காங்கிரசில் தீண்டாமை விலக்கு நிதி
தீண்டாமை விலக்கு என்பது ஒத்துழையாமை தத்துவத்தில் பட்ட நிர்மாணத் திட்டங்களுள் உச்ச ஸ்தானம் பெற்றிருந்தது. அதற்காக எவ்வளவோ பணங்களும் ஒதிக்கி வைத்து அத் திட்டத்தை நிறைவேற்ற ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது; ஆனால் அவைகள் என்ன கதி அடைந்தன என்பதை கவனிப்போம். தீண்டாமை விலக்கு நிதிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் ரூ. 20000 ஒதுக்கி வைத்து இருந்தார்கள். அந்தப் பணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அந்த வேலைக்கு உபயோகப்படுத்த ஸ்ரீமான் சி. இராஜகோபாலாச்சாரியார் ஒரு சிறிதும் இடம் கொடுக்காமல் தனது வசம் அந்த ரூபாயை ஒப்புவித்து விடும்படிக்கும் தான் அந்த வேலை செய்து கொள்வதாகவும் சொல்லிப் பணத்தை எடுத்து தன் பெயருக்கு பாங்கியில் போட்டுக் கொண்டார். கமிட்டியில் இருந்து தான் விலகும் வரையிலும் அந்தப் பணத்தை தான் சும்மா வைத்துக் கொண்டிருந்து விட்டு கடைசியாக அதை சீனிவாசய்யங்காருக்கு தேர்தல் செலவுக்கு ஏற்பட கமிட்டி வசம் அதை ஒப்புவித்தார். அவரும் தனக்கு பூரா அதிகாரம் வரும் வரை தீண்டா மையைப் பற்றி பேசாமலே இருந்து தான் முழு அதிகாரத்திற்கு வந்தவுடன் கொஞ்சம் நஞ்சம் செலவு செய்தது போக மீதி பெரும் பாகம் பணத்தை தேர்தல் வேலைக்கு எடுத்து தாராளமாய் செலவு செய்து கொண்டும், தன் பேச்சைக் கேட்கிற ஆதித்திராவிடர்களுக்கு மாதம் ரூ. 20, 30 கொடுத்து அவர்களைக் கொண்டே தீண்டாமை விலக்குக்கு விரோதமாய் பிரசாரம் செய்யவும் உபயோகப்படுத்திக்கொண்டு வருகிறார். கடைசியாக தீண்டாமை விலக்கு காங்கிரசில் இருப்பது சரியில்லை கதரைப் போலவே அது வேறு ஸ்தாபனமாக இருக்க வேண்டும் என்றும் அக்கிராசனப் பிரசங்கத்தில் சொல்லிவிட்டார். இப்போது தீண்டாமை விலக்கு நிதி அய்யங்கார்களும், ஆச்சாரிகளும், அய்யன்மார்களும் தலைவர்களாவதற்கும், சட்டசபை மெம்பர், முனிசிபல் கவுன்சிலர்கள் ஆகி தீண்டாமை நிலை நிறுத்தவும் நமது மனம் பதறப்பதற தாராளமாய் உபயோகப்படுத்தப்பட்டாய் விட்டது.
குடி அரசு – கட்டுரை – 06.02.1927