இந்திய சட்டசபையில் மூட நம்பிக்கைக்கு தீர்க்காயுசு அறிவின் வளர்ச்சிக்கு ஆபத்து

“மதாச்சாரியார்களை தூஷிப்பதை தடுக்க வேண்டியதற்காக” என்னும் பெயரால் இந்திய சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற வேண்டிய சடங்குகள் எல்லாம் செய்தாய் விட்டது. இனி, “சட்டமாய் விட்டது”என்று சொல்ல வேண்டியதுதான் பாக்கி.

இந்த சட்டத்தைப் போல் ஒரு முட்டாள் தனமானதும் மனித சமூகத் தின் அறிவு வளர்ச்சிக்கு ஆபத்தானதுமான சட்டம் உலகத்தில் எந்த சட்ட புஸ்தகத்திலுமே இருக்காது என்பது நமது அபிப்பிராயம். இதைப்பற்றி முன்னமே ஒரு தடவை எழுதியுமிருக்கிறோம்.

மகமது நபிகளை எவனோ ஒருவன் கண்டித்து விட்டான் என்கிற காரணத்திற்காக உலகத்தையே குருடர்களும் செவிடர்களுமாக்க ஒரு சட்டம் கொண்டு வருவது எவ்வளவு கொடுமையானது என்பதை யாரும் யோசிக் காமல் இம்மாதிரியான அவிவேகமான காரியத்தில் இறங்குவது நமக்கு மிகவும் வருத்தமாய் இருக்கிறது. ஒரு யோக்கியனை ஒரு அயோக்கியன் கண்டித்து விட்டதற்காக உலகத்திலுள்ள அயோக்கியர்களை எல்லாம் எந்த யோக்கியனும் கண்டிக்கக் கூடாது என்று சட்டமியற்றுவது பிசாசுகள் அரசாங் கத்தில் கூட நடைபெற முடியாத காரியம் என்பதே நமது அபிப்பிராயம். மதத் தலைவர்கள் என்பவர்கள் யார் என்று யார் முடிவு செய்வது? ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்காரும் சத்தியமூர்த்தியும் நாளைக்கு மதத் தலைவர்கள் ஆகிவிடலாம். ஒவ்வொரு மதத்தை (கொள்கையை) உபதேசிப்பவனும் தனக்கு சில சிஷ்யர்களை பணம் கொடுத்து சேர்த்துக் கொண்டு புராணம் எழுதி வைத்துக் கொள்ளுபவனும் அந்த மதத் தலைவன்தான். எத்தனை மதங்கள் இருக்கிறதென்று யாரால் நிர்ணயிக்க முடியும்? இனி மதங்கள் ஏற்பட முடியாது என்பதற்கு என்ன உறுதி? யார் யார் மதத் தலைவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? கடவுள் என்பவரே ஒவ்வொருவனுக்கு ஒவ்வொரு விதமாய் அதாவது ரூபமாயும், குணமாயும், அரூபமாயும், நிர் குணமாயும் இருக்கிறார் என்கிறார்கள் .

ஒவ்வொருவன் கொள்கைக்கு ஒவ்வொருவன் கொள்கை விரோத மாய் இருப்பதாக காணும்போது அவனது கருத்தையும் அறிவீனத்தையும் எடுத்துச் சொல்லாமல் இருக்க வேண்டுமென்பது தானே சட்டத்தின் கருத்து. இது முறையா? இது தகுமா? இது தர்மம்தானா? “குசுவு விட்டதற்காக குண்டி யை அறுத்து விடுவதா” என்பதாக ஒரு பழமொழி உண்டு. அது போல சர்க்காரும் இந்திய சட்டசபை மெம்பர்களும் நடக்கிறார்கள் .

இச்சட்டத்தால் பெரிதும் பார்ப்பனர்களுக்கும், சர்க்காருக்கும், பார்ப்பன வக்கீல்களுக்கும் லாபமேயல்லாமல் முஸ்லீம்களுக்கு யாதொரு லாபமும் இல்லாததோடு பின்னால் கண்டிப்பாய் தொந்திரவுகளும் ஏற்படும் என்பதே நமது அபிப்பிராயம்.

குடி அரசு – கட்டுரை – 11.09.1927

You may also like...

Leave a Reply