தற்கால நிலைமை
பாலக்காட்டில் சொற்பொழிவு
நமது நாட்டின் தற்கால நிலைமையைப் பற்றி பேசுவதென்றால் நினைக்கும் போதே வேதனையாகவும் துக்கமாயும் இருக்கிறது. எவ்வளவோ பெருமையாக இருந்ததாகச் சொல்லப்படும் நமது நாடு இன்று இருக்கும் நிலை, அந்நிய ஆக்ஷிக்கு அடிமையாகி- அந்நிய ஆக்ஷி என்றால் மனிதத் தன்மைக்கு அந்நிய – அதாவது, மனிதனுக்கு மனிதன் பிடித்து தின்னும் மாதிரியில் வலியவனுக்கு எளியவன் ஆகாரமாய் நடைபெற்று வருகின்றது. நமது நாட்டின் மதக் கொள்கைகளின் பலன்களில் இவ்வந்நிய ஆட்சி ஒன் றென்றும், மதத்தின் பேரால் நம் தேசத்துக்கு ஏற்பட்ட கெடுதியின் பலனாய் நமது நாடு இக்கெதியை அடைந்தது, ஆதலால் வெறும் ராஜீய சீர்திருத் தத்தைப் பேசிக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை, நமது மதத்தின் பேரால் ஏற்பட்ட ஜாதி வித்தியாசங்களில் மனிதர்கள் பிறவியிலேயே பிராம ணன் உயர்ந்த ஜாதியான் என்பதும், பஞ்சமன் தாழ்ந்த ஜாதியானென்பதும் நமது நாட்டை விட்டு ஒழிந்தாலல்லாது நமது நாடு சுதந்திரமும், சுயமரியா தையும், சுய ஆட்சியும் பெற்று வாழ முடியாது. தீண்டாமை யென்பது ஓர் மதத்திலும், நாட்டிலுமிருப்பது அம்மதத்திற்கே பெரிய இழிவு. பிறவியி லேயே உயர்ந்த ஜாதியாரென்று ஓர் கூட்டத்தாரைக் கொண்டாடுவது, அந்த நாட்டின் சுயமரியாதைக்கும் மற்றும் பல வகுப்புக்குள் பெரிய இழிவுக்கும் ஆதாரமாகும். ஆதலால் நமது நாட்டில் மனிதப் பிறவியில் உள்ள உயர்வுத் தாழ்வு வித்தியாசங்களை வேரோடு களைந்து எறிவதுதான் தேசத்துக்கும், சமூகத்துக்கும் ஓர் மனிதன் செய்ய வேண்டிய முக்கியக் கடமை. இவற்றை விட்டுவிட்டு ராஜாங்கத்தினிடத்தில் சட்டசபைகள் முதலிய ஸ்தாபனங்களின் மூலம் தேசத்திற்கு சீர்திருத்தம் பெறுவேனென்று சொல்லுவது பொது தேச சேவையாகாது. அது சுயநலம், சுய ஜாதி நலச் சேவையே தானாகும். ராஜீய விஷயத்திலும் ஏதாவது சிறு பாகமாவது நமது நாட்டுக்கு உபயோகப்படும் படியாக வேலை செய்ய வேண்டுமானால் அது எல்லா ராஜீய உரிமைகளும் நமது நாட்டு சகல வகுப்பாருக்கும் சமனாய் கிடைக்கும்படி ஏற்பாடு செய்வது தான் ஜாதி வகுப்பு வித்தியாசங்களின் கொடுமைகளை ஒழிக்கும். இவ்விஷ யங்களில் கவலை எடுத்துக் கொள்ளாமல் பொதுவாக நாடு, நாடு என்று பேசிக்கொண்டு காலத்தைக் கடத்துவது, சுயகாரியத்தை கவனிப்பதோடு அல்லாது, நாட்டுக்கு ஒரு nக்ஷமத்தையும் விளைவிக்காது. வகுப்பு சமஉரிமைகளை அலக்ஷியம் செய்துவிட்டு ராஜீய உரிமை என்று பேசிக் கொண்டு நடத்தப்படும் எந்தக் காரியத்தையும், சம உரிமைகள் இல்லாத வகுப்புகள் பின்பற்ற முடியாது. அவைகள் வந்து, வகுப்புரிமை சமமாய் அடையும் வரையில் குறுக்கிட்டுக் கொண்டுதான் இருக்கும். ஒரு வகுப்பாரை ஏமாற்றி ஒரு வகுப்பார் முன்னேறுவதற்கான ராஜீய இயக்கங்களை தேச நல இயக்கமெனக் கொண்டு பொதுமக்கள் ஏமாந்து பின்பற்றுவதும், அதற்கும் சில அறியாதார்களும் சுயநலக்காரர்களும் ஆக்கங் கொடுத்து வந்தாலும் முடிவில் அது வீழ்ந்து போகுமென்பது உறுதி. அதற்கு உதாரணமாக ராஜீய உரிமை பெறுவதற்கு தலைசிறந்து விளங்குவதாய்ச் சொல்லப்படும் சுயராஜ்யக் கட்சி யென்னும் ஓர் போலிக் கட்சி தென்னாடு போன்ற பல இடங் களில் பாமர ஜனங்களை ஏமாற்றி வந்தாலும், அநேக இடங்களில் அதன் உண்மைத் தெரிந்து அது உடைபட்டும் இழிவுபட்டும் வருகின்றது. அது வரப்போகும் சட்டசபை முதலிய தேர்தல்களில் ஆக்கம் பெற பலவித சூழ்ச்சி களும் விளம்பரங்களும் செய்து வருகின்றது. சென்ற தேர்தல்களில் அக்கட்சி செய்த சூழ்ச்சிகளையும், வாக்குத் தவறுதல்களையும் நாணயக் குறைவுகளை யும் பொதுஜனங்கள் அறிந்திருந்தும் இவ்வருடம் அவைகள் அறியாமல் மனிதர்கள் கலங்குகிறார்கள். அதற்கு காரணம் ஸ்ரீமான் சி.இராஜகோபாலாச் சாரியார் போன்றவர்கள் இக்கட்சிக்கு அநுகூலமாய் வேலை செய்வது தான். ஸ்ரீமான் ஆச்சாரியார் சுயராஜ்யக் கட்சியை ஆதரிப்பதின் நோக்கமெல்லாம் சட்டசபையை பெரும்பாலும் பிராமணர்களே கைப்பற்ற வேண்டுமென்கிற எண்ணந்தானென்று நான் நினைக்கிறேன். ஸ்ரீமான் சத்தியமூர்த்தி போன்றோர் கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களெல்லாம் பிராமணரல்லாத தலைவர்களைப் பற்றி பிராமணரல்லாதாருக்குள்ளாகவே அருவருப்பு ஏற்பட்டு பிராமண ரல்லாத வோட்டர்களெல்லாம் பிராமணர்களுக்கே வோட் கொடுத்து சட்ட சபையை பிராமணாதிக்க சபையாக மாற்றவேண்டும் என்கிற கருத்துக் கொண்டுதானென்றும்,
தற்காலச் சட்டசபைகளும் தங்கள் தங்கள் வகுப்பு நலத்தை நாடு வோருக்கு மாத்திரம் ஏதாவது கொஞ்சம் பிரயோஜனப்படுமேயல்லாமல் வேறொரு காரியத்திற்கும், அதாவது வரிப்பளுவை குறைக்கவோ, மது பானத்தை ஒழிக்கவோ, உண்மையான சுய ஆட்சிப் பெறவோ, ஏழைகள் பிழைக்கவோ, தரித்திரத்தை ஒழிக்கவோ, தொழிலாளர்களைக் காப்பாற்றவோ முடியாது. ஆதலால் வகுப்பு சமத்துவத்திற்கும், வகுப்புரிமைக்கும், வகுப்பு முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும் என்னும் கவலையுள்ளவர்கள் சட்டசபைக்குப் போவதாய் இருந்தால், அவ்வித உண்மையைச் சொல்லி போவதுதான் ஒழுங்கு, பொதுஜனங்களும் சட்டசபையின் மூலம் இக்காரியங் களைச் சீர்த்திருத்தம் செய்து கொள்ளலாமென்று நினைத்தால் வகுப்புரிமை யையும் வகுப்பு சுயமரியாதையையும் பற்றி சட்டசபையில் உழைக்கிறேன் என்று மனப்பூர்வமாய் ஒப்புக்கொள்ளுகின்றவர்களுக்குத்தான் வோட்டுக் கொடுக்க வேண்டும், மற்றபடி அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்று முடியாத காரியங்களைச் சொல்லி ஏமாற்றுகிறவர்கள் வார்த்தையை நம்பி பிராமணாதிக்கத்தை நிலைநிறுத்தப் பாடுபடும் பிராமணர்களுக்கோ, அவர்கள் உதவியாலும், அவர்கள் பிரசாரத்தாலும், சட்டசபைக்குப் போய் அவர்களுக்கு அடிமையாயிருக்கும் ஆட்களுக்கோ வோட்டுக் கொடுத்து இழிவுபடாமல் ஜாக்கிரதையாயும், உங்கள் கையாலேயே கொள்ளிக் கட்டை யை எடுத்து உங்கள் தலையை சொறிந்துக் கொள்வது போல் இராமல் வோட் விஷயத்தில் நீங்கள் புத்திசாலித்தனமாய் இருக்க வேண்டுமென்றும்,
வகுப்புநலன், வகுப்புரிமை ஆகியவைகள் சட்டசபையிற் போய் அடையவேண்டிய அவசியம் இல்லை; வெளியிலேயே பார்த்துக் கொள்ள முடியும். “ஆதலால், தேச நலத்திற்கு தாங்கள் பாடுபட வேண்டும்” என்கிற எண்ணம் யாருக்காவது இருக்குமானால், அவர்கள் கண்டிப்பாய் சட்ட சபையைப் பகிஷ்காரம் செய்துவிட்டு கதர் அணிவதிலும் கதர் உற்பத்தி செய்வதிலும், தீண்டாமையை ஒழிப்பதிலும் பிரயத்தனப்படவேண்டும். கதரை நாம் கை விட்டு விட்டு அந்நிய துணியை ஆதரித்ததினாற்தான் நமது நாட்டில் பெரும்பாலும் தொழிலாளிகளாயிருக்கிற ஏழைகளுக்குத் தொழில் அற்றுபோய் விட்டது. ஓர் காலத்தில் இந்திய ஸ்திரீ தர்மத்தைப் பற்றி எவ்வ ளவோ பெருமையாய் எழுதி வைத்துக்கொண்டும் பேசிக் கொண்டுமிருந்த இந்திய ஸ்திரீ தர்மம் மிகவும் இழிவான நிலையில் இருக்கிறதென்றும், கற்பு என்பது நமது நாட்டுப் பெரும்பான்மையான ஸ்திரீகளுக்குக் காக்கப்படாத கடினத் தத்துவமாய் போய்விட்டது. ஜீவனத்திற்காக விபசாரம் செய்ய வேண் டிய ஸ்திரீகள் நமது நாட்டில் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டு வருவதற்கு நமது நாட்டுக் கைராட்டினங்கள் அருகிப்போனதுதான் காரணம் தொழிலாளி களின் தரித்திரத்தை ஒழித்து ஸ்திரீகளின் தர்மத்தைக் காப்பாற்ற வேண்டுமா னால், கதரைக் கைக்கொண்டல்லாமல் வேறு ஒரு சாதனத்தாலும் முடியாது, நமது நாட்டுப் பெருமையை ஒழிக்க ஸ்திரீ தர்மங்களை அழித்து, தொழிலாளர் களையும், ஏழைகளையும் பட்டினிப்போட்டு , நாம் இக்கதியில் இருப்பதற்குக் காரணம் நாம் சர்க்கார் பேரிலேயே சொல்லுவது முழுவதும் உண்மையாகாது, சர்க்காரிடம் ஒரு பாகம் இருந்த போதிலும், பெரும்பாகம் நாமேதான் காரண மாய் இருந்து வருகிறோம்.
நாம் எல்லோரும் கதரை உடுத்துவதாயிருந்தால் நமது சர்க்காருக்கு நமது நாட்டின் பேரில் இவ்வளவு ஆசையிருக்காது; நமது ஜனங்களுக்கும் இவ்வளவு பட்டினி கிடக்கமுடியாது; நமது நாட்டுப் பொருள்களும் அந்நிய நாட்டுக்குக் கொள்ளை போகாது. உதாரணமாக, ஒரு மனிதன் 12 அணாவுக்கு ஒரு கெஜம் அந்நிய நாட்டு மல் துணி வாங்குவானேயானால், அவன் 10 அணா 9 பைசா நமது நாட்டிலிருந்து அந்நிய நாட்டுக்கு அனுப்பிக் கொடுத்து 10 அணா 9 பைசா செலவில் தங்கள் வாழ்நாளைக் கழிக்கக்கூடிய இரண்டு குடும்பத்தை நமது நாட்டில் பட்டினி போட்டதற்கு பொறுப்பாளியாகிறான். ஒரு கெஜம் மல்லில் உள்ள பஞ்சின் விலை ஒன்றேகால் அணாதான் பெறும்; பாக்கி பத்தே முக்காலணாவும் அதன் நூல் நூற்பதற்கும், நெசவுக்குமாகவும் அந்நிய நாட்டினருக்குக் கொடுக்கிறோம். அந்த நூற்றல் வேலையை நமது சகோதரிகளுக்குக் கொடுத்து அந்த நெசவு வேலையை நமது சகோதரர் களான நெசவுக்காரர்களுக்குக் கொடுத்து இருந்தால், இந்த இரண்டு குடும்பங் களும் ஒருநாள் காலத்தை கழித்து இருக்குமா? அல்லவா? ஒரு கெஜம் அந்நிய நாட்டுத் துணி வாங்குவதினாலேயே ஒரு நாளைக்கு 2 குடும்பங் களை பட்டினி போடத்தகுந்த பணத்தை அந்நிய நாட்டுக்கு அனுப்புகின்றோ மென்றால், நீங்கள் அணிந்துக் கொண்டிருக்கும் இவ்வளவு துணிக்கும், நீங்கள் வருடமெல்லாம் வாங்கும் கோடிக்கணக்கான கெஜத் துணிக்கும், எவ்வளவு பேரைப் பட்டினி போட்டிருக்கின்றீர்களென்று கவனித்துப் பாருங் கள். எவ்வளவு ஸ்திரீகளை தொழிற் செய்ய வகையில்லாமல் தெருவில் முடுக்கி அவர்களின் கற்பை இழக்கக் கட்டாயப்படுத்துகின்றீர்களென்பதை நினைத்துப்பாருங்கள்.
ஆதலால், மடங்கள் கட்டுவதும், அன்னதானம் செய்வதும், மடாதிபதி களென்போருக்குப் பணத்தைக் கொடுத்து சோம்பேறிகளுக்குப் பொங்கிப் போடச் செய்து, அவர்கள் காலை கழுவின தண்ணீரைத் தீர்த்தமென்று உட் கொள்வதும், புண்ணியமும், மோக்ஷமும், அன்னதானமும், ஜீவ காருண்ய மும், பாவமன்னிப்பும் ஒருக்காலும் ஆகவே ஆகாது.
ஆகையினால், நீங்கள் ஒவ்வொருவரும் கதரை ஆதரித்து தேசத் தைக் காப்பாற்ற வேண்டும். தேவஸ்தான ஆக்டைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வேண்டுமென்று காரியதரிசி ஸ்ரீமான் மாணிக்கம்பிள்ளை அவர்கள் கட்டளை இடுவதால் அதைப் பற்றியும் சில வார்த்தைகள் சொல்லுகிறேன்.
சிலர் உங்களை ஏமாற்றி தேவஸ்தான ஆக்டானது, ஹிந்து மதத்திற்கு பெரிய ஆபத்து; ஹிந்து மத தர்ம ஸ்தாபனங்களிலும், ஹிந்து மதத் தத்துவத் திலும் சர்க்காரார் பிரவேசித்து விட்டார்கள்; ஜஸ்டிஸ் கட்சியாரென்று சொல் லப்படும் பிராமணரல்லாத மந்திரிகள் அதற்கு இடங்கொடுத்து மதத் துரோகி களாகி விட்டார்கள்; அவர்களை அந்த ஸ்தானத்தை விட்டு அகற்றி விட்டு தேவஸ்தான சட்டத்தை அழிக்கக் கூடியவர்களுக்கும், அழிப்பதாய் சொல்லி வாக்குறுதி கொடுக்கிறவர்களுக்குமே நீங்கள் வோட்டுக் கொடுத்து அவர் களை சட்டசபைக்கு அனுப்பவேண்டுமென்றும் மற்றும் பல மாதிரியாகவும் பலர் சூழ்ச்சிப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
பிராமணரல்லாதாரிலேயும் பலர் இதை நம்பிக்கொண்டும், சிலர் பிராமணர்களிடத்தில் பணம் வாங்கிக்கொண்டும், அவர்கள் தயவை எதிர்ப் பார்த்துக்கொண்டும் இதேமாதிரி சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். நீங்கள் இவற்றைக் கொஞ்சமும் நம்பக்கூடாது. முதலாவது நமது தர்ம ஸ்தாபனங் களும், மடாதிபதிகளும் யோக்கியமாய் நடந்து வருகிறார்களா வென்பதை நீங்களே யோசித்துப் பார்க்க வேண்டும். மதத்தை உத்தேசித்துத் தர்ம ஸ்தாப னங்களின் பேரால் ஹிந்து மடாதிபதிகளுக்கும், ஹிந்துக் கோவில்களுக்கும், வருடம் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் வரும்படி வருகிறதென்றும், இந்த 2 கோடி ரூபாயில் பெரும் பாகம் தாஸி – வேசிகளும், கள்ளு-சாராயமும், வக்கீல்களும் – கோர்ட்டுகளும், சோம்பேறி பிராமணர்களும், மற்றும் உபயோகமற்ற ஆட்களும் சாப்பிட்டுக்கொண்டு ஹிந்து மதத்தின் பெருமையையும், பிராமணரல்லாதாரின் சுயமரியாதையையும் அழித்து இழிவை உண்டாக்கவும் உபயோகப்படுகின்றதேயல்லாமல், தேசத்திற்காவது, மதத்திற்காவது, தமிழ் நாட்டில் உரிமையுள்ளவர்களும், பெரும்பான்மையானவர்களுமான பிராமண ரல்லாதாருக்காவது எள்ளளவு பயன்படுகிறதா? இவற்றைக் காங்கிரஸ் ஏற்பட்ட காலமுதற்கொண்டே அதாவது 30, 40 வருடக் காலமாகவே நம் நாட்டவர் அறிந்து காங்கிரஸ்களிலேயும், மாகாண ஜில்லா தாலூகா மகா நாடுகளிலேயும் தேவஸ்தான ஆக்ட் ஏற்படுத்தும்படி பிரேரேபனைகள் கொண்டு வந்து சர்க்காரைக் கேட்டுக்கொண்டு வந்திருக் கின்றார்கள். இந்த 2 கோடி ரூபாயும் வரும்படி வருவதற்குப் பொது ஜனங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டுச் சம்பாதித்துக் கொடுத்திருக்க வேண்டும். கொண்டு வந்து கொடுப்பவர்கள் எவ்வளவு செலவு செய்து கொண்டு -கஷ்டப்பட்டுக் கொண்டு வந்து கொடுத்திருக்க வேண்டும். உதாரணமாக, திருப்பதி தேவஸ் தானத்திற்கு வருஷத்தில் சுமார் 20 லக்ஷம் ரூபாய் வரும்படி வருகிறது. இந்த 20 லக்ஷ ரூபாய் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலுமுள்ள ஹிந்துக்களால் வழிச் சிலவு செய்து கொண்டு போய், கால்- அரை- ஒன்று- பத்து- நூறு- ஆயிரம்- பதினாயிரமாக ஹிந்துமத பக்தர்கள் என்போர்களால் செலுத்தப்படுகிறது. இப்படிச் செலுத்த சிலவு தொகை 20 லக்ஷத்துக்கு குறையாமல் 30 லக்ஷமென்றுக் கூடச் சொல்லலாம். ஆக திருப்பதி கோவிலுக் காக மாத்திரம், இந்துக்களுடைய பணம் இந்து மதத்தின் பேரால் வருஷம் ஒன்றுக்கு 50 லக்ஷம் செலவாகிறதென்றால், இன்னும் மற்றுமுள்ள கோவில் களுக்கும், நதிகளுக்கும் ஆக எவ்வளவு கோடி ரூபாய் செலவாய்க் கொண்டி ருக்கும். ஒட்டு மொத்தம் கணக்குப் பார்த்தால் தமிழ் நாட்டில் மதத்திற்காக, கோவில்களுக்கும், வைதீகச் சடங்குகளுக்கும், பிராமணர்களுக்காகவும் ஹிந்துக்களால் செலவு செய்யப்படும் பணம் சர்க்காரால் வசூல் செய்யப்படும் வரி வசூல் பணத்திற்கு கூடுதலாயிருக்குமே தவிர குறையாதென்பதுதான் எனது அபிப்ராயம். எப்படியென்றால் ஒரு விதத்திலும் சர்க்காருக்குக் காலணாக்கூட வரி கொடுக்க அவசியமில்லாதவன், மதத்தின் பேரால் கோவிலுக்கும், வைதீகச் சடங்குகளுக்கும் , குருக்களுக்கும், மடாதிபதிகளுக் குமாக 1-10 ரூபாய் கணக்காக ஏறக்குறைய ஒவ்வொரு வருமே செலவு செய்து கொண்டுதான் வருகிறார்கள்.
ஆகையால் சர்க்கார் வரியைவிட மதவரி அதிகமிருக்குமென்பதில் நீங்கள் யாரும் ஆச்சரியப்படமாட்டீர்கள். இப்படிச் செலவு செய்தும், மதம் என்றால் என்ன? தெய்வம் என்றால் என்ன? புண்ணியம் பாவம் என்றால் என்ன? என்பது கூடத் தெரிவதற்கில்லாமல், பிராமணனை வணங்கிக் கொண்டு, அவன் சொற்படியும் அவன் எழுதி வைத்த புத்தகப்படியும் நடப்பது தான் ஹிந்து மதமென்றும், பிராமணன் தனது வரும்படிக்காகக் காட்டிக் கொடுத்து பூஜை செய்வதுதான் தெய்வமென்றும் அவன்பிழைக்க வழி ஏற்படுத்துவதுதான் கோவிலென்றும், பிராமணனுக்குக் கொடுப்பது தான் புண்ணியமென்றும், அவனுக்கு கொடுக்கக் கூடாதென்று சொல்லுவதுதான் பாவமென்றும், அறிந்து கொண்டு இருக்கின்றோமேயல்லாமல் இவ்வறி வுக்கே இவ்வளவு பணச் செலவும் உபயோகப்படுகிறதே அல்லாமல், உண்மையில் ஆத்மார்த்தத்திற்கென்று சொல்லப்படும் ஹிந்து மதத்திற்கு ஏதாவது பிரயோஜனப்படுகிறதா? ஹிந்து மதமே இன்னதென்று, ஹிந்துக் களிலேயே 100-க்கு 99 3/4 ஹிந்துக்களுக்கு இன்னமும் தெரியவே தெரியாது. ஒரு மகமதியரை மகமதிய மதம் என்னவென்று கேட்டால் தங்களுடைய மதத் திற்கு ‘மகமது நபி’ ஆதாரப் புருஷரென்றும், மகமதுவின் கற்பனைப்படி நடப்பதென்றும், மகமதுவைப் பின்பற்றுவதென்றும் சொல்லுவார்.
ஒரு கிறிஸ்தவரைக் கேட்டால் தங்கள் மதத்திற்கு கிருஸ்துநாதர் ஆதார புருஷரென்றும், கிருஸ்துவைப் பின்பற்றுவதென்றும், கிருஸ்துவின் கற்பனைப்படி நடப்பதென்றும் சொல்லுவார். அதுபோல் ஒரு ஹிந்துவைக் கேட்டால் தங்கள் மதத்திற்கு தாங்கள் யாருடைய கற்பனைப்படி நடக்கிற தென்றும், யாருடைய கற்பனையை பின்பற்றுகிறார்களென்றும் தங்களுக்கு யார் மத கர்த்தாவென்றும் சொல்லுவதற்கோ, தெரிந்தவர்கள் இருக்கிறார்களா வென்றும் தாங்கள் யாரைப் பின்பற்றுகிறோமென்றும், தாங்கள் யார் கற்பனைப் படி நடக்கிறோமென்றும் சொல்லத் தகுந்தவர் 1000 – ல் ஒருவர் கூட இருப்பதாகச் சொல்ல முடியாது. ஆனால் “இதெல்லாம் நமக்கு எதற்கு? ஐயர் சொன்னால் சரி என்றும், அதெல்லாம் கேட்பதுகூட பாவமென்றும்” சொல்லத்தான் கற்றிருக்கிறார்கள். இப்படி கோடிக்கணக்கான ரூபாய் மதத் திற்காக, நம் மதத்தினர்களால் செலவு செய்யப்பட்டுவிட்டு, மதம் இன்ன தென்றே அறியாதிருப்பார்களானால், அம் மதம் எப்படி ஒரு தேசத்தில் நிலைத்திருக்கமுடியும்? இம்மாதிரி மதத்திற்குக் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், தூங்காமலும், சாப்பிடாமலும், பட்டினி கிடந்து கொண்டு அநாவசி யமாய் ஏன் செலவு செய்யப்பட வேண்டும்?
மதத்திற்காக செலவு செய்து பாப்பரான குடும்பங்கள் நமது நாட்டில் வருடத்திற்கு வருடம் எவ்வளவு வளர்ந்துக் கொண்டு வருகின்றது. வைதீகச் சடங்குகளுக்காகச் செலவு செய்து பாப்பராய்க் கொண்டு வரும் குடும்பங்கள் எவ்வளவு வளர்ந்துகொண்டு வருகின்றது. இவற்றைப்பற்றி இதுவரை யார் கவனித்து இருக்கிறார்கள்? இவற்றை எல்லாம் உணர்ந்துதான் தற்காலமுள்ள பிராமணரல்லாத மந்திரிகள் பிரயத்தனப்பட்டு தேவஸ்தானச் சட்டமென் பதாக ஓர் சட்டம் உண்டாக்கியிருக்கிறார்கள். அச்சட்டத்தில் குற்றமுள்ள பாகம் இன்னதுதான் என்று நாளது வரையில் ஒருவராவது எடுத்துக் காட்டவே யில்லை. வீணாக மதம் போச்சு, மதம் போச்சு என்று சப்தமிடு கின்றார் களேயல்லாமல் குற்றமென்னவென்று சொல்லுவதைக் காணோம். பாமர ஜனங்களையும், ஜஸ்டிஸ் கக்ஷியார் இந்த சட்டத்தைச் செய்தனர் என்கிற காரணத்திற்காக சட்டத்தை சந்தேகிக்கும்படி சில பிராமணர்களும், பிராமணப் பத்திரிகைகளும் பிரசாரம் செய்து வெற்றிப் பெற்று வருகின்றனர். ஏனெனில், ஜஸ்டிஸ் கட்சி என்றாலே, அது தேசத் துரோகக் கட்சி என ஜனங்கள் நினைக் கும்படியாக பிராமணர்களும் அவர்களால் கீர்த்திப் பெற்று வயிறு வளர்க்கும் பிராமணரல்லாதாரும் பொய்ப் பிரசாரம் செய்து ஜஸ்டிஸ் கட்சியார் பேரில் ஒருவித தப்பபிப்பிராயத்தை ஜனங்களுக்குள் உண்டாக்கி வைத்து விட்டப் படியால் பாமர ஜனங்களும் ஏமாந்து நம்பி விடுகிறார்கள்.
இதனால் ஜஸ்டிஸ் கட்சியாரால் நமது நாட்டுக்கு விளைந்திருக்கும் நன்மைகளும் மறைந்து போவதோடல்லாமல் அதையே ஜனங்கள் விரோத மாக நினைக்கும்படியாயும் ஏற்பட்டு வருகின்றது. காரணமென்னவென்றால் இந்தச் சட்டத்தின்படி தர்மச் சொத்துக்களை பிராமணர்களேதான் சாப்பிட வேண்டும் என்பதும் பிராமணர்களுக்குக் கொடுத்தால்தான் புண்ணியம் என்பதும் பிராமணர்கள்தான் இந்து மத தத்துவத்தை அறியலாமென்பதும் பிராமணன்தான் சாமியைத் தொடலாம், பிராமணன்தான் வேதம் முதலியவை படிக்கலாமென்பதும், அவனுக்கு பணம் கொடுத்தாற்தான் சாமி தயவு சம்பா திக்கலாமென எண்ணுவதுமான குருட்டு நம்பிக்கைகள் நமது நாட்டில் ஒழிந்து போய்விடும். ஆதலாற்தான் பிராமணர்கள் இதை எதிர்க்கிறார்கள்; சட்டசபை களிலும் இதை ஒழிப்பதற்குப் பிரயத்தனப்படுகிறார்கள்; ஐக்கோர்ட்டிலும் வியாஜ்யம் தொடுத்திருக்கின்றார்கள். மடாதிபதிகளென்போர்களிலும் ஆச்சாரியார்களென்போர்களிலும்; லோககுருவென்போர்களிலும் பலர் இப் பிராமணர்களுக்கு பணத்தைக் கொடுத்துச் சீமைக்கு அனுப்புவதும், சட்ட சபையில் ஸ்தானம் சம்பாதிப்பதற்காக வோட்டர்களுக்கு லஞ்சம் கொடுப் பதற்கும் பிரசாரர்களுக்கு, பிராமணர்களுக்கு வோட் வாங்கிக் கொடுப்பதாகச் செலவுக்குப் பணம் கொடுத்துக் கொண்டும் வருகின்றார்கள். ஆதலால் நீங்கள் இவற்றைக் கண்டு ஏமாந்து போகாமல் உங்களிடத்தில் யார் வந்து வோட் கேட்டாலும், உங்களுக்கு கொடுக்க இஷ்டமிருக்கும் பக்ஷத்தில் தேவஸ்தான ஆக்டைக் கெடுக்காமல் காப்பாற்றுகிறோம் என்று யார் சொல்லு கின்றார்களோ அவர்களிடம் பிரமாணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கே வோட் கொடுக்கவேண்டும். அப்படிக்கில்லாமல் ஏமாந்து நீங்கள் உங்களு டைய வோட்டுகளை கவலையற்றுப் பொய்ப் பிரசாரங்களைக் கண்டு ஏமாந்து அநாவசியமாய் உபயோகப்படுத்தி விடுவீர்களேயானால் பின்னால் உங்கள் தேசத்திற்கும் மதத்திற்கும், சமூகத்திற்கும், பெரிய ஆபத்து ஏற்படுவதோடு நீங்களும் தீண்டாதார்களாகிவிடுவீர்களென்பதை ஞாபகப்படுத்துகிறேன்.
குறிப்பு : 15.12.1926 ஆம் நாள் பாலக்காட்டில் சொற்பொழிவு
குடி அரசு – சொற்பொழிவு – 28.02.1926