பயப்படுகிறோம் மகாத்மா காந்தியின் தமிழ்நாட்டு விஜயம்
இது ஒரு சங்கராச்சாரி விஜயமாகிவிடும் என்பதாகவே பயப் படுகிறோம்.
மகாத்மா காந்தியவர்கள் உலகம் போற்றும் பெரியார் என்பதிலும், பரிசுத்தமான எண்ணமுடையவர் என்பதிலும், மக்களுக்கு நன்மை செய்வ தில் உண்மையான ஆசை உள்ளவர் என்பதிலும், அதே கருத்துக்கொண்டு உழைக்கிறார் என்பதிலும் யாருக்கும் எவ்வித அபிப்பிராய பேதமுமிருக்க நியாயமில்லை. ஆனபோதிலும் அதோடுகூடவே மகாத்மா காந்தியவர்கள் நம் நாட்டுப் பார்ப்பனர்கள் கையில் சிக்கி இருப்பவர் என்பதையும், நம் நாட்டு விஷயங்களைப் பார்ப்பனர்கள் மூலம் அறிந்து பார்ப்பனக் கண்ணாடியினால் தான் பார்த்தறியக் கூடிய நிலைமையில் இருக்கிறார் என்பதையும், நாம் மறைப்பதில் பிரயோஜனமில்லை. சாதாரணமாக இந்துமுஸ்லீம் அபிப்பிராய பேதங்கள் விஷயமாக மகாத்மா காந்தியவர்கள் எவ்வளவு பேசினார், எவ் வளவு எழுதினார், எவ்வளவு பட்டினி கிடந்தார், எவ்வளவு வருத்தப்பட்டார் என்பதைப் பற்றி வாசகர்களுக்கு நாம் எடுத்துக்காட்டவேண்டியதே இல்லை. அப்பேர்ப்பட்ட மகாத்மா பிராமணர் பிராமணரல்லாதார் அபிப்பிராய பேதம் என்பதைப்பற்றி நாளிதுவரை என்ன பேசினார், என்ன எழுதினார், என்ன பட்டினி இருந்தார், என்ன வருத்தப்பட்டார் என்று கேள்ப்பதுடன், குருகுல கிளர்ச்சியான கவனிக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் வந்தபோதுங்கூட ஜாக்கிர தையாய் இரண்டுபேருக்கும் நல்ல பிள்ளை ஆவதுபோல் தப்பித்துக் கொண்டாரே யொழிய இப்படித்தான் நடக்கவேண்டும் என்று கண்டிப்பாய் சென்னாரா, எழுதினாரா, என்பதை யோசியுங்கள். குரு குல அக்கிரமத்தைப் பற்றி காங்கிரஸ் மகா சபையில் வெளிப்படையாய் ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் எடுத்துச்சொன்ன காலத்தில் மகாத்மா கேட்டுக்கொண்டுதான் இருந்தார். தமிழ் நாட்டில் அதைப்பற்றித் தீர்மானங்களும், அதற்காக ஸ்ரீமான்கள் ராஜ கோபாலாச்சாரியார், டாக்டர் ராஜன் போன்ற பார்ப்பனத் தலைவர்கள் ராஜீனா மாக்களும், ஸ்ரீமான் எம். கே. ஆச்சாரி போன்ற வர்ணாசிரமிகளின் வாய்க் கொழுப்புகளும் மகாத்மா காந்திக்கு தெரியாமல் இருக்குமென்று யாரும் நம்பிவிடமுடியாது. இப்பேர்ப்பட்ட விஷயங்களுக்கு எதாவது ஒரு சிறு சமாதானம் எழுதினாரா என்பதை யோசித்துப்பாருங்கள். இவைகள் நாட்டு நலனுக்கு அவ்வளவு முக்கியமானதல்ல என்று சொல்லிவிட முடியுமா?
ஒத்துழையாதாரரான ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் திருப்பதி கோர்ட்டில் போய் வக்கீலாக வழக்காடி கேஸ் ஜயித்ததற்கு வாழ்த்துக் கூறினார். ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியார், தமது தோப்பில் கள்ளிறக்க மரம் கொடுத்த ஸ்ரீமான் வெங்கிட்டரமண அய்யங்காருக்கு கிராமம் கிராம மாய் சுற்றி ஓட்டு வாங்கிக் கொடுத்ததை மிக நல்ல காரியமென்று ஆதரித்தார். “சுயராஜ்யக்கக்ஷியார்கள் சட்டசபையில் கள்ளை நிறுத்துவதாக ஒப்புக் கொண்டது மிகவும் நல்லது, ஆதலால் அவர்களுக்கு ஓட்டுக்கொடுங்கள்” என்கிற மாதிரியாகவும் எழுதினார். இதன்மூலம் சட்டசபையினால் கள்ளை நிருத்தமுடியும் என்று மகாத்மா நம்புகிறார் என்று ஜனங்கள் நினைக்கும் படியும் நடந்து கொண்டார். ஒரு கடவுள், தனது பக்தனுக்காக- என்னென்ன காரியத்தில்- கடவுள் தன்மைக்கு விறோதமாகக்கூட நடந்ததாக நமது புராணங்களில் சொல்லப்படுகிறதோ அவைகளுக்கு மேலாகவெல்லாம் நமது நாட்டுப்பார்ப்பன பக்தர்களுக்காக மகாத்மா அவர்கள் நடந்து வந்தார். அவ்வளவு தூரம் பிரயத்தினம் எடுத்துக்கொண்ட மகாத்மாவுக்கு ஏன் நமது நாட்டுப்பார்ப்பனர் பார்ப்பனரல்லார் அபிப்பிராய பேதத்தைப்பற்றி ஒரு வார்த்தையாவது பேச எழுதமுடியாமல் போய்விட்டது என்று யோசிக் கும்போது நமக்கு மகாத்மாவைப்பற்றி குழப்பம் ஏற்படுகிறதா இல்லையா? தென்னாட்டிலிருக்கும் இவ்வபிப்பிராயபேதம் மகாத்மாவுக்கு தெரியாது என்று சொல்வதானால் மகாத்மாவைச் சுற்றியிருக்கும் பார்ப்பன பக்தர்கள் அவ்வளவு தூரம் மகாத்மாவை காது கண்ணில்லாமல் செய்து விடுகிறார்கள். என்றாவது ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறதா இல்லையா ? இங்கு நடக்கிற இவ்வளவு அபிப்பிராய பேதங்களையும் கொடுமைகளையும் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படுவதற்கு விடாமல் அவரைக்கொண்டு கதரின் பேரால் பார்ப்பன பிரசாரத்திற்கு பணம் சம்பாதிக்க நமது பார்ப்பனர்கள் நமது நாட் டிற்கு மகாத்மாவை கூடக் கொண்டு வருகிறார்கள்.
ஆனால் கதர் பண்டு என்பதாக அதற்குப் பெயர் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். எப்படி “மதச் சங்கராச்சாரியர்களை”மோக்ஷ பண்டுக்காக நமது வைதீகப்பார்ப்பனர்கள் கூட்டிக்கொண்டு வருகிறார்களோ அதுபோலவே மகாத்மாவை நமது அரசியல் பார்ப்பனர்கள் அரசியல் சங்கராச்சாரியாக நமது நாட்டுக்கு கூட்டிக்கொண்டு வருகிறார்கள். இங்கு வரும் வேலையைப்பற்றி மகாத்மாவைக் கொண்டே “ நான் பணத்திற்காக வருகிறேனே அல்லாமல் வேறு காரியத்திற்காக அல்ல” என்பதாக வெளிப்படையாகவும் சொல்லச் செய்து விட்டார்கள். சங்கராச்சாரியாருக்கு மோட்சத்தின் பேரால் கொடுக்கும் பணம் எப்படி பார்ப்பனர்களுக்கே போய்ச்சேரவும் நம்மை இழிவுபடுத்தவும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறதோ அதுபோலவே மகாத்மாவாகிய அரசியல் சங்கராச்சாரியர்களுக்கும் கதர் பேரால் கொடுக்கப்படும் பணம் கண்டிப்பாய் பார்ப்பனர்களுக்கும் நமது இழிவுக்குமே போய்ச்சேர உப யோகிக்கப்படப் போகிறது என்பதே நமது அபிப்பிராயம். என்னவெனில், கதர் இலாக்காவில் நமக்கு சிறிது அனுபோகம் உண்டு. கதர் ஸ்தாபனத்தில் நமக்கும் சிறிது தகவலுண்டு. இப்பொழுது வசூல் செய்யப்படும் பணம் பூராவும் அந்த ஸ்தாபனத்தை நடத்துவதற்குத்தானே அல்லாமல் கதர் வியாபாரத்திற்கு அல்ல. அந்த ஸ்தாபனம் பெரும்பாலும் இப்போது பார்ப்பன அக்கிரகாரமாகவே இருந்து வருகிறது. அதன் நிர்வாகத்தில் இரண்டொரு பார்ப்பனரல்லாதாரும் தலைமைப் பதவியில் இருக்கிறார்கள் என்று பார்ப்பனர்கள் சமாதானம் சொல்லக்கூடுமானாலும், இது ஏறக்குறைய, ஸ்ரீமான்கள் சுப்பராயன், ஆரோக்கியசாமி முதலியார் ஆகியவர்கள் பார்க்கும் மந்திரிபதவி பார்ப்பனரல்லாதார் பதவி என்று சொல்லுவதுபோல் தானே ஒழிய வேறு அதிக வித்தியாசமில்லை. சாதாரணமாக திருப்பூர் வஸ்திராலய நிர்வாகத்தை எடுத்துக்கொன்டால் அதில் கதர் வேலையைவிட வர்ணாஸ்ரம பிரசாரமே தாண்டவமாடுவதை பார்க்கலாம். வாஸ்தவத்தில் மகாத்மாவின் நோக்கத்தை அனுசரித்த அல்லது மக்கள் நோக்கத்தை அனுசரித்த பொது ஸ்தாபனமாக கதர் ஸ்தாபனம் இருக்குமானால் கண்டிப்பாய் அவைகளில் வருணாஸ்ரமிகளுக்கு இடமிருக்கவே நியாயமிருக்காது. கதரும், தீண்டாமை விலக்கும், மது விலக்கும் ஒன்றுக்கொன்று சகோதரக்கொள்கையுடையதே ஒழிய வேறுபட்டதல்ல. கதரில் நம்பிக்கையில்லாதவனுக்கு கதர் ஸ்தாபனத் தில் வேலை கொடுக்கக்கூடாது என்பது எவ்வளவு நியாயமானதோ, குடிகாரனுக்கு கதர் ஸ்டோரில் வேலை கொடுக்கக்கூடாது என்பது எவ்வளவு நியாயமானதோ, அதுபோலவே வர்ணாசிரமம் பிறவியில் உயர்வு தாழ்வு உண்டு என்று நினைத்துக்கொண்டிருப்பவனுக்கு கதர் இலாக்காவில் வேலை கொடுக்கக் கூடாது என்பதே நமது அபிப்பிராயம். குடிகாரனையும் கதரில் நம்பிக்கை இல்லாதவனையும் கதர் இலாக்காவில் வேலைக்கு வைப்பதால் கூட அவ்வளவு மோசம் வந்து விடாது ஆனால் ஒரு வர்ணாசிரமக்காரனை ஒரு இலாக்காவுக்கு நிர்வாகத் தலைவனாய் நேமிப்பதில் யெல்லாவற்றையும் விட அதிகமான கெடுதி இருக்கிறதென்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில் பிறவியில் தன்னை உயர்ந்தவ னென்று நினைத்துக்கொண்டு இருக்கிறவன், பிறவியில் வித்யாசமில்லை என்று நினைத்துக் கொண்டிருப்பவனிடம் எப்படி அன்னியோன்னியமாயும் நல்ல எண்ணத்துடனும் சமத்துவமாய் இருக்க முடியும் என்பது நமது கேள்வி.
கொடுமை
திருப்பூர் கதர் வஸ்திராலயம் ஒரு கண்டிப்பான வருணாசிரம பார்ப் பனர் தலைமையில் இருப்பதால் இதுவரையில் அதற்கு எதிர் அபிப்பிராய முள்ளவர்கள் எல்லாம் அதாவது சுமார் 8 பேருக்கு மேலாக வேலையிலிருந்து தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 3 பேர்கள் தாழ்ந்த வகுப்பார் என்பவர் கள். மற்றவர்கள் சமபந்தி போஜனத்தில் சம்மந்தமுடையவர்களும் உயர்வு தாழ்வை ஒப்புக்கொள்ளாதவர்களுமே யாவார்கள். இந்த கொடுமையை மற்ற பார்ப்பனரல்லாத நிர்வாகிகள் அனுமதித்துக் கொண்டுதான் வருகிறார்கள். குற்றம் கண்டு நீக்குவதைப்பற்றி யாருக்கும் ஆnக்ஷபனை இருக்காது. ஆனால் அக்குற்றம் அங்குள்ள யாரும் செய்யாதபடி திட்டப்படுத்திய குற்றமாக இருக்கவேண்டும். ஒரு கூட்டத்தார் செய்தால் – அதுவும் இரட்டிப் பாய்ச் செய்தால் – குற்றமாகக் கருதக்கூடாததை மற்றொரு கூட்டத்தார் செய் தால் ஒரே அடியாய் வேலையில் இருந்து நீக்கி விடுவது என்பது அக்கிரமமா இல்லையா என்றுதான் கேட்கிறோம். குறிப்பாக “தீண்டாதவர்கள்” விஷயத் தில் இவ்வளவு கொடுமை செய்யப்படுவது யோக்கியமானதா? கேள்விமுறை இல்லையா? இதற்காக நமது பணம் உபயோகப் படலாமா? என்பது தான் நமது முக்கிய கேள்வி. தவிரவும் தமிழ் நாட்டு கதர் ஸ்தாபன தற்கால நிர்வாகம், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் அதுவும் அளவுக்குத் தக்கபடி வேண்டும் என்கிறவர் கைவசத்திலிருப்பதாக பெயர் செய்து கொண்டு இம் மாதிரி கொடுமைகள் நடப்பதானால் யெப்படி நாம் அனுமதிக்க முடியும்? ஒட்டு மொத்தத்தில் உத்தியோகங்கள் ஏறக்குறைய 100 – க்கு 80 பங்கு பார்ப் பனர்களுக்கே கொடுக்கப்பட்டு வருகிறது. பார்ப்பன பிரசாரமே முக்கியமாய் கருதப்படுகிறது. இந்தப் பணம் பார்ப்பனர்கள் சாப்பிடுகிறார்களே என்பதில் நமக்கு பெரிய கவலை இல்லையானாலும் இந்தப் பணம் பார்ப்பன பிரசாரத் திற்கு, வருணாச்சிரமத்திற்கு ஆதரவு கொடுப் பதற்கு, பார்ப்பனரல்லாதாருக்கு நேர் விரோதமாய் எதிர்ப்பிரசாரம் செய்வதற்கு உபயோகப்படுகிறது என்பதை தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை. “மக்கள் மக்களை தாழ்த்துவதைப் பற்றி, இழிவுபடுத்துவதைப் பற்றி நமக்கு கவலை இல்லை, கதர்தான் பிரதா னம்” என்று மகாத்மா சொல்லுவாரானால், மக்களுக்கு மக்கள் தாழ்த்தப் படுவதை ஒழிப்பது கதரைவிட முக்கியமானது என்பது நமது கவலை என்பதை நாம் வலியுறுத்தித்தான் ஆக வேண்டியிருக்கிறது.
மகாத்மாவுக்கு பணம் கொடுக்கும் விஷயத்தில் கண்டிப்பாய் நமக்கு ஒரு நிபந்தனை இருக்கவேண்டும். “ இந்தப் பணம் பார்ப்பன ஆதிக்கத்துக்கு போகாது, இது பர்ப்பனரல்லாதாரது பங்கை பாதிக்கப்படவும் உபயோகப் படுத்தப்படாது, இனி வருனாச்சிரம காரரிடம் இதன் அதிகாரம் கொடுக்கப் படாது” என்கிற உறுதி இருக்கவேண்டும். அந்த உறுதி இல்லாமல் கொடுக்கப் படும் பணம் சங்கராச்சாரியாருக்கு கொடுக்கும் பணம் போல் மூடநம்பிக்கைக் காரரால் கொடுக்கப்படும் பணமாக போகுமேயல்லாமல் ஒருக்காலும் அது ஒரு நாணயமான பணமாகாது என்றே சொல்லுவோம் – அன்றியும், மத சங்கராச்சாரிக்கு எப்படி ஒரு பார்ப்பனர் “ சர்வாதிகாரி” யாய் இருந்து “லோக குருவை” ஆட்டுகிறாரோ அதுபோலவேதான் மகாத்மாவுக்கும் ஸ்ரீமான் ஊ . ராஜகோபாலாச்சாரியார் சர்வாதிகாரியாய் இருந்துகொண்டு மகாத்மாவை ஆட்டுகிறார். சர்வாதிகாரி சொன்னபடிதான் மகாத்மா ஆடி ஆகவேண்டும். தமிழ்நாட்டில் ராமசாமி நாயக்கன் யோக்கியனா அயோக்கியனா என்று மகாத்மாவுக்கு தெரியவேண்டுமானால் ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார்தான் நற்சாக்ஷிப்பத்திர மளிக்கவேண்டும். “ குருகுல ஆச்சாரியார்” ஸ்ரீமான் மகாதேவய்யர் யோக்கியரா அயோக்கியரா என்று தெரியவேண்டுமானால் ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார்தான் நற்சாக்ஷிப் பத்திரம் கொடுத்தாக வேண்டும். ஸ்ரீமான் மகாதேவய்யர் மகாத்மாவிடம் பக்கத்திலேயே இருந்து கொண்டு சதா பேசிக் கொண்டிருக்கிறாராம். பார்ப்பதற்கு நல்லவராகவே மகாத்மாவுக்குக் காணப்படுகிறாராம். எனவே மகாத்மாவுக்கு யோக்கியன் அயோக்கியனைக் கண்டுபிடிக்க எவ்வளவு சவுகரியமிருக்கிறது என்பது இதனாலேயே நமக்கு விளங்கவில்லையா? இவ்வளவும் மகாத்மாவைக் குற்றம் சொல்லுவதற்கு எழுதினதல்ல. ஆனால் மகாத்மாவும் எவ்வளவு தூரம் தொண்டருக்குள் அடக்கமாக இருக்கவேண்டியிருக்கிறது என்பதைக் காட்டவும், நம்மைப்பற்றியோ நமது நாட்டைப்பற்றியோ நமது சுயமரியாதை யைப் பற்றியோ மகாத்மாவுக்கு உண்மை தெரிய ஏதாவது சந்தர்ப்பமிருக் கிறதா என்பதை பொது மக்களுக்கு தெரிவிக்கவும் இதை எழுதுகிறோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 21.08.1927