ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார்
ஸ்ரீமான். இராஜகோபாலாச்சாரியார் வெளியிட்ட அறிக்கைகளில், முதலில் காங்கிரஸ் தற்காலம் பொது ஜனங்களுக்குச் சேவை செய்ய எவ்விதத் திட்டத்தையும் உடைத்தாயிருக்கவில்லை என்றும், காங்கிரசிற்கு இப்போ திருக்கும் மதிப்பெல்லாம், அது சென்ற நான்கு, ஐந்து வருடங்களாக தேசத் துக்கு அநுகூலமான திட்டங்களை ஏற்படுத்திக் கொண்டு அதற்காகப் பல தலைவர்களும், தொண்டர்களும் கஷ்டங்களையும், நஷ்டங்களையும் ஏற்றுக்கொண்டு பெரிய தியாகங்களையும் செய்து திட்டங்களை நிறைவேற் றப் பிரயத்தனப்பட்டதன் பலனாய் காங்கிரசுக்கு ஏற்பட்ட மதிப்பை வைத்துக் கொண்டு, காங்கிரசின் மூலமாய் பொது ஜனங்களுக்கு நன்மை உண்டாகும் படியான எவ்விதத் திட்டமும் அதில் இல்லாமல், பழைய நிலையின் வாசனை யையே ஆதாரமாக வைத்துக் கொண்டு, காங்கிரஸ், காங்கிரசென்று சிலர் சொல்லி வருகிறார்கள். இப்படியே காங்கிரஸ் இருக்குமேயானால், இனிக் கொஞ்சக் காலத்தில் காங்கிரஸ் மதிப்பே போய்விடும் என்றும் எழுதிவிட்டு, காங்கிரஸிற்கு பூரண மது விலக்கையாவது திட்டமாய் வைத்து அதை ஓட்டர்களுக்கு எடுத்துச் சொல்லி ஓட்டுப் பெற்று சட்டசபைக்குப் போய் ஒரே வருடத்தில் மதுபானத்தை நிறுத்திவிடவேண்டும் என்றும் எழுதியிருந்தார். இது எழுதின சமயம் ஒத்துழையாதாருங்கூட இந்த தத்துவத்தோடு சட்ட சபைக்குப் போய் வேலை செய்ய வேண்டுமென்பது தான் அவருடைய கருத்தாய் இருந்தது. எப்படியெனில், இதைப்பற்றி நம்மிடம் யோசிக்கையில், தானும் சட்டசபைக்குப் போவதில் ஆnக்ஷபனை இல்லை என்றும், இன்னும் பல இடங்களுக்கு ஒத்துழையாதாரர்களையே நிறுத்த வேண்டும் என்றும் சொல்லி, அவர்களுடைய பெயர்களையும் சொன்னார். அதன் பிறகு எழுதிய ஒரு வியாசத்தில், “முட்டுக்கட்டை போட்டு அரசாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் பேச்சு இனி உதவாது, நாம் ஒரே நோக்கத்துடன், திடபுத்தியுடன் உழைத்தோமானால், மதுவிலக்கைச் செய்து முடிக்கலாம். அடுத்த தேர்தல் களை, இந்த மதுவிலக்கு என்னும் ஒரே விஷயத்தின் மேல் நடத்துங்கள், சட்டசபைகளில் தற்போது ஏழைகளுக்கு வேறு என்ன நல்ல தொண்டு செய்ய முடியும்” என்றும், “மதுவிலக்கை சர்க்கார் ஏற்றுக் கொள்ளா விட்டால், அரசாங்க வேலை முற்றிலும் தடை செய்வது நியாயமாகும். சென்னை சட்டசபையைப் பொறுத்த வரையில், சுயராஜ்யக் கக்ஷியின் எதிர்ப்புத் திட்டம் காகிதமளவாகவே இருக்கிறது” என்று சுயராஜ்யக் கக்ஷியினருக்கும் மற்றும் தேசீயவாதிகளுக்கும் புத்தி சொல்லுவது போல் ஒரு வியாசமும் சமாதானமும் எழுதியிருக்கிறார்.
பிறகு சித்தூரில் 22-12-25-ல் நடைபெற்ற ஓர் பொதுக் கூட்டத்தில் “சுயராஜ்யக் கக்ஷியார், முட்டுக்கட்டை போட வேண்டுமென்று சட்டசபைக் குப் போனவர்கள் முட்டுக்கட்டை போட்டார்களா? அவர்களால் போட முடியுமா? முட்டுக்கட்டை போடுவதற்கு அங்கு ஏதாவது இடம் இருக்கிறதா? ஆதலால், நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்து வேலை செய்யக்கூடிய திட்டத்தைக் கண்டு பிடிக்கவேண்டும். அதற்கு மதுவிலக்குத் திட்டம் பொருத்தமான தென்றும் எல்லாருக்கும் பொதுவானதென்றும் நினைக்கிறேன். இதற்குக் கவர்ன்மெண்டு முட்டுக்கட்டை போடுமானால், கவர்ன்மெண்டு நடை பெறாமல் முட்டுக்கட்டை போட இந்தத் திட்டம் உதவும். ஆதலால், ஜனங்கள் இந்த மதுவிலக்குக்கு சாதகமானவர்களையே சட்டசபைக்கு அனுப்பினால் கவர்ன்மெண்டு நடைபெறாமல் முட்டுக் கட்டை போட சாதகமாயிருக்கும். இதுதான் பரஸ்பர ஒத்துழைப்புக்குச் சாதகமாயிருக்கும்” என்று பேசி யிருக்கிறார்.
பிறகு சேலத்தில் டிசம்பர் மாதம் 24 – ந் தேதி நடை பெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருப்பதாவது:-
“இதுவரையிலும் கதர், கள்ளு என்ற பல விஷயங்கள் பேசப்பட்டு வந்தன. இனி மதுவிலக்கும், சட்டசபைத் தேர்தலும் மாத்திரம்தான் பேசப்படும் என்று சொல்லிவிட்டு, தான் மாறுதல் வேண்டாத கக்ஷியைச் சேர்ந்தவர் என்றும், சட்டசபைப் பகிஷ்காரத்தில் நம்பிக்கை உடையவர் என்றும், சட்டசபைக்குப் போக விருப்பம் இல்லாதவர்களைப் போகும்படியும், வோட் செய்யும்படியும் பலவந்தப் படுத்துவதில்லை என்றும், சட்டசபைக்குப் போகிறவர்கள் மதுவிலக்கைக் கட்டாயமாக வலியுறுத்த வேண்டும் என்றும், அப்படி வலியுறுத்தினால், கவர்ன்மெண்டுக்கு முட்டுக்கட்டை ஏற்படும் என்றும், ஆகையால் இம்மாதிரி சட்டசபையில் அடுத்த முறை மது விலக்கைப் பூர்த்தியாய் வேலை செய்கிறவர்களுக்கே வோட் கொடுக்க வேண்டுமென்றும், மதம், ஜாதி, வகுப்பு, குல அபிமானம் இவைகளைக் கருதி வோட்டர்கள் வோட் செய்யக்கூடாது என்றும்நான் வோட்டர்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்” என்றும் பேசியிருக்கிறார்.
அதோடல்லாமல், இதையே தான் ஓர் பிரசாரமாகக் கொண்டிருப் பதாகவும், ஆங்காங்கு போய்ப் பிரசாரம் செய்யப் போவதாகவும் சொல்லி யிருக்கிறார்.
மேல்கண்ட இரண்டு வியாசங்கள், இரண்டு உபந்யாசங்கள் ஆக நான்கு சந்தர்ப்பத்திலும், ஸ்ரீமான். ஆச்சாரியாரின் அபிப்ராயங்கள் ஒன்றுக் கொன்று எவ்வளவு மாறுபட்டிருக்கின்றது என்பதை ஊன்றிக் கவனிப்பவர் களுக்கு இதில் ஏதோ ஓர் இரகசியம் இருக்கிறதென்பது நன்றாய் வெளிப் படும். முதலில், காங்கிரஸிற்கு ஓர் யோக்கியதை உண்டாவதற்காக ஓர் திட்டம் வேண்டும் என்று ஆரம்பித்து பூரண மதுவிலக்கை காங்கிரஸில் ஓர் திட்ட மாக வைத்து, சட்டசபைக்குப் போய் ஒரே வருடத்தில் மதுபானத்தை நிறுத்தி விடவேண்டும் என்று எழுதினார். அதுசமயம் சட்டசபையில் தனக்கு ஒரு நம்பிக்கையும், சட்டசபையின் மூலமாய் மதுவிலக்கை நிறுத்திவிடலாம் என்கிற உறுதியும் அவருக்கு இருந்து இருக்கிறது. அடுத்தாற்போல் சட்ட சபையின் மூலம் கவர்ன்மெண்டு நடக்காமல் முட்டுக்கட்டை போட முடியாதென்று சொல்லிவிட்டு, மறுபடியும் நமது திட்டத்தைச் சர்க்கார் ஏற்றுக் கொள்ளாவிட்டால் முட்டுக்கட்டை போடலாமென்று சொல்லுகிறார். மறுபடி யும், தான் மாறுதல் வேண்டாதவ ரென்றும், சட்டசபைக்குப் போவதிலும் வோட் கொடுப்பதிலும் நம்பிக்கை இல்லையென்றும், போகிறதற்கு இஷ்டப்படுகிறவர் இப்படி நடங்களென்றும், ஜாதி, மத, வகுப்பு வித்தியா சங்களைக் கவனிக்காமல் வோட் கொடுங்கள் என்றும் சொல்லிவிட்டு, தான் அதைப்பற்றி பிரசாரம் செய்யப் போவதாகவும் சொல்லுகிறார்.
காஞ்சியில், பாட்னாத் தீர்மானத்தை, சுயராஜ்யக் கக்ஷியார் சொன்னபடி நடக்கவில்லை, சட்டசபைக்குப் போவதில் பிரயோஜனமுமில்லை என்று ஸ்ரீமான். ஈ.வெ. இராமசாமி நாயக்கர் எதிர்த்தபோது, அவ்வெதிர்ப்புக்கு விரோதமாய் ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார், முதல் பாகத்தை ஆதரிக் கையில் சட்டசபையில் நம்பிக்கை இல்லாதவர்கள், நம்பிக்கையுடன் சட்ட சபைக்குச் சென்று வேலை செய்பவர்களை ஏன் குறை கூற வேண்டும்? என்று சொல்லிவிட்டு, அதற்கு ஓர் உதாரணமும் சொல்லிக் காட்டினார். அதாவது, மாமிசம் சாப்பிடக்கூடாது என்று ஒரு சங்கம் ஏற்படுத்திக் கொள்ளுவதாய் வைத்துக்கொள்ளுவோம்; அச்சங்கத்தில் இருந்த சிலர் நாங்கள் சாப்பிட்டுத் தான் தீருவோம் என்று சொல்லி சங்கத்தின் அனுமதி பெற்றுவிட்டால், அச்சங்கத்தில் இருப்பவர்களுக்கு போனவர்களைப் பார்த்து இந்த மாதிரி ஏன் குழம்பு வைத்துச் சாப்பிடவில்லை? ஏன் பொறியல் வைத்துச் சாப்பிட வில்லை? என்று கேட்க என்ன அதிகாரம் இருக்கிறதென்று சொல்லியும், அவர்கள் இஷ்டம்போல் விட்டுவிட வேண்டுமென்றும் பேசி தீர்மானத்தின் முதல் பாகத்தை ஆதரித்தார். அப்படியிருக்க, இப்பொழுது சுயராஜ்யக் கக்ஷியாருக்கு, அவர்கள் ஜனங்களை எப்படி ஏமாற்ற முடியும் என்பதற்கு யோசனை சொல்லிக் கொடுப்பதுபோல், மதுபானத் திட்டத்தை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்; இப்படிச் சொன்னால், ஜனங்களிடம் வோட்டும் பெற்றுக்கொள்ளலாம்; சட்டசபைக்குப் போய் அப்படிச் செய்யலாம் இப்படிச் செய்யலாமென்று தனக்கு நம்பிக்கை இல்லாத விஷயங்களை அவர்கள் நம்பும்படி சொல்லுகிறார்.
அதுமாத்திரமல்லாமல் வோட்டர்களையும், ஜாதி, மத, வகுப்புப் பார்த்து வோட் செய்யக்கூடாது; உங்களுக்கு அனுகூலமான காரியத்தைச் செய்வதாக யார் வாக்குக் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கே வோட் செய்ய வேண்டுமென்றும் சொல்லுகிறார். சட்டசபையில் ஒரு காரியமும் செய்ய முடியாதென்று நினைக்கிற ஒருவர், இன்னின்ன காரியங்கள் செய்வதாக யார் வாக்கு கொடுக்கிறார்களோ, அவர்களுக்கே வோட் செய்யவேண்டுமென்றும் சொல்லுகிறார். சட்டசபையில் ஒரு காரியமும் செய்யமுடியாதென்று, நினைக் கிற ஒருவர் இன்னின்ன காரியங்கள் செய்வதாக வாக்குக் கொடுக்கிறவருக்கு வோட் கொடுங்கள் என்று சொல்வதானது, எவர் பெரிய புரட்டுக்காரரோ அவருக்கு வோட் கொடுங்கள் என்று சொல்வதுதானே கருத்தென்று எண்ண வேண்டும். சுயராஜ்யக் கக்ஷியார் சொன்னபடி நடக்கவுமில்லை; சொன்னபடி நடக்கவும் முடியாது என்றும் சொல்லிவிட்டு இன்னின்ன மாதிரி சொல்லி போய் வோட் கேளுங்கள் என்று சொல்லுவதினாலும், ஜாதி, மத, வகுப்பு வித்தியாசங்களில்லாமல் வோட் கொடுங்கள் என்று சொல்லுவதினாலும், ஒத்துழையாதார் எல்லாம் சட்டசபைக்குப் போகவேண்டுமென்று நினைத்ததி னாலும், அடுத்த தேர்தலில் முன்போலவே, பிராமணரல்லாதார்களுக்கு சட்டசபையில் ஆதிக்கம் வந்துவிடுமோவென்று பயப்படுவதாயும், அதற்கு ஏதோ சில வழிகள் கண்டுபிடிப்பதாகவுந்தான் இதிலிருந்து நாம் žயூகிக்க வேண்டியிருக்கிறதேயல்லாமல், வேறு ஒன்றும் நினைப்பதற்கிடமில்லை. ஆதலால், வோட்டர்கள் இந்த சட்டசபையானது, தேசத்திற்கு எவ்விதத்திலும் நன்மை செய்ய முடியாது என்பதை நன்றாய் உணர வேண்டும்.
சர்க்காருக்கு விரோதமில்லாமல், வகுப்பு நன்மைகளை உத்தேசித்து, ஏதாவது செய்து கொள்ள வேண்டுமானால், அவைகளுக்கு மாத்திரம் கொஞ்சம் சட்டசபை உதவும். இவ்விதமாகத்தான் அவைகள் ஆக்கப்பட்டு மிருக்கின்றன. அப்பேர்ப்பட்ட காரியங்களில் முக்கிய கருத்துடையவர்கள், அந்தந்த வகுப்பார்களையும், அந்தந்த வகுப்புக்கு நன்மையான கொள்கை யுடையவர்களையும், சட்டசபைக்கு அனுப்ப வேண்டுமேயல்லாமல், செய்ய முடியாத ஓர் காரியத்தை உத்தேசித்து, செய்யக்கூடிய காரியங்களை அலக்ஷி யம் செய்து வகுப்பு வித்தியாசமில்லாமல், சட்டசபையை நிரப்பி விடுவோ மேயானால், கஷ்டப்படும் வகுப்பாரும், தாழ்த்தப்பட்ட வகுப்பாரும், பிற்பட்ட வகுப்பாரும் இன்னும் அதிகக் கஷ்டப்படவும், தாழ்த்தப்படவும், பிற்பட வும்தான் முடியுமென்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆதலால், சட்டசபை முதலிய தேர்தல்களில் கலந்து கொள்ள வேண்டு மென்கிற ஆசையிருக்கிறவர்கள், கண்டிப்பாய் தங்கள் வகுப்பு நன்மையை மறந்துவிடக் கூடாதென்று நாம் எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு – கட்டுரை – 03.01.1926