்டு அடுத்தவார ஆரம்பத்தில் எழுதுகிறோம். இதற்கு இரண்டில் ஒன்று பதில் இல்லாத பட்சம் சம்பாஷணை நடந்தது வாஸ்த வம் என்றும் அதில் கண்டது முழுவதும் உண்மை என்றும் வைத்துக் கொள்வோம். ஏனெனில் ஸ்ரீமான் ராமநாதன் அவர்கள் வாக்குமூலத்திற்கு சமாதானம் சொல்லுவதில் நமக்கு சில பொறுப்பு இருக்கிறபடியால் தாமதிக்க வேண்டி இருக்கிறது. இது போலவே இரண்டொரு பெரியாரும் நமக்கு யோசனை சொல்லியிருக்கிறார்கள்.
குடி அரசு – செய்தி விளக்கம் – 02.10.1927