மந்திரி சபை
தற்கால மந்திரி கட்சி அரசியல் ரீதியில் ஒன்றும் பயனுள்ளதாய் இல்லா விட்டாலும் செய்யவும் முடியாது என்பதாகவே வைத்துக் கொண்டாலும், சமூக சம்மந்தமாகவாவது ஏதாவது பிரயோஜனமுண்டா என்பதாக பார்த்தால் அதிலும் பார்ப்பனரல்லாதாருக்கு நமக்கு ஒரு பிரயோஜனமில்லாததோடு எதிர்க்கட்சியார் சொல்லுகிறபடி அதாவது ஸ்ரீமான் சுப்பராயன், சி. இராஜ கோபாலாச்சாரியாரும், எஸ். சீனிவாசய்யங்காரும் சொல்லுகிறபடியும், ஸ்ரீமான் ஏ. ரங்கநாத முதலியார், சர்.சி.பி. இராமசாமி அய்யரும், பெசண்டம் மையும் சொல்லுகிறபடியும், ஸ்ரீமான் ஆரோக்கியசாமி முதலியார், சர்க்காரும் மற்றும் மேற்கண்ட ஆசாமிகளும் சொல்லுகிறபடியும் ஆடுகிறவர்களேயல் லாமல் வேறென்ன? எத்தனைக்கெத்தனை இந்த மந்திரிகளை நிலைக்க வைத்திருக்கிறோமோ அத்தனைக்கத்தனை பார்ப்பன ஆதிக்கத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் நமது பார்ப்பனரல்லாதார் இதுவரை செய்து கொண்டிருந்ததையும் கெடுத்துக்கொள்ளவுமே உதவுமேயல்லாமல் மற்றபடி யாதொரு நன்மையும் உண்டாகாது. இம் மாதிரியாகப் பார்ப்பனர்கள் சொற்படி ஆடும் மந்திரிகளை வைத்துக் கொண்டிருப்பது பார்ப்பனரல்லாத சமூகத் திற்கே பெரிய அவமானமாகும். அதுமாத்திரமல்லாமல் 47 அங்கத்தினரைக் கொண்டதாக உள்ள ஒரு கட்சியானது தேசத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு சட்டசபையிலிருந்துகொண்டு 15 பேரைக் கொண்ட கட்சியானது மந்திரிசபை அமைத்து வாழ்ந்துவர விட்டுக் கொண்டிருப்பது புரட்டா அல்லவா? அரசியல் கொள்கைப்படி பார்த்தால் சுயராஜ்யக் கட்சிக்கு கொஞ்ச மாவது மானம், வெட்கம், யோக்கியப் பொறுப்பு இருந்திருக்குமானால் இம் மந்திரிசபை அரை நாழிகை கூட நிலைத்திருக்க முடியவே முடியாது. அவர் கள் தங்கள் சுயநலத்திற்காக திருட்டுத்தனமாகவும், அயோக்கியத்தனமாகவும் உதவி செய்து வருவதாக வைத்துக்கொண்டாலும் என்ன கொள்கையின் பேரில் ஜஸ்டிஸ் கட்சி வாய் மூடிக்கொண்டிருக்கிறது என்பது நமக்கு விளங்க வில்லை. மதுரை மகாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் விளம்பரம் செய்தபடி ஏன் இன்னமும் மந்திரி கட்சியை உடைக்கப் பிரயத்தனப்பட வில்லை? ஒரு சமயம் காங்கிரசில் சுயராஜ்யக் கட்சி பிரமுகர்களில் ஒருவ ரான ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் இந்த மந்திரி கட்சியை உடைப்பதாய்ச் சொல்லியபடி உடைத்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம் என்பதாக சொல்லவருவார்களேயானாலும் அது கொஞ்சமும் ஒப்புக் கொள்ளக்கூடிய சமாதானமல்ல. ஏனெனில் சுயராஜ்ஜியக் கட்சியார் நாணயமுள்ளவர்கள் அல்ல என்பதும், சொல்லுகிறபடி நடக்கும் வழக்கமில்லாதவர்கள் என்பதும் உலகமறிந்த விஷயம். அப்படியிருக்க அவர்களை எதிர்ப்பார்ப்பதாகச் சொல்லுவது சரியான சமாதானம் ஆகாது. தவிரவும், சுயராஜ்ஜியக் கட்சியார் தான் இரட்டை ஆட்சியை ஒழிப்பதாய் சொல்லுகிறவர்கள், முட்டுக் கட்டை போடுகிறவர்கள், உடைப்பதாய் சொல்லி ஓட்டுப் பெற்றவர்கள். ஆதலால் அவர்கள்தான் உடைக்கக் கட்டுப்பட்டவர்கள். நாங்கள் இரட்டை ஆட்சியை நடத்தி வைத்து மேற்கொண்டு சில திருத்தம் கேட்கிறவர்கள் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தால் அதுவும் ஒப்புக் கொள்ளக்கூடிய சமாதா னமல்ல. எப்படி யென்றால், ஜஸ்டிஸ் கட்சியார் அரசாங்கத்தையே எதிர்ப்ப தாகச் சொன்னவர்கள் மந்திரியை ஆதரிப்பது என்பது யோக்கியமான காரியமாகாது. அல்லாமலும் சுயராஜ்ஜியக் கட்சியார் ஜனங்களை ஏமாற்றி ஓட்டுப்பெற இப்படிச் சொன்னார்களே தவிர உண்மையாய் சொன்னவர்கள் அல்ல என்பது ஜஸ்டிஸ் கட்சியாருக்கே தெரியும். ஆதலால் அந்தச் சமாதானமும் சரியாகாது. தவிர, ஸ்ரீமான் சி.பி. ராமசாமி அய்யர் பம்பாயில் பேசிய போது ஜஸ்டிஸ் கட்சியார் வந்துவிடுவார்களே எனப் பயந்து இந்த மந்திரி சபைக்கு தேசத்தில் ஆதரவில்லாவிட்டாலும் நாங்கள் ஆதரிக் கிறோம் என்று சொன்ன பிறகு ஜஸ்டிஸ் கட்சியார் இம் மந்திரிசபையை வைத்துக் கொண்டிருப்பது பெரிய அரசியல் வெட்கக் கேடென்றே சொல்லு வோம். இம்மந்திரி சபையை உடைத்தெரியச் செய்யும் முயற்சியில் ஜஸ்டிஸ் கட்சியார் வெற்றிபெற்றாலும் பெறாவிட்டாலும் தமது கடமையைச் செய்துவிட்டதோடு சுயராஜ்ஜியக் கட்சியின் யோக்கியதையையும் வெளிக்கு காட்ட ஒரு சந்தர்ப்பத்தை உண்டாக்கினவர்கள் ஆவார்கள்.
ஆனால், ஜஸ்டிஸ் கட்சியார் இம்முயற்சியில் பிரவேசிக்கும் போது ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது சுயேச்சைக் கட்சி என்ற இந்த மந்திரிசபை உடைபட்டு விட்டால் பிறகு எந்தக் காரணத்தைக் கொண்டும் தாங்கள் இந்தத் தேர்தலில் ஏற்பட்ட சபையில் மந்திரி பதவியை ஒப்புக் கொள்வதில்லை என்ற பிரதிக்கினை செய்து கொள்ள வேண்டும். சுயராஜ்ஜியக் கட்சித் தலையிலேயே இதைக் கட்டி அடித்து அவர்கள் யோக்கியதையும் பார்த்துவிடவேண்டும். அவர்கள் போதுமான மெஜாரிட்டியாய் இருப்பதாகச் சொல்லிக்கொண்டும் மந்திரி பதவியை ஏற்க தைரியமில்லாமல் பயங்கொள்ளிகளாயிருப்பார்களானால் சர்க்காரே எடுத்துக் கொண்டு நடத்தட்டும் அல்லது சட்டசபையைக் கலைக்கட்டும் என்கிற எண்ணத்தோடு இருக்க வேண்டுமே அல்லாமல் சர்க்கார் தயவாலோ அல்லது மற்ற கட்சியார் தயவாலோ நடத்தக்கூடிய மந்திரி பதவியை ஒப்புக்கொள்ளக் கொஞ்சமாவது ஆசை வைப்பது சுயமரியாதை உள்ள எந்தக் கட்சிக்கும் யோக்கியமாகாது என்பதை வற்புறுத்துகிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 27.02.1927