வங்காளத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
இம் மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வங்காள சட்டசபையில் சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்த ஒரு பிராமணரல்லாத அங்கத்தினர் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதாவது:-
“இம்மாகாணத்தில் பற்பல வகுப்பினருடைய ஜனத் தொகைக்குத் தக்கபடி இந்த சபைக்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்கிற தீர்மானத்தைப் பிரேரேபித்தார். குறைந்த எண்ணிக்கை உள்ளவர்களான ஆங்கிலோ-இந்தியர், ஐரோப்பியர், இந்திய கிருஸ்தவர் முதலியவர்கள் தங்களுக்கு ஒன்றுமில்லாமல் போய்விடுமோ எனப் பயந்து இதை ஆnக்ஷபிக்கத் தொடங்கினார்கள். ஸர். அப்துர் ரஹிம் இவ்வகுப்பார்களுக்கும் சரியான பிரதிநிதித்துவம் கிடைக்கும் படியாக ஒரு திருத்தம் அசல் தீர்மானத்தோடு சேர்த்தார். அதாவது:-
“குறைந்த வகுப்பினர் முதலியவர்களுக்கும் போதுமான பிரதிநிதித் துவம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என்ற திருத்தத்தை பிரேரேபித்தார். இதற்கு விரோதமாயிருந்த சிலர், காஞ்சீபுரத்தில் செய்த தந்திரத்தைப் போலவே சட்டம் ஒழுங்கு என்பதன் பேரால் இதை நசுக்கிவிடப் பார்த்தார் கள். ஆனால் அக்கூட்டத்தின் தலைவர் காஞ்சீபுரத் தலைவர் போல் இல்லா மல் நேர்மையும் தன் காலிலேயே நின்று கொள்ளக்கூடிய சக்தியும் வாய்ந்த வராயிருந்தபடியால், இத்தீர்மானங்கள் ஒழுங்குதான் என்று சொல்லி ஓட்டுக்கு விடப்போகும் தருவாயில், அக்கிராசனாதிபதியை வம்புச் சண்டைக்கு இழுப்பது போல் சிலர் அத்துக்கு மீறிப் பேசி தாங்கள் அக்கிராசனாதிபதியால் வெளியிலனுப்பப்படவேண்டுமென்றே நடந்து கொண்டு வெளியில் போய் விட்டார்கள். பிறகு வெளியே போகப்பட்டவர்கள் ஒன்று கூடி அக்கிராசனாதி பதியை நீக்கிவிட ஒரு தீர்மானம் கொண்டு வருவதாகச் சொல்லிக் கொண்டு உள்ளே வந்தார்கள். அத்தீர்மானத்தையும் அங்கீகரித்து அக்கிராசனாதிபதி ஓட்டுக்கு விட்டதில் அக்கிராசனாதிபதியை நீக்கி விட வேண்டும் என்கிற தீர்மானம் தோல்வியுற்றது. ஆனபோதிலும் நிறைவேறின வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானத்தை எப்படியாவது ஒழிக்க மறுபடியும் சிலர் கூடிக் கொண்டு யோசனை செய்வதாய்த் தெரியவருகிறது.
குடி அரசு – கட்டுரை – 28.02.1926