தமிழிற்குத் துரோகமும் ஹிந்தி பாஷையின் இரகசியமும் – சித்திரபுத்திரன்

நமது நாட்டின் nக்ஷமத்திற்காக என்று எந்தக் காரியம் ஆரம்பிக்கப் பட்டாலும், அவற்றை நம் நாட்டுப் பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டு அதனால் தாங்கள் பிழைக்கும்படியாகவும், நமக்கு பெரிய ஆபத்து விளையும்படியாகவே செய்து விடுகிறார்கள். எதுபோலென்றால்; நமது சர்க்கார் நமக்குச் சுயராஜ்யம் கொடுப்பதாய் சொல்லி முதல் தடவை, இரண்டாந் தடவையாகக் கொடுக்கப்பட்டு வந்த சீர்திருத்தங்கள் என்பது, நமது நாட்டுக்கு அதிக வரி போடவும், ஜாதிச் சண்டைகளும், பொறாமையும் மேலிட்டு ஒருவரையொருவர் ஏமாற்றுவதன் மூலம் ஒற்றுமைக் குறைவு ஏற்படவும், கைத்தொழில்கள் அற்றுப் போய் நாளுக்கு நாம் மனச்சாக்ஷி யையும், கற்பையும் விற்று ஜீவிக்கும்படி ஏழைகள் அதிகமாகவும், அரசாங்கத் தார் உத்தேசம் நிறைவேறத்தக்க வண்ணம் நமது நாட்டுப் பணம் கொள்ளை போகவும், உபயோகப்படுவது போலவும், நமது மக்கள் படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் பேரில் சர்க்காரை பள்ளிக் கூடம் வைக்கும்படி நாம் கேட்டுக் கொள்வதினால் அந்தப்படிப்பு நம் நாட்டுக்குத் துரோகம் செய்யத் தக்க அளவுக்குச் சர்க்கார் ஆக்ஷிக்கு அனுகூலமாய் இருப்பது போலவும் ஆய்விடுகின்றது. அதுபோலவே நமது தமிழ்நாட்டில் ஹிந்தி பிரசாரமும் பெரும்பாலும் பிராமணர்களுக்கே அனுகூலத்திற்காக செய்யப்பட்டு இருக்கிறது.

மகாத்மா காந்தி அவர்கள் ராஜீய நோக்கத்தை முன்னிட்டு இந்தியா முழுதுக்கும் ஒரே பாஷையாயிருக்கவேண்டும் என்கிற கருத்துக்கொண்டு ஹிந்தி பாஷைக்காகப் பொதுமக்கள் பணத்தைச் செலவு செய்தும், பொது ஜனங்களும் மகாத்மா சொல்லுகின்றாரே என்கிற பக்தியின் பேரிலும் நம்பி, அதை அமுலுக்குக் கொண்டு வந்ததின் பலன் அதுவும் ஒரு வினையாய் முடிந்து வருகிறது.

இதுவரை ஹிந்திக்காகச் செலவாயிருக்கும் பணத்தில் பெரும்பாகம் பிராமணரல்லாதாருடையது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. ஹிந்தி படித்தவர்களில் 100-க்கு 97 பேர் பிராமணர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் மொத்தத் தொகையில் 100-க்கு 97 பேர் பிராமணரல்லாதாராய் இருந்தும் 100-க்கு மூன்று வீதம் உள்ள பிராமணர்கள்தான் ஹிந்தி படித்தவர்களில் 100 – க்கு 97 பேர்களாயிருக்கின்றார்கள். பிராமணரல்லாதார் 100 – க்கு 3 பேராவது ஹிந்தி படித்திருப்பார்களோ வென்பது சந்தேகம். இந்த படிப்பின் எண்ணிக்கை எப்படி இருந்தாலும், நமக்கு அதைப்பற்றி அதிகக் கவலை ஒன்றும் இல்லை. ஆனால் இதில் 100-ல் ஒரு பங்கு கவலைகூட தமிழ் பாஷைக்கு எடுத்துக் கொள்ளுவதில்லை என்பதையும் ஹிந்தி படித்த பிராமணர்களால் நமக்கு ஏற்படும் கெடுதியையும் நினைக்கும்போது, இதைப் பற்றி வருந்தாமலும், இம்மாதிரி பலன் தரத்தக்க ஹிந்திக்கு நாம் பாடுபட்ட முட்டாள் தனத்திற்கும், நாம் பணம் கொடுத்த பயித்தியக்காரத்தனத்திற்கும் வெட்கப்படாமலிருக்க முடியவில்லை. இந்த ஹிந்தி பாஷையானது, நம் பணத்தில் – நம் பிரயத்தனத்தில் – நமது நாட்டில் பல பிராமணர்கள் படித்து வெளி மாகாணங்களுக்குப் போய், ஆங்காங்கு நமக்கு விரோதமாய் பிரசாரம் செய்வதும், நம்மை சூத்திரர்கள், புத்தி இல்லாதவர்கள், முட்டாள்கள் என்றும், தென்னாட்டுப்பிராமணரல்லாதாருக்கு மூளை இல்லை என்றும் சொல்லுவதும், வெளி மாகாணங்களில் உள்ள வர்த்தமான பத்திரிகைகளில் போய் அமர்ந்து கொண்டு பிராமணாதிக்கத்தை தேசமெல்லாம் நிலை நிறுத்தவும், பிராமணரல் லாதாரை அழுத்தப் பிரசாரம் செய்யவும், வெளிமாகாண காங்கிரஸ் முதலிய பொது ஸ்தாபனங்களிலும் இவர்களே தலைவர்களாகவும், அவற்றில் மாதம் 100, 200, 300 வீதம் சம்பளம் பெற்றுப் பிழைப்பதுமான காரியத்திற்கல்லாமல், வேறு வழியில் நமக்கு ஒரு பலனையும் அளிப்பதில்லை. இவ்விஷயத்தைப் பற்றி முன் ஒரு சமயம், ஹிந்தி பிரசாரத்திற்காக நம்மிடம் பணம் பறிக்க நமது பிராமணர்களால் வெளி மாகாணத்திலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்ரீமான் புருஷோத்தம தாஸ் தாண்டன் என்பவரை நேரில் கண்டு, இவ்விஷயத்தை அவரிடம் ஒருவர் நேரில் தெரிவித்ததில்-அதாவது பணம் மாத்திரம் பிராமணரல்லாதாரிடம் வசூல் செய்கிறீர்களே; இது வரையில் ஹிந்தி படித்த பிள்ளைகள் எல்லாம் 100 – க்கு 95 பிராமணப் பிள்ளைகளேதான் படித்திருக் கின்றன; அதன் உபாத்தியாயர்களும் 100 – க்கு 97 பேர் பிராமணர்களா கவேதான் இருக்கின்றார்கள். இதன் காரணமென்ன? சில பிராமணரல்லாத வாலிபர்கள் உபாத்தியாயர்களாகப் பயிற்சி பெற இஷ்டப்பட்டு வந்தவர் களையும், சரியாய் நடத்தாமல் வெளியேற்றப்பட்டதாகவும் என்னிடம் புகார்கள் வந்து கொண்டிருக்கின்ற இந்நிலையில் இதற்காக பிராமணரல்லா தாரை ஹிந்திக்குப் பணம் கேட்பது சரியா என்று சொன்னதற்கு, இவ்வள வையும் கேட்டுக்கொண்டு எல்லாவற்றையும் விசாரித்து தெரியப்படுத்து வதாய் சொல்லிப் போனவர் இதுவரை ஒரு சங்கதியும் தெரிவிக்கவில்லை. அல்லாமலும் முன்போலவே காரியங்கள் மாத்திரம் நடந்து வருகின்றது. இதே மாதிரி நமது நாட்டுப் பிராமணர்கள், இந் நாட்டாரைத் தங்களால் ஏய்க்க முடியாது என்று தெரிகிற சமயத்தில் வெளி மாகாணத்தில் இருந்து ஒருவரைக் கூட்டி வந்து ஏமாற்றி தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வது வழக்கமாக இருந்து வருகின்றது.

உதாரணமாக, சுயராஜ்யக் கட்சி என்கிற பிராமணக் கட்சிக்கு நமது நாட்டில் யோக்கியதை இல்லாத காலத்தில், ஸ்ரீமான் தேசபந்து தாஸைக் கூட்டி வந்து செல்வாக்கு சம்பாதித்துக் கொண்டார்கள். இந்து மகாசபை என்கிற பிராமண வர்ணாசிரம தர்ம சபைக்கு நமது நாட்டில் யோக்கியதை சம்பா திக்க, ஸ்ரீமான் லாலா லஜபதிராயைக் கூட்டி வந்து ஏமாற்றினார்கள். காக்கி நாடா காங்கிரஸில் சட்டசபைப் பிரவேசத்திற்கு ஆதரவு கொடுத்ததால் தனக்குக் கொஞ்சம் செல்வாக்கு குறைந்து போய்விட்டதெனப் பயந்த பிராமணர் ஒருவர் ஸ்ரீமான்கள் பஜாஜையும், பாங்கரையும் தருவித்து ஊர் ஊராய்த் திரிந்து, உபசாரப் பத்திரம் பெற்று, ஜனங்களை ஏமாற்றி யோக்கிய தையை நிலை நிறுத்தினார். இனி மகாத்மாவையும் கூட்டி வந்து ஏமாற்றப் போகிறார். இம்மாதிரியாகவே இது சமயமும், ஹிந்தியை பொதுபாஷை ஆக்க வேண் டும் என்கிற கவலை உள்ளவர்கள் போல் தேசத்தின் பேரால் ஆங்காங்கு பல பிராமணர்கள் பேசுவதும், அதைச் சர்க்கார் பள்ளிக்கூடம் முதலிய இடங் களில் கட்டாயப் பாடமாக்கப் பிரயத்தனப்படுவதும் யார் நன் மைக்கு? இனி கொஞ்ச காலத்துக்குள் ஹிந்திப் பிரசாரத்தின் பலனை அநுபவிக்கப் போகி றோம். பிராமணரல்லாதாருக்கு ஏற்பட்ட பல ஆபத்துகளில் ஹிந்தியும் ஒன் றாய் முடியும் போலிருக்கிறது. பொதுவாய் ஹிந்தி என்பது வெளி மாகாணங் களில் பிராமண மத பிரசாரம் செய்ய தர்ப்பித்து செய்யும் வித்தையாய் விட்டது. இந்த இரகசியத்தை நமது நாட்டுப் பாமர ஜனங்கள் அறிவதே யில்லை. இரண்டொருவருக்கு அதன் இரகசியம் தெரிந்தாலும், பிராமணர் களுக்குப் பயந்துக் கொண்டு தாங்களும் ஒத்துப் பாடிவிடுகின்றனர். யாராவது துணிந்து வெளியில் சொன்னால் இவர்களைத் தேசத் துரோகி என்று சொல்லி விடுகிறார்கள்.

சமஸ்கிருதம்

இதல்லாமல், நமது நாட்டில் சமஸ்கிருத பாஷைக்காக எவ்வளவு லக்ஷம் ரூபாய் செலவாகிறது! அது அவ்வளவும் யாருடைய பணம்? சமஸ்கிருதத்திற்கென்று தனியாய், எவ்வளவோ பள்ளிக் கூடங்கள் இருக்கின் றன. இதில் படிக்கிறவர்கள் எல்லாம் யார்? இதன் உபாத்தியாயர்கள் யார்? பிராமணரல்லாத உபாத்தியாயரையாவது, பிராமணரல்லாத பிள்ளைகளையா வது இதில் சேர்த்துக் கொள்ளுகின்றார்களா? அரசாங்கத்திலாவது சமஸ்கிரு தத்திற்கு இருக்கின்ற யோக்கியதை தமிழுக்கு இருக்கிறதா? இச் சமஸ்கிரு தம் பிராமணரல்லாதார் – தாழ்ந்தவர்கள் – சூத்திரர் – பிற்பட்டவர்- அடிமைகள் என்பதற்கு ஆதாரமாயிருக்கின்றதே தவிர வேறு எதற்காவது – நாட்டிற்காவதுஉபயோகப்படுகிறதா?

தமிழ்

ஹிந்தியும், சமஸ்கிருதமும் இப்படியிருக்கத் தமிழைப் பற்றியோ வென்றால், தமிழ்நாட்டில் தமிழுக்கென்று தனியாய் எத்தனைப் பள்ளிக்கூடம் இருக்கிறது. சமஸ்கிருதத்திற்கு இருக்கும் பள்ளிக்கூடம் அளவில் நாலில் ஒரு பங்காவது இருக்கிறதா? பிராமணரல்லாத தமிழ் வித்துவான்கள் பேராவது பொது ஜனங்களுக்குத் தெரியக் கூடியதாய் இருக்கிறதா? பிரம்மஸ்ரீ உ.வெ. சாமிநாதய்யர், ஸ்ரீலஸ்ரீ. ராகவய்யங்கார் இன்னும் ஸ்ரீ, ஸ்ரீ, ஸ்ரீ, அய்யர், ஐயங்கார், ஆச்சாரியார், ராவு, சர்மா என்று பிராமணர்கள் பெயர்தான் தமிழ் வித்துவான்கள் லிஸ்டிலும் அடிபடுகிறதேயல்லாமல் பிராமணரல்லாதார் பெயர் தெரிகிறதா? இந்த பிராமணர்கள்தான் பழைய தமிழ்க் காவியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் பிராமணரல்லாதாரிடம் இருந்து வாங்கி, அதை தங்கள் பிராமண மதத்திற்குத் தகுந்தபடி மொழி பெயர்த்துக் கொண்டு, அதை அச்சடிக்கப் பிராமணரல்லாதாரிடமே யாசகமாய்ப் பணம் வாங்கி, அச்சுப் போட்டு, புஸ்தகம் 1 -க்கு 10, 15 ரூபாய் என்று விற்றுக் கொள்ளை அடித்து லக்ஷக் கணக்காகப் பணம் சேர்த்துக் கொள்ளுகின்றார்கள். நிற்க, சர்க்காரில் தமிழுக்கு ஏதோ பெரிய யோக்யதை கொடுப்பது போல் வேஷம் போட்டு ஒரு தமிழ் அகராதி எழுதக் கமிட்டி ஏற்படுத்தினார்கள். அதில் (தமிழுக்கு வார்த்தைகள் கண்டுபிடித்து அர்த்தமெழுதத் தமிழ் படித்த தமிழர்- பிராமண ரல்லாத புலவர்களும், பண்டிதர்களும் எத்தனையோ பெயர் இருக்க அக் கமிட்டிக்கு ) நமது சார்பாய் பிராமணர்களே அங்கத்தினர்களாய் நியமிக்கப் பட்டு இருக்கிறார்கள். இதற்காக லக்ஷக்கணக்கான நம் ரூபாய்களை வருஷக் கணக்காய்த் தின்று கொண்டிருக்கிறார்கள். இந்த பிராமணர்களால் ஏற்பட்ட தமிழ் தான் – தமிழ் அகராதிதான்- தமிழ்நாட்டிற்கு தமிழாய் – தமிழுக்கு ஆதாரமாய் விளங்கப் போகிறது.

இது இப்படியிருக்க, மதுரையம்பதியில் தமிழ்ச்சங்கமென்று ஒரு சங்கமிருக்கிறது. ஆண்டவனே! இதன் கதை வெளியில் சொன்னால் வெட்கக் கேடு. இது பிராமணரல்லாதாரின் பயித்தியக்காரத்தனத்தையும் முட்டாள் தனத்தையும் நிலை நிறுத்தக் கல்லின் மேல் எழுத்துக்கு நேராயிருக் கிறது. அங்குள்ள தமிழ் பரீiக்ஷ அதிகாரிகளும், தமிழ்ச் சங்கத்திற்கு வருஷாந்திரப் பிரசிடெண்டுகளும் 100 – க்கு 90 பேர் பிராமணர்கள். அதிலும் “வீடு பிரித்துப் போட்டிருக்கிறது” என்று சொல்லுவதற்கு “வீடு அவுத்துப் போட்டிருக்கிறது” என்று பேசும் படியான பிராமணர்களை அக்கிராசனராகத் தெரிந்தெடுப்பதும் இச்சங்கத்திற்கு நற்சாக்ஷிப் பத்திரங்களாகும். சமஸ்கிருதச் சங்கத்தில் எங்காவது பிராமணரல்லாதார் பரீiக்ஷ அதிகாரியாய் இல்லாவிட்டாலும், அங்கத்தினர்களாகவாவது சேர்த்துக் கொள்ளப்படுகிறதா? இப்பொழுது எங்கேயோ தமிழ் காலேஜ் என்று ஒன்று ஏற்படுத்தி இருக்கின்றார்களாம். அதன் அதிகாரிகளும், படிக்கும் பிள்ளைகளும், அளவுக்கு மிஞ்சி பிராமணர்களே. அதன் செலவுக்கு மாத்திரம் பணம் பிராமணரல்லாதாருடை யது. நமது பிள்ளைகளின் படிப்புக்கு அரசாங்கத்தினர் மூலமாய்த் தமிழ்ப் புஸ்தகம் எழுதிக் கொடுப்பவர்களும் பெரும்பாலும் பிராமணர்களே. அவர் கள் தமிழ்ப் புஸ்தகம் என்று பெயர் வைத்து அப்புஸ்தகத்தில் முக்கால் பாகம் சமஸ்கிருத வார்த்தைகளையே நிரப்பி பிராமண வர்ணாசிரமத்தைப் பலப்ப டுத்துவதான விஷயங்களை நமது சிறு பிள்ளைகளுக்கும் இரத்தத்தில் கலரும்படியான கதைகளையும், வாசகங்களையுமே எழுதிப் பணமும் சம்பாதித்துக் கொள்ளுகிறார்கள்.

நம்மில் யாராவது, “தமிழ்ப் புஸ்தகம் என்பது சுத்த தமிழில் எழுத வேண்டாமா? அவற்றிற்கு ஏற்ற தமிழ் வார்த்தைகள் இல்லையா? நமது தமிழ் நாட்டின் பழக்க வழக்கம், நாகரீகம் அதில் இருக்க வேண்டாமா?” என்று கேட் டால் நம்மவர்களுக்குள்ளாகவே பாஷாபிமானம், பாஷாபிமானம் என்று பேசி நம்மை ஏமாற்றுபவரும் பிராமண சிஷ்யர்களுமான சிலர் உடனே பிராமணர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு சமஸ்கிருத வார்த்தைகள் தமிழில் கலந்தால் தமிழுக்கு யோக்கியதை குறைந்து போகாது; அப்படிக் கலருவதுதான் பாஷையின் முன்னேற்றம்; பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினால் என்று சமாதானம் சொல்லுவதோடு இதிலும் ஜாதித் துவேஷம் என்கிறார்கள். அப்படியானால் தமிழ் வார்த்தைக ளோடு அடிக்கடி இங்கிலீஷ் முதலிய பாஷை சொற்களை கலந்து பேசுவதில் – எழுதுவதில் என்ன குற்றம்?

நமது வீட்டுப் பெண்களிடம் “நாம் தண்ணீர் கொண்டு வா” என்று சொல்லுவதற்குப் பதிலாக, நம்மால் சரியான உச்சரிப்பை உச்சரிக்கவும், தமிழில் எழுதவும், பழக்கமும், சௌகரியமும் இல்லாத சமஸ்கிருத வார்த்தை யாகிய “ஜலம் கொண்டுவா, ஜலம் கொண்டுவா” என்று சொல்லுவது குற்ற மில்லையானால், அதற்குப் பதிலாக “வாட்டர் கொண்டு வா” என்று ஆங்கிலச் சொல் சொல்லுவதில் தப்பென்ன? தனித்தமிழ் என்கிற பதத்திற்கும், பாஷாபிமானம் என்கிற பதத்திற்கும் பொருள்தான் என்ன? இம்மாதிரி பாஷாபிமானத்திலிருந்தே இவர்களது தேசாபிமானத்தின் யோக்கியதையை யும் அறிந்துக் கொள்ளலாம். பழையன கழிந்து புதியன புகுவதாயிருந்தால் நமக்குக் கவலை இல்லை; புதியவை வந்து பலாத்காரத்தில் புகுந்துக்கொண்டு பழையவைகளைக் கழுத்தைப் பிடித்து தள்ளுவதனால் அதையும் சகித்துக் கொண்டு அதற்கு வக்காலத்துப் பேசுவது என்பது பாஷைத் துரோகமும் சமூகத் துரோகமும் ஆவதோடல்லாமல், தமிழ்த்தாயின் கற்பை, தமிழ்த் துரோகிகளுக்கு சுயநலத்திற்காக விற்றவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இம்மாதிரியே மற்றும் நமது அரசியல், மதம், பாஷை, கல்வி, ஆசாரம் , நாகரீகம் முதலியவைகளில் பிராமணர்கள் எவ்வளவு தூரம் ஆதிக்கம் பெற்று இருக்கிறார்கள் என்பதும், அவ்வாதிக்கத்திற்கு நம்மவர்களிலேயே எவ்வளவு பேர் நம்மைக் காட்டிக் கொடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்பதும், ஒவ் வொரு பிராமணரல்லாதாரும் சுயநலத்தை விட்டு நடுநிலைமையிலிருந்து யோசிப்பார்களானால் விளங்காமற் போகாது.

குடி அரசு – கட்டுரை – 07.03.1926

You may also like...

Leave a Reply