தலைநகரில் மாநாடு போல் நடந்த நாத்திகர் விழா தடை தகர்த்து பேரணி வெற்றி நடை

திராவிடர் விடுதலை கழக நாத்திகர் விழா- மூடநம்பிக்கை எதிர்ப்புப் பேரணி எழுச்சியோடு பறை இசை முழங்க, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கிலிருந்து செப். 1, மாலை 4.30 மணியளவில் பகுத்தறிவு முழக்கங்களுடன் புறப் பட்டது. கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தின சாமி தலைமையேற்க, புதுவை மாநில கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேரணியின் நோக்கத்தை செய்தியாளர்களிடம் விளக்கினார்.

“பகுத்தறிவுப் பரப்புரை நடத்துவதற்கும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடத்துவதற்கும் சட்டப்படியே உரிமை உண்டு என்பதை நிலை நாட்டி நடத்தப்படுகிறது  இப்பேரணி. மராட்டிய அரசு கொண்டு வந்ததைப்போல தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியும், நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கோயிலில் குவிந்து கிடக்கும் தங்கத்தை அரசு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், இந்தப் பேரணி நடத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

500க்கும் மேற்பட்ட பெண், ஆண், இளைஞர்கள்  பகுத்தறிவு முழக்கமிட்டு வந்தனர். தோழர்கள் கையில், வாயில், நெஞ்சில் அலகுகுத்தி வந்தனர். பெண்கள் பகுத்தறிவு முழக்கமிட்டு தீச்சட்டிகளை ஏந்தி வந்தனர். புதுவையிலிருந்து லோகு. அய்யப்பன் தலைமையில் இரண்டு பேருந்துகளில் தோழர்கள் திரண்டு வந்திருந்தனர். சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, நாகை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களிலிருந்தும் பேரணியில் பங்கேற்க தோழர்கள் திரண்டு வந்திருந்தனர். 5.30 மணியளவில் பேரணி லேங்க்ஸ் கார்டனில் முடிவடைந்தது.

வி.எம். சாலையில் 5.30 மணியிலிருந்தே மேட்டூர் டி.கே.ஆர். குழுவினர் இசை நிகழ்ச்சி தொடங்கி 7 மணி வரை நடந்தது. தொடர்ந்து பறை இசையும் அதைத் தொடர்ந்து சுயமரியாதை கலை பண் பாட்டுக் கழகம் சார்பில் சோதிடம், தீமிதி, சாமியார் மோசடிகளை விளக்கும் வீதி நாடகங்களும் நடை பெற்றன. மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை யில் மண்டல அமைப்பு செயலாளர் அன்பு தனசேகரன் வரவேற்புரையாற்ற பொதுக் கூட்டம் தொடங்கியது.  மாநாட்டு மேடைக்கு வீரமரண மடைந்த மராட்டிய பகுத்தறிவுப் போராளி தபோல்கர் பெயர் சூட்டப்பட்டதோடு அவரது படத்தையும் மருத்துவர் எழிலன் திறந்து வைத்து மூடநம்பிக்கைகளை தோலுரித்துக் காட்டும் பகுத்தறிவு உரை நிகழ்த்தினார். தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, அருண் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சரியாக 10 மணி யளவில் நிகழ்ச்சி நிறை வடைந்தது. மாநாடு போல் மக்கள் திரண்டிருந்தனர்.

சுவரெழுத்து : நாத்திகர் விழாவையொட்டி சென்னை முழுதும் சுவரெழுத்துகள் எழுதப்பட்டிருந்தன. கழகச் செயல்வீரர்கள் வேலு, அய்யனார், இருதயராஜ், வசந்த்குமார், மனோகர், கோவிந்தன், வீரா, செந்தில், நந்தா, ஆ.தமிழ்ச்செல்வன் ஆகியோரடங்கிய குழு, சுவரெழுத்து விளம்பரங்களைச் செய்தது.

கழகத் தோழர்கள் ஏசுகுமார், தட்சிணாமூர்த்தி, அருண் குமார், சித்தார்த்தன், குமரேசன், தமிழ்ச்செல்வி, இலட்சுமணன், தாமரைக்கண்ணன், மனோஜ்குமார், குபேந்திரன், பிரகாசு, செல்லகுமார் ஆகியோரடங்கிய குழு தொடர்ந்து

10 நாட்கள் மாலை தோறும் கடை கடையாக சென்று துண்டறிக்கைகளை வழங்கி நிதி வசூல் செய்தது.

தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், மாவட்ட பொருளாளர் வேழவேந்தன், மாவட்ட தலைவர் ஜான்சன், சுனில் குமார், ஆட்டோ சரவணன், அய்யனார் ஆகியோரடங்கிய குழு, நீதிமன்றம் சென்று வழக்குத் தொடர்பான பணிகளை செய்தது.

மாவட்ட கழகச் செயலாளர் உமாபதி, அனைத்து குழுக்களின் பணிகளையும் ஒருங் கிணைத்து செயல்பட்டார். ஒரு மாத காலம் தோழர்களின் இடைவிடாத உழைப்பு, பேரணி, பொதுக் கூட்டத்துக்கு பெரும் வெற்றியை ஈட்டித் தந்தது.

– நமது செய்தியாளர்

 

பெரியார் முழக்கம் 05092013 இதழ்

You may also like...