நன்றி கெட்ட தன்மை
சென்னையில் வர்த்தகர்கள் சங்கம் வியாபாரச் சங்கம் என்பதாக இரண்டொரு சங்கங்கள் இருந்து வந்தாலும் அவைகள் முழுவதும் ஐரோப் பியர்கள் ஆதிக்கமாகவே இருந்து வருவதோடு இந்திய வியாபாரிகளுக்கு அவற்றில் போதிய செல்வாக்கும் சுதந்திரமும் இல்லை என்பதாகக் கண்டு காலஞ் சென்ற பெரியார் சர்.பி. தியாகராய செட்டியார் அவர்கள் பெரு முயற்சி செய்து தென் இந்திய வர்த்தக சங்கம் என்பதாக ஒன்றை ஏற்படுத்தி அது நிலைத்திருப்பதற்கு வேண்டிய சகல சௌகரியங்களும் செய்து கொடுத்து அதன் மூலம் ஐரோப்பிய சங்கங்களுக்கு இருப்பது போலவே சென்னை முனிசிபாலிடிக்கும், சென்னை சட்டசபைக்கும், இந்திய சட்டசபைக்கும் அங்கத்தினர்களை தெரிந்தெடுக்கும் உரிமைகள் முதலிய பெருமைகளையும் வாங்கிக் கொடுத்து அதற்கு ஒரு யோக்கியதையையும் உண்டாக்குவதற்கு எவ்வளவோ கஷ்டமும் பட்டார். இப்போதும் மற்ற எல்லா ஸ்தாபனங்களை யும் நமது பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்திற்காக சூழ்ச்சிகளாலும், தந்திரங் களாலும் சுவாதீனப்படுத்திக் கொண்டது போலவே இதையும் கைப்பற்றிக் கொண்டு இருப்பதோடு அச்சங்கத்திற்கு இவ்வளவு பெருமையும், யோக்கி யதையும் சம்பாதித்துக் கொடுத்த சர்.பி. தியாகராயரின் வார்சான ஸ்ரீமான் பி.டி. குமாரசாமி செட்டியார் அவர்களையே அச்சங்கத்தில் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார்கள். இக்கூட்டத்தாரின் கன்னெஞ்சத்தையும் நன்றி கெட்ட தன்மையையும் காட்ட இதைவிட வேறு ஏதாவது உதாரணம் வேண்டுமா? ஆகவே நமது பொது நன்மைக்காக என்று எந்த ஸ்தாபனங்களை ஏற்படுத்தி னாலும் மெள்ள மெள்ள அதில் வேலைக்காரராக வந்து சேர்ந்து குமாஸ்தா வாகி, மேனேஜராகி, எஜமான்களாகி நம்மை கூலிக்காரர்களாக செய்து விடு கிறார்கள். இக்காரணங்களால் தான் நாம் செய்யும் தியாகமோ, உழைக்கும் உழைப்போ, ஏற்படுத்தும் ஸ்தாபனங்களோ நமக்கே பலன் தர வேண்டுமா னால் கண்டிப்பாய் அவற்றில் பார்ப்பனர்களைச் சேர்க்கக்கூடாது என்று வாதாடி வருகிறோமே அல்லாமல் மற்றபடி அவ்வகுப்பார் மீது துவேஷம் கொண்டல்ல. இந்த விஷயத்தை அறியாமல் இருப்பவர்களும், பார்ப்பனர் களிடம் கூலி வாங்கிப் பிழைப்பவர்களும் பார்ப்பனர் விரோதம் கொண்டால் வாழ முடியாதவர்களும், தங்களை பெரிய தேச பக்தர்கள் போல காட்டிக் கொண்டு உபதேசம் செய்ய வந்துவிடுகிறார்கள். ஆனபோதிலும் பொது ஜனங்கள் இதை ஏதோ அறியாமையாலும் வயிற்றுக் கொடுமையாலும் இப்படி உளறுகிறார்கள் என்பதாக மதித்து கூடிய வரையில் பார்ப்பன சம்பந்தமில்லாமலே முற்போக்கான வழி தேட வேண்டும் என்றும், அதற் கேற்ப ஸ்தாபனங்களையும் ஏற்படுத்த வேண்டுமென்றும் விரும்புகிறோம்.
குடி அரசு – கட்டுரை – 06.02.1927