பா.ஜ.க.வினரையும் சிந்திக்க வைத்த பரப்புரை

ஆகஸ்டு 2ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை நடந்த சுயமரியாதை சமதர்ம பயணத்தின் செய்தித் தொகுப்பு:

ஆகஸ்டு 2

அலங்கியம் சாலையில் உள்ள அம்மன் மண்டபத்தில் தங்கியிருந்த தோழர்களுக்கு முந்தைய நாள் இரவு உணவு, 2.8.2013 காலை அசைவ உணவு ஆகியவற்றை தாராபுரம் பகுதி பொறுப்பாளர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

காலை 10.30 மணிக்கு தாராபுரம் பேருந்து நிலையம் எதிரே பரப்புரை தொடங்கியது. முனைவர் ஜீவானந்தம் சர்வதேச அளவில் பார்ப்பனியத்தின் நிலை பற்றி விளக்கினார். வழக்கறிஞர் கலையரசன் தேநீர் வழங்கினார். பயணத்தின் நோக்கங்கள் குறித்து, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டியளித்தார். தாராபுரம் பகுதித் தோழர்கள் பரப்புரை நிதியாக ரூ.500/- வழங்கினர்.

நண்பகல் 12 மணிக்கு கணியூர் பேருந்து நிலையத்தில் பரப்புரை பறைமுழக்கத்துடன் தொடங்கியது. கழகக்  கொடியை கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஏற்றி வைத்தார். முனைவர் ஜீவானந்தம் இந்தியாவிற்குள் பார்ப்பனர்கள் வருகை குறித்தும், நம் மன்னர்கள் அவர்களுக்கு அடிபணிந்து, மனுசாஸ்திரத்தை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தி வருவது குறித்தும் விளக்கிப் பேசினார். மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் காந்தி நன்றி கூறினார். கூட்டத்தில் கணியூர் பகுதித் தோழர்கள் கடத்தூர் அய்யப்பன், சரவணன்,  ராசுக்குட்டி, மாதவன், விஜயன், வெற்றிச்செல்வன், காளிமுத்து, சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதியம் 2 மணிக்கு மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் பறைமுழக்கத்துடன் தெருமுனைப் பிரச்சாரம் தொடங்கியது. முனைவர் ஜீவானந்தம் உரையாற்றினார்.

பிறகு உடுமலை மீனாட்சி மண்டபத்தில் தோழர் களுக்கு மதியம் அசைவ உணவு வழங்கப்பட்டது. உடுமலை மலர் இனியனுடைய தந்தையும் தாயாரும் சுவை மிகுந்த இந்த அசைவ உணவைத் தயாரித்து தோழர்களுக்கு வழங்கினர். ஓய்வு நேரத்தில் சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத் தோழர்கள் வழக்கம் போல் தங்கள் பயிற்சியைத் தொடர்ந்தனர்.

மாலை 5 மணிக்கு உடுமலைப் பேட்டை பேருந்து நிலையத்தில் பரப்புரை தொடங்கியது. அறிவியல் மன்ற அமைப்பாளர்  சிவக்குமார், ஆதித் தமிழர் பேரவை பொறுப்பாளர் பெரியார் தாசன் ஆகியோர் உரையாற்றினர். கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் சிறப்புரையாற்றி, பயணத்தின் நோக்கங்கள் பற்றி விளக்கினார்.

மாலை 6 மணிக்கு பொள்ளாச்சியில் பரப்புரை தொடங்கியது. ஆனால் இடையில் மழை குறுக் கிட்டதால் பிரச்சாரம் சற்று நேரம் தடைபட்டது. மழை விட்டு விட்டு பெய்து கொண்டு இருந்ததால், மழையிலேயே பிரச்சாரம் நடைபெற்றது. மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் கூடி நின்று பரப்புரையைக் கேட்டனர். முனைவர் ஜீவானந்தம் உரையாற்றினார். பின்னர் தோழர்கள் பொள்ளாச்சி ராஜ் மஹால் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். தோழர்கள் தங்குவதற்கான மண்டப ஏற்பாட்டை மதிமுக கோவை புற நகர் மாவட்டச் செயலாளர் குகன், மில் செந்தில் செய்திருந்தனர். மற்றும் உணவு ஏற்பாடுகளை திராவிடர் விடுதலைக் கழக கோவை புறநகர் மாவட்ட துணைத் தலைவர் நிர்மல்குமார், பொள்ளாச்சி விஜயராகவன் சிறப்பாகச் செய்திருந்தனர்.

03.08.2013

காலை 11 மணிக்கு கிணத்துக்கடவு பகுதியில் பரப்புரை தொடங்கியது.பொள்ளாச்சி விஜய ராகவன் வரவேற்புரையாற்றினார். கழக சொற் பொழிவாளர் முனைவர் ஜீவானந்தம் உரை யாற்றினார். கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி பயணத்தின் நோக்கங்கள் குறித்து உரை யாற்றினார். கிணத்துக்கடவு பகுதி திமுக பிரமுகர் களான கதிர்வேல், சே.நடராஜ், மற்றும் தமிழ்ப் பித்தன் ஆகியோர் தேநீர் வழங்கினர். கோவை புறநகர் மாவட்ட துணைத் தலைவர் நிர்மல்குமார் நன்றி கூறினார்.

நண்பகல் 12 மணிக்கு உக்கடம் பேருந்து நிலையத்தில் பரப்புரை நடைபெற்றது. முனைவர் ஜீவானந்தம் உரையாற்றினார். மாவட்டக் கழகம் சார்பாக சித்தாபுதூர் ஹரிபுரத்தில் அசைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாலை 5 மணிக்கு காந்திபுரம் பேருந்து நிலையத் தில் பரப்புரை நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பன்னீர் செல்வம் தலைமை உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பயணத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கிப் பேசினார். கழகம் இதுவரை செய்த பணிகள், பெரியார் இயக்கத்தின் நோக்கங்கள் குறித்து  கூடியிருந்த மக்களிடம் விளக்கினார். கோவை மாநகர அமைப்பாளர் நேருதாஸ் நன்றியுரை கூறினார்.

மாலை 6 மணிக்கு பெரியநாயக்கன் பாளையம் பேருந்து நிறுத்தத்தில் பரப்புரை நடைபெற்றது. பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியச் செயலாளர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். முனைவர் ஜீவானந்தம், கழகத் தலைவர் கொளத்தூர்மணி ஆகியோர் பயணத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கினார். பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத் தலைவர் பிரசன்னா நன்றிரை கூறினார்.

மாலை 7 மணிக்கு வீரபாண்டி பிரிவில் கொடி யேற்று விழா நடைபெற்றது.நாகராஜ் தலைமை வகித்தார். கழகத் தலைவர் கொளத்தூர்மணி கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தோழர்கள் அனைவருக்கும் கூடியிருந்த பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. வீரபாண்டி பாபு நன்றி கூறினார்.

இரவு 8 மணிக்கு மேட்டுப்பாளையம் எல்லம்மா லாட்ஜ் சாலையில் பரப்புரை நடைபெற்றது. கோவை மாவட்டக் காப்பாளர் இராமச்சந்திரன் தலைமை வகித்தார். முனைவர் ஜீவானந்தம் உரையாற்றினார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசும் போது, “அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் இடஒதுக்கீடு உள்ளது. ஆனால் அங்கெல்லாம் சிறுபான்மையாக உள்ள மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் சிறுபான்மையினரான பார்ப்பனர்கள் அனைத்து வேலைவாய்ப்புகளையும் அதிகமாக அனுபவித்துக் கொண்டிருக்க, பெரும்பான்மை மக்கள் இட ஒதுக்கீட்டுக்காக அலைந்து உரிமைகளை பெற வேண்டிய நிலை உள்ளது என்று குறிப்பிட்டார். வட இந்தியாவில் பொதுவுடைமை பேசும் தலைவர்கள் கூட சாதிய அடையாளத்துடன் இருக்கையில், தமிழ்நாட்டில் சாதிக்கென்று கட்சி நடத்தும் தலைவர்கள் கூட தங்கள் சாதியை பெயருக்குப் பின் போடாமல், தயங்குவதற்குக் காரணம் பெரியாரின் புரட்சிதான் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பேசும் போது, இன்றைக்கு மத்திய அமைச்சராக இருக்கிற ஷிண்டே, தாழ்த்தப்பட்டவராக இருந்தாலும் பொதுத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர். அவர் மராட்டிய முதலமைச்சராக இருந்த போது தான் தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்கினார் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

தோழர்கள் அனைவரும் இரவு மேட்டுப் பாளையம் வெல்கம் லாட்ஜ் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்டக் காப்பாளர் இராமச்சந்திரன் செய்திருந்தார்.

04.08.2013

காலை உணவு மாவட்டக் காப்பாளர் இராமச் சந்திரன் இல்லத்தில் வழங்கப்பட்டது. உணவு ஏற்பாடுகளை தோழர் இராமச்சந்திரனுடைய மகன் இங்கர்சால் செய்திருந்தார்.

காலை 10.30 மணிக்கு அன்னூர் பேருந்து நிலை யத்தில் பரப்புரை தொடங்கியது. சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத் தோழர்களால், “ மது போதை கூட தெளிந்து விடும் ஆனால் சாதி போதை தெளியாது என்பதை விளக்கும் வகையில் வீதி நாடகம் நடைபெற்றது. கழக வெளியீட்டுச் செயலாளர் சூலூர் தமிழ்ச்செல்வி, மற்றும் மணிகண்டன் ஆகியோர் பாடல் பாடினர்.

பரப்புரை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் அப்பகுதியில் பா.ஜ.க.வினரின் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண் டிருந்ததால், பதற்றமடைந்த காவல் துறையினர் கழகத் தலைவரிடம் வந்து கூட்டத்தை விரைந்து முடிக்கும்படி கோரினர்.  இருப்பினும் நமது தோழர்கள் திட்டமிட்டபடி நிகழ்ச்சியை நடத்தி முடித்தனர். கழக சொற்பொழிவாளர் முனைவர் ஜீவானந்தம் அவர்களுடைய உரையைப் பாராட்டி அங்கு கூடியிருந்த பார்ப்பனரல்லாத பா.ஜ.க.வினர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை மாநகரத் தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் பேசும் போது, அன்னூர் பகுதியில் நிலவி வந்த தீண்டாமைக் கொடுமைகளைப் பற்றியும் அதற்கு எதிராக கழகம் முன்னெடுத்த போராட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டார். கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் வெள்ளமடை நாகராசு நன்றியுரை கூறினார். அந்நேரத்தில் அங்கு பா.ஜ.க.வினர் கூடியிருந்ததால் காவல்துறையினர் நமது வாகனங்களுக்குப் பாதுகாப்பாக அன்னூர் எல்லை வரை கூடவே வந்தனர்.

காலை 11.30 மணிக்கு சேவூரில் பரப்புரை நடைபெற்றது. ஈரோடு சுப்ரமணி பாடல் பாடினார். முனைவர் ஜீவானந்தம் பயணத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கிப் பேசினார். சேவூர் கிளைச் செயலாளர் தோழர் ரமேஷ் நன்றி கூறினார். அப்பகுதியைச் சார்ந்த கழக ஆதரவாளர் குமார் தோழர்களுக்கு தேநீர் வழங்கினார். நிகழ்வில் சேவூர் பகுதித் தோழர்கள் ஆனந்த், தனசேகர், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நண்பகல் 12.30 மணிக்கு ரங்கநாதபுரம் கிளைத் தோழர் ரமேஷின் தந்தையார் படத் திறப்பு நடைபெற்றது. அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த கிளைக்கழகக் கொடியை கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஏற்றி வைத்தார். மதியம் நம்பியூர் ஒன்றியம் சார்பாக எலத்தூர் அம்பேட்கர் நகர் சமுதாயக் கூடத்தில் அசைவ உணவு வழங்கப் பட்டது. சிறிது நேர ஓய்வுக்குப் பின் எலத்தூர் பேருந்து நிலையத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது.

மாலை 4.30 மணிக்கு நம்பியூரில் அமைந் துள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணி வித்தார். பிறகு நம்பியூர் பேருந்து நிலையத்தில் பரப்புரை நடைபெற்றது. பள்ளிக் குழந்தைகள் கனல்மதி, இளமதி, வான்மதி  ஆகியோர் கொள்கைப் பாடல்கள் பாடினர். வீதிநாடகம் நடைபெற்றது.கழகத் தலைவர் கொளத்தூர்மணி சிறப்புரையாற்றினார். நம்பியூர் பகுதியில் அன்று சந்தை என்பதால் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று பேச்சைக் கேட்டனர். நம்பியூர் ஒன்றியச் செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

மாலை 5.30 மணிக்கு குருமந்தூர் மேடு பகுதியில் கொடியேற்று விழா நடைபெற்றது. அலிங்கிய கிளைக் கழகம் சார்பில் முத்து லிங்கம் மற்றும் ரவி ஆகியோர் பயண நிதி யாக கழகத் தலைவரிடம் ரூ.2000/- வழங்கினர்.

மாலை 6 மணிக்கு கோட்டுப் புள்ளாம் பாளையம் புதிய கிளை திறப்புவிழா நடை பெற்றது. பெயர்ப்பலகை மற்றும் கழகக்  கொடியினை கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஏற்றி வைத்தார். புதிய கிளை சார்பில் தேநீர் வழங்கப்பட்டது.கோட்டுப் புள்ளாம் பாளையம் கிளை சார்பில் பயண நிதியாக ரூ.1000/- கழக தலைவரிடம் வழங்கப்பட்டது. நிகழ்வில் சூரியப் பிரகாஷ், தேவராஜ், கார்த்திக், பூபதி, சேகர், அழகு பூபதி, ரமேஷ், ரவி, குமரவேல், மூர்த்தி, சரவணன், சூர்யா, நவீன், சுரேஷ், சந்திரசேகர், தனசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாலை 7 மணிக்கு கோபி பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் நடைபெற்றது. வீதி நாடகம் மற்றும் பறைமுழக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாவட்ட துணைத் தலைவர் கா.சு வேலுச்சாமி, பெரியார் தொழிலாளர் கழகக் தலைவர் இராம. இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் , “இன்றைக்கு இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ மதத்திலும் கூட சாதி புகுந்து விட்டது. கிறிஸ்தவ நாடார், கிறிஸ்தவ வேளாளர், கிறிஸ்தவ ஆதிதிராவிடர் என்று போட்டுக் கொள்கின்றனர். ஆனால் அவற்றின் தத்துவத்தில் அடிப்படையில் சாதி இல்லை. ஆனால் இந்து மதத்தின் அடிப்படையே சாதியாக, மக்களை பிளவுபடுபடுத்துவதாக உள்ளது என்று கூறிய கழகத் தலைவர் மேலும், அண்மையில் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க கூட்டத்தில் மேடையில் கவுண்டர் சமூகப் பிரதிநிதிகள், தேவர் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரை வைத்துக் கொண்டு, வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு பேசும் போது, “நாங்கெல்லாம் நாலாஞ்சாதிப் பசங்க இல்லை” என்று நாலாம் வர்ணமான சூத்திர இனத்தைச் சார்ந்த பிரதிநிதிகளை வைத்துக் கொண்டு, அவ்வாறு பேசியதைக் குறிப்பிட்ட கழகத் தலைவர், இதைத் தான் எங்கள் பகுதியில் “கருப்பட்டியைக் கொடுத்து செருப்பால் அடிப்பது என்பார்கள்” என்று வேடிக்கையாகக் கூறினார்.

இந்திராகாந்தி மக்களுக்கு பயன் தர வேண்டும் என்று வங்கிகளை தேசிய மயமாக்கினார். ஆனால் அதே காங்கிரஸ் அரசு தனியார் வங்கிகளை இன்றும் மீண்டும் அனுமதிப்பதை நினைவு கூர்ந்தார்.அண்ணல் அம்பேட்கர், நேரு அமைச்சரவையில் இருந்து பதவி விலகிய போது, தான் பதவி விலகுவதற்கான நான்கு காரணங்களில் ஒன்றாக பிற்படுத்தப்பட்டோருக் கென்று இட ஒதுக்கீட்டுக்கென தனியாக ஒரு ஆணையம் அமைக்க தான் கூறியிருந்ததையும், ஆனால் நேரு அரசு அதில் கவனம் செலுத்தாததால், தான் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாகக் கூறினார். ஆனால் பிற்படுத்தப்பட்டோருக்கென்றும் பாடுபட்ட அவரைத் தான் தாழ்த்தப்பட்டோருக்கு மட்டுமான தலைவராக சித்தரிப்பதையும் வேதனையுடன் கூறினார்.

இறுதியாக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் நிவாசு நன்றி கூறினார். தந்தை பெரியார் திராவிடர் கழக நகரத் தலைவரும் தோழர் நிவாசு அவர்களின் மாமனாருமான தோழர் நாகப்பன் இல்லத்தில் மாவட்டக் கழகம் சார்பில் சிறப்பான அசைவ உணவு வழங்கப்பட்டது. தோழர்கள் கோபி வெற்றிவேல் மன்றம் லாட்ஜில் தங்க வைக்கப்பட்டனர்.

05.08.2013

காலை 10 மணிக்கு பிரம்ம தேசம் பகுதியில் கழகத்தின் தீவிர ஆதரவாளரும், பெரியார் பற்றாளரு மான தங்கதுரை இல்லத்தில் காலை உணவு வழங்கப் பட்டது. காவலாண்டியூர் பகுதியைச் சார்ந்த  கழகத் தோழர்கள், 20 க்கும் மேற்பட்ட வாகனங்களில் பரப்புரை பயணக் குழுவினரை பிரம்மதேசத்திலிருந்து  வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

பிறகு 11 மணிக்கு அந்தியூர் பேருந்து நிலையத்தில் பரப்புரை நடைபெற்றது.தோழர் மணிகண்டன், சூலூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் பாடல் பாடினர். முனைவர் ஜீவானந்தம் உரையாற்றினார். வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி நன்றி கூறினார்.

காலை 12.30 மணிக்கு குருவரெட்டியூர் பெரியார் படிப்பகத்தில் தோழர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. குருவரெட்டியூர் பேருந்து நிறுத்தத் தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் மாலை அணிவித்தார்.அங்கிருந்து தோழர்கள் ஊர்வலமாக பரப்புரை நடக்கும் பெரியார் திடலுக்குச் சென்றனர். கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக சோதி தலைமை வகித்தார்.கழக வெளியீட்டுச் செயலாளர் சூலூர் தமிழ்ச்செல்வி உரையாற்றினார்.

பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் தனது உரையில், தென்காசி கோவிலுக்கு ராஜகோபுரம் அமைத்துத் தந்த தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன், குடமுழுக்கன்று கோவிலில் நுழைய முற்பட்டு, கோவில் அர்ச்சகர்களால் அவமதிக்கப்பட்டதைக் கூறினார். சீரங்கம் கோவில் மூலஸ்தானத்தில் தங்கக் கூரை அமைப்பதற்கு   லட்சக்கணக்கில் பணம் தந்த இளையராஜா தாழ்த்தப்பட்டவர் என்று காரணம் காட்டி அவமதிக்கப்பட்டதைக் கூறி, பார்ப்பானைப் பொருத்தவரை தாழ்த்தப்பட்டவனும் ஒன்று தான், பிற்படுத்தப்பட்டவனும் ஒன்று தான் என்று கூறினார். அரசியல் கட்சிகள் தேர்தலைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கையில், திராவிடர் விடுதலைக் கழகமோ, அடுத்த தலை முறையைப் பற்றி சிந்தித்து இந்தப் பரப்புரைப் பயணத்தை மேற்கொள்கிறது என்று பேசினார்.

அப்பகுதியில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட விஜய்-உமா தம்பதியர் கழகத் தலைவருக்கு சால்வை அணிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இறுதியாக தோழர் நிவாசு நன்றி கூறினார். தோழர் நாத்திக சோதி இல்லத்தில் தோழர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.

அங்கிருந்து தோழர்கள் காவலாண்டியூர் புறப் பட்டனர். கண்ணாமூச்சி எல்லையில் தோழர்களுக்கு தாரைதப்பட்டை பட்டாசு முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கப் பட்டது.கண்ணாமூச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் செல்வராஜ், செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் பயணக் குழுவினரை வரவேற்றனர். (கண்ணாமூச்சி மற்றும் காவலாண்டியூர் பகுதித் தோழர்கள் சார்பாக பயணநிதி வழங்கப்பட்டது. அது பற்றிய செய்தி தனியே) காவலாண்டியூரில் அமைக்கப்பட்டுள்ள படிப்பகத்தை தோழர்கள் பார்வையிட்டனர். அனை வருக்கும் தேநீர் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையத்தில் பரப்புரை தொடங்கியது. வீதி நாடகம், பறைமுழக்கத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. முனைவர் ஜீவானந்தம் உரையாற்றினார். கொளத்தூர் நகரச் செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

மாலை 6 மணிக்கு மேட்டூர் பெரியார் படிப்பகத்தி லிருந்து பறை ஆட்டத்துடன் தோழர்கள் ஊர்வலமாக பொதுக்கூட்டம் நடைபெறும் சதுரங்காடிக்குச் சென்றனர். திருப்பூர் தோழர் பிரசாத் சிலம்பாட்டம் ஆடியபடி ஊர்வலத்தின் முன் சென்றார். பிறகு நடத்தப்பட்ட வீதி நாடகத்தில் சுயமரியாதை கலை பண்பாட்டுக்கழக பயிற்சியாளர் ஆனந்த், நங்கவள்ளி கிருஷ்ணன், மற்றும் ஓட்டுநர் அவிநாசி ஆகியோர், பார்ப்பன மந்திரங்களின் பொருள் குறித்தும், அந்த மந்திரங்களில் மக்கள் எவ்வாறு இழிவுபடுத்தப்படு கின்றனர் என்பது குறித்தும் நகைச்சுவையுடன் நடித்துக் காட்டி மக்களின் பாராட்டைப் பெற்றனர். மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவினரின் பாடல்கள் கூட்டத்தினரைக் கவர்ந்தது.

பிறகு தொடங்கிய பொதுக்கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கோவிந்தராசு தலைமை தாங்கினார். சேலம் மண்டலச் செயலாளர் சக்திவேல், ஜஸ்டின், முனைவர் ஜீவானந்தம், வெளியீட்டுச் செயலாளர் சூலூர் தமிழ்ச்செல்வி, பரப்புரைச் செய லாளர் பால்.பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினார். அவர் தனது உரையில் கூறும் போது,

“நீயும் மனிதன் நானும் மனிதன், உனக்குள்ள அத்தனை உரிமைகளும் எனக்கும் உண்டு என்று எண்ணி நம்மை நாமே மதிப்பதுதான் சுயமரியாதை என்று கூறினார். காந்தி சுயமரியாதை என்ற சொல்லைப் பயன்படுத்தினார். பெரியார் அந்த சொல்லிற்கு அழுத்தமாக அர்த்தம் கொடுத்தார். ஒரு கூட்டத்தில் தந்தை பெரியார் காந்தியைப் பற்றி பேசும்  போது “தோழர் காந்தி” என்று குறிப்பிட்டதற்கு கூட்டத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது, அதற்கு பதில் கூறிய பெரியார், நான் சாதாரண ஆத்மாவையே நம்புவதில்லை, அதனால் மகாத்மா எல்லாம் எனக்கு பொருட்டல்ல” என்று கூறியதை நினைவு கூர்ந்தார். சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் வலுப்பெறும் முன் தமிழ்நாட்டிற்கு வந்த காந்தி, சீனிவாச அய்யங்கார் வீட்டுத் திண்ணையில் தங்க வைக்கப் பட்டதையும், சுயமரியாதை இயக்கம் முழுவீச்சாக தமிழ்நாட்டில் செயல்பட்டு, பார்ப்பன எதிர்ப்புக் கருத்துகளை வெளியிட்டு வந்த 1926 ல் மீண்டும் தமிழ்நாட்டிற்கு காந்தி வந்தபோது, சீனிவாச அய்யங்கார் வீட்டு அடுக்களை வரை காந்தியின் மனைவி அனுமதிக்கப்பட்டதையும் காந்தியே குறிப்பிட்டு உள்ளதை நினைவு கூர்ந்தார்.

சுளுளு இயக்கத்தை உருவாக்கிய கோல்வால்க்கர் இந்துப் பண்பாடு என்றால் எது என்பதற்கு விளக்கம் கூறும் போது, “ ஒரு ஆங்கில அதிகாரியும் அவரது பியூனும் வந்து கொண்டிருக்கையில் எதிரே வந்த நாயுடு ஒருவர் அதிகாரியுடன் கைகுலுக்கினார், ஆனால் அதே நாயுடு சமூகத்தவர் பியூனின் காலில் விழுந்து கும்பிட்டார். ஏன் இவ்வாறு நடக்கிறீர்கள் என்று கேட்ட அதிகாரியிடம் அந்த நாயுடு சமூகத்தவர் “ அய்யா நீங்கள் எனக்கு அதிகாரி ஆனால் உங்கள் பியூன் பிராமண சமூகத்தைச் சார்ந்தவர், ஆனாலும் அவர்தான் எங்களுக்கு கடவுள் போன்றவர்” என்றார். இதுதான் இந்துப் பண்பாடு என்று கோல்வால்க்கர் கூறியதை நினைவு கூர்ந்த கழகத் தலைவர் மீண்டும் பேசும் போது  கும்பகோணம் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த 2 தண்ணீர் பானைகளில் ஒன்று பார்ப்பன மாணவர்களுக்கும் இன்னொன்று மற்றவர்களுக்கும் என்ற பிரிவினை தான் தி.க மாணவர் கழகம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது என்று குறிப்பிட்டார். அன்று ஆதிக்க சாதியான பார்ப்பானுக்கு அடிமையாக இருந்து இந்த பிரிவினையை எதிர்த்துப் போராடிய அந்த பிற்படுத்தப்பட்ட சமூகம், இன்று தனக்கு கீழ் உள்ளதாக தான் கருதும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக, தேநீர் கடைகளில் 2 குவளைகளை வைக்கிறார்கள். அன்று பார்ப்பனர்களை எதிர்த்து பிற்பட்டோருக்கு ஆதரவாகப் போராடிய அதே பெரியார் இயக்கங்கள் தான், இன்று தாழ்த்தப்பட் டோருக்கு எதிராக பிற்படுத்தப்பட்டோர் செய்யும் கொடுமைகளையும் எதிர்த்துப் போராடுகிறது என்று குறிப்பிட்டார்.

திருமங்கலம் கோவிலில் நாடார்கள் தேங்காய் உடைத்ததாக ஒரு வழக்கு வந்தபோது, தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், “நாடார்கள் இழிஜாதி என்பதால் அவர்கள் கோவிலுக்குள் தேங்காய் உடைக்கக் கூடாது, கோவிலில் உள்ள அய்யரிடம் கொடுத்துதான் உடைக்க வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்ததைக் குறிப்பிட்டார்.

இறுதியாக மேட்டூர் நகரத் துணைத் தலைவர் தோழர் அம்ஜட்கான் நன்றி கூறினார். தோழர்கள் மேட்டூர் தாய்த் தமிழ் பள்ளியில் தங்க வைக்கப் பட்டனர்.

06.08.2013

காலை 8 மணிக்கு மேட்டூர் அணையைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டனர். சேலம் மாவட்டப் பொரு ளாளர் தோழர் ஆசை அவர்களின் உதவியால் சிறப்பு அனுமதி பெற்று, மேட்டூர் அணையின் மேல் பகுதிக்குச் சென்று சுற்றிப் பார்த்தனர்.

காலை 10 மணிக்கு நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் பரப்புரை தொடங்கியது. மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு மற்றும் அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார்  ஆகியோர் உரையாற்றினர். நங்கவள்ளி நகர துணைச் செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

காலை 11 மணிக்கு மேச்சேரி பேருந்து நிலையத் தில் பரப்புரை தொடங்கியது. சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர்  கோவிந்தராசு பாடல் பாடினார். முனைவர் ஜீவானந்தம், பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் உரை யாற்றினர். மல்லிகுந்தம் பகுதி அமைப்பாளர் அன்பழகன் நன்றி கூறினார்.

சிந்தாமணியூர் பகுதித் தோழர் ஜெயப்பிரகாஷ் இல்லத்தில் தோழர்கள் அனைவருக்கும் மதியம் உணவு வழங்கப்பட்டது. சிறிது நேர ஓய்வுக்குப் பின் சிந்தாமணியூர் பேருந்து நிறுத்தத்தில் பரப்புரை நடைபெற்றது.முனைவர் ஜீவானந்தம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரை யாற்றினர். தோழர் ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.

மாலை 4.30 மணிக்கு ஓமலூர் பேருந்து நிலையத்தில் பரப்புரை நடைபெற்றது. வீதி நாடகம், பறை முழக்கம் நடைபெற்றது. முனைவர் ஜீவானந்தம் உரையாற்றினார்.

மாலை 7 மணிக்கு இளம்பிள்ளை பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இடங்கனசாலை எல்லையிலிருந்து பயணக்குழு வினருக்கு  வரவேற்பு அளிக்கப்பட்டது. வீதிநாடகம் பறைமுழக்கத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. சேலம் தோழர் ரெக்ஸ் பாடல் பாடினார். பொதுக் கூட்டத்திற்கு தங்கதுரை தலைமை வகித்தார். கோகுலக்கண்ணன் வரவேற்புரையாற்றினார். முனைவர் ஜீவானந்தம், வெளியீட்டுச் செயலாளர் சூலூர் தமிழ்ச்செல்வி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினார். அவர் பேசும் போது, “இன்றைக்கு பள்ளியில் சாதி கேட்பதால் தான் சாதி வளர்கிறது என்று சிலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள், பள்ளியில் சாதி கேட்பது அவனை முன்னேற்றத் தானே தவிர இழிவுபடுத்தவோ, சாதியை மேலும் ஆதரிக்கவோ அல்ல. உதாரணத்திற்கு “பேருந்து நிலையத்தில் ஒருவன் முகம் வாட்டத்துடன் நின்று கொண்டிருந்தால் அவனிடம் சென்று உன்னிடம் பணம் உள்ளதா என்று கேட்பதற்கும், கையில் ஒரு பைசா கூட இல்லாமல் நீ எல்லாம் ஏன் இங்கே நிற்கிறாய் என்று கேட்பதற்கும் வேறுபாடு உள்ளது. இந்தக் கேள்வி அவனை இழிவுபடுத்துவதற்காகக் கேட்பது, ஆனால் முன்னால் கேட்ட கேள்வி உதவுவதற்காகக் கேட்டது, இதைப் போல் தான் பள்ளிகளில் சாதி கேட்பதும்” என்று குறிப்பிட்டார். சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கின்ற நமது இயக்கம் தான் இடஒதுக்கீடு வேண்டும் என்று போராடுகிறது. தனியார் துறை கூடாது என்று சொல்கின்ற நமது இயக்கம் தான் தனியார் துறையில் இடஒதுக்கீடு கேட்கிறது. சாதி ஒழிய வேண்டும் தனியார் துறை கூடாது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சாதி இருக்கும் வரை இடஒதுக்கீடு வேண்டும் என்று தான் நாம் போராடுகிறோம். எந்தச் சாதியால் ஒருவன் அடிமைப்படுத்தப்பட்டானோ அதே சாதியைக் கேட்டு, அதற்கு இட ஒதுக்கீடு கொடுத்துதான் அவனை முன்னேற்ற முடியும் “ என்று கூறினார்.

இறுதியாக இளைஞரணி அமைப்பாளர் சௌந்தர்ராஜன் நன்றி கூறினார். இளப்பிள்ளை படிப்பகத்தில் தோழர்கள் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

07.08.2013

காலை 10 மணிக்கு வாழப்பாடி பேருந்து நிலையத்தில் பரப்புரை தொடங்கியது. முனைவர் ஜீவானந்தம் உரையாற்றினார். சேலம் மாவட்ட துணைச் செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

ஆத்தூர் நகராட்சி மண்டபத்தில் ஆத்தூர் சிவசுப்ரமணி மதிய உணவு வழங்கினார்.

மாலை 7 மணிக்கு ஆத்தூர் பேருந்து நிலையத் தில் பரப்புரை நடைபெற்றது. முனைவர் ஜீவானந்தம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர். போடப்பட்டிருந்த இருக்கைகள் போதாததால் ஏராளமான பொதுமக்கள் தரையில் அமர்ந்து நிகழ்ச்சியைக் கேட்டனர். இலுப்பநத்தம் தோழர் காளிதாஸ் நன்றி கூறினார். கூட்டம் முடிந்தும் கூட புத்தக விற்பனை தொடர்ந்து நடைபெற்றது. பொதுமக்கள் மிகுந்த ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். துண்டறிக்கை விநியோகித்து கடைவீதி வசூலில் ஈடுபட்ட தோழர்களிடம் ஒருவர், நான் ஒரு பார்ப்பனர் என்றாலும் கூட நான் பெரியார் பற்றாளன் என்று கூறி நன்கொடை அளித்தார்.

இரவு விழுப்புரம் கருங்குழி தோழர் வெற்றி இரவு உணவு வழங்கினார். தோழர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அரிசி ஆலை உரிமையாளர்கள் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

08.08.2013

நண்பகல் 12 மணிக்கு வாழவச்சனூர் பேருந்து நிறுத்தத்தில் பரப்புரை நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகத்தைச் சார்ந்த ராமர் தலைமை வகித்து உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார் பயணத்தின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் நாவப்பிள்ளை நன்றி கூறினார். மதிய உணவு ஏற்பாடுகளை கடுவனூர் நாகராஜ் செய்திருந்தார்.

மாலை 5 மணிக்கு குங்கிலிநத்தம் பேருந்து நிலையத்தில் பரப்புரை நடைபெற்றது.முனைவர் ஜீவானந்தம் உரையாற்றினார். மாவட்ட அமைப் பாளர் இளையராஜா நன்றி கூறினார்.

மாலை 7 மணிக்கு திருவண்ணாமலை சுதந்திர பொன்விழா நினைவுத் தூண் அருகில் பரப்புரை நடை பெற்றது. முனைவர் ஜீவானந்தம் உரையாற்றினார். கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி பயணத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கிப் பேசினார். மாவட்ட அமைப் பாளர் தோழர் சாக்ரடீஸ் நன்றி கூறினார். தோழர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. சென்னை மண்டல அமைப்புச் செயலாளர் அன்பு தனசேகர் தோழர்கள் அனைவருக்கும் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

09.08.2013

காலை 10 மணிக்கு செங்கம் பேருந்து நிலையத்தில் பரப்புரை நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆனந்த், கழகத் தலைவருக்கு சால்வை அணிவித்து பயணத்தை வாழ்த்திப் பேசினார். முனைவர் ஜீவானந்தம் உரையாற்றினார். மாவட்ட அமைப் பாளர் சாக்ரடீஸ் நன்றி கூறினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் காமராஜ், டாஸ்மாக் தொழிலாளார் விடுதலை முண்ணனியின் மாவட்டச் செயலாளர் தோழர் ரத்தினம் மற்றும் அரசு ஊழியர் அய்க்கியப் பேரவையின் மாவட்ட துணைச் செயலாளர் ராமச்சந்திரன்  ஆகியோர் கழகத் தலைவருக்கு சால்வை அணிவித்தனர். அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.

மதியம் 2 மணிக்கு ஊத்தங்கரை நகராட்சி மண்டபத்தில் தோழர்களுக்கு மதிய உணவு வழங்கப் பட்டது. உணவு ஏற்பாடுகளை தோழர்  மூங்கிலேரி மாதேஸ்வரனும் மண்டப ஏற்பாட்டைத் தோழர்  வெங்கடாச்சலமும் செய்திருந்தனர்.

மாலை 3 மணிக்கு ஊத்தங்கரை பெரியார் சிலை அருகில் பரப்புரை நடைபெற்றது. முனைவர் ஜீவானந்தம், கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர். தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட துணைத் தலைவர் தோழர் மாதேஸ்வரன் நன்றி கூறினார். நிகழ்வில் ஊத்தங்கரை தோழர் ஆசிரியர் சி.வீரமணி குடும்பத்தாருடன் கலந்து கொண்டார்.

மாலை 7 மணிக்கு காவேரிப்பட்டினம் பேருந்து நிலையத்தில் “மக்கள் போராளி தோழர் பழனி” நினைவு மேடையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் தி.குமார் தலைமை வகித்தார். ஒன்றிய அமைப்பாளர் பழனிபிரபு வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பிரேம்குமார், மாவட்டத் துணைத் தலைவர் கிருட்டிணன், மாவட்ட  அமைப்பாளர் பழனி, மாவட்டத் துணைச் செயலாளார் வாஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல அமைப்புச் செயலாளர் சக்திவேல், முனைவர் ஜீவானந்தம், தமிழ்த் தேச குடியரசு இயக்கத்தின் தமிழரசன் ஆகியோர் உரையாற்றினர்.

பொதுச்செயலாளார் விடுதலை இராசேந்திரன் பேசும் போது,” சாதிச் சங்கம் அமைத்துக் கொண்டு சிலர் மாமல்லபுரத்தில் இளைஞர்களைத் தூண்டி விடும் வகையில் பேசிய ஜாதிவெறி பேச்சுகள் காரணமாக மரக்காணத்தில் கலவரம், தருமபுரியில் கலவரம் என்று தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளை நாம் அறிவோம். வடமாநிலங்களில் காதலுக்கு எதிராக சாதிவெறியுடன் நடப்பதைப் போன்ற இந்த நிகழ்வுகளைக் கேட்க , எதிர்க்க யார் முன்வருவது என்ற நிலையில் தான் பெரியார் இயக்கங்கள் இது போன்ற வன்முறைக்கு எதிராக எதிர்ப்பு நிலையை எடுத்தோம். இதற்காகத்தான் திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ச்சியாக மக்களைச் சந்தித்து இது போன்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகி றோம் என்று கூறிய பொதுச்செயலாளார், இட ஒதுக்கீடு என்பதன் நோக்கமே சாதியற்ற சமூகம் அமைக்க வேண்டும் என்பதுதான், எதன் காரணமாக மனிதன் அடிமைப் படுத்தப்பட்டா னோ, அதை வைத்து அவனை மேலே தூக்கி விடு வதற்காகத்தான் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.  இன்றைக்கு தந்தை பெரியாரின் கருத்துகள் பொதுத் தளத்தில் விவாதிக்கப்படுவது போல வேறு எவருடைய கருத்துக்களும் விவாதம் ஆக்கப்படுவது இல்லை. 1973இல் தந்தை பெரியார் இறந்த பிறகும் இன்றைக்கும் அவரது கருத்துக்கள் தேவையாக இருக்கிறது. காந்தி அன்றைக்கு சுயசார்பு வேண்டும் என்று சொன்னார். ஆனால் இன்றைக்கு அவர் பெயரால் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சி சுயசார்பு வேண்டாம் என்கிறது.

அன்றைக்கு நம் மக்களிடம் பரவலாக பரவி இருந்த குடிசைத் தொழில்கள் இன்றைக்கு பெரு நிறுவனங்களின் வரவால் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து விட்டன. இன்றைக்கு பால் விலையை விட ஒரு லிட்டர் தண்ணீரின் விலை அதிகமாக உள்ளது. என்று கூறிய பொதுச் செயலாளர், மேலும் பேசும்போது,

நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் கூறும் போது, இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் இந்தியாவோடு இல்லாமல் தனியாக இருந்தால், அவை தான் முன்னோடி மாநிலமாக இருக்கும், ஆனால் அவை இந்தியத்திற்குள் இருப் பதால் தான் வஞ்சிக்கப்பட்டு, பின் தள்ளப்படும் போக்கு அதிகமாக உள்ளது. இன்றைக்கு ரயில் பயணங்களில் டிக்கெட் எடுப்பது கூட தமிழக மக்களிடம் தான் ஒரு பழக்கமாக உள்ளது. ஆனால் வட மாநிலங்களில் ரயில் பயணிகள் பெரும்பாலும் டிக்கெட் எடுக்காமல் தான் பயணம் செய்கின்றனர். இவ்வாறு ஏற்படும் இழப்பைச் சரிகட்ட ரயில்வே பட்ஜெட்டில் போடப்படும் வரி என்பது அனைத்து மக்களுக்குமாக உள்ளது.நமக்கு கடன் கொடுக்கிற உலக வங்கி சேவைத் திட்டங்களுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டாம் என்கிறது.

வோடாபோன் நிறுவனம் அரசுக்கு தர வேண்டிய 11 ஆயிரம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்கிறது. இதை உச்சநீதிமன்றமும் ஆதரிக்கிறது. ஆனால், கல்விக் கடன் பெற்று அதை திருப்பிக் கட்டாத மாணவர்களின் பெயர்ப் பட்டியலை வங்கியின் முன் வைக்கிறது ஸ்டேட் பேங்க் , இதை யாரும் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை என்றார்.

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி பேசும் போது, “அன்றைக்கு சென்னைக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் அங்கு தங்கிப் படிக்க வசதி இல்லை, உணவகம் இல்லை. இந்த நிலையில் தான் டாக்டர் நடேசனார் 1912 ஆம் ஆண்டில் “திராவிடர் தங்கும் இல்லம்” என்ற அமைப்பை ஏற்படுத்தி சென்னைக்கு வந்து இங்கு  கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச உணவு வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

பெரியார் நீதிக்கட்சி யினரைப் பார்த்து “ யாரை எதிர்த்து பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம் என்று  ஆரம்பித்தீர்களோ,  சடங்கு சம்பிரதாயம் என்ற பெயரில், அந்த பார்ப்பனர் காலிலேயே போய் விழு கிறீர்களே” என்று கண்டித்தார். பார்ப்பன புரோகிதர்களை திருமணத் திற்கு பார்ப்பனர்களை அழைக்கக் கூடாது என்றார்.

அறநிலையத் துறையின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக 1962இல் அமைக்கப்பட்ட சி.பி இராமசாமி அய்யர்  பெரும் பாலான கோவில்களில் இருக்கும் அர்ச்சகர்களுக்கு சமஸ்கிருத மந்திரமே தெரிய வில்லை, உச்சரிப்பும் தவறாக உள்ளது. என்று அரசுக்கு அறிக்கை கொடுத்ததை நினைவு கூர்ந்தார்.

மேலும் கழகத் தலைவர் பேசும் போது, அன்றைக்கு சந்துர்க்கர் என்ற நீதிபதி, தான் சார்ந்த பார்ப்பன சமூகத்தவரையே நீதிபதி பதவிக்கு  பரிந்துரை செய்த போது, அன்றைக்கு சட்ட அமைச்சராக இருந்த பொன்னையன் அதை ஏற்க மறுத்து நிராகரித்ததை நினைவு கூர்ந்தார்.

மேலும், பழனி மலைக்கோவிலில் நம்மவர் களான பண்டாரங்கள் தான் அர்ச்சகர்களாக இருந்தனர். திருமலை மன்னனின் அமைச்சராக இருந்த ராமப்பையன் என்ற பார்ப்பான், அந்த பண்டாரங்களின் கையால் விபூதி வாங்க மறுத்து, கொடுமுடி பகுதியில் இருந்து பார்ப்பன அர்ச்சகர் களைக் கொண்டு வந்து பழனி கோவிலில் அமர்த்தி யதை அங்குள்ள செப்பேடுகள் குறிப்பிடுவதைக் குறிப்பிட்டார்.

கேரளாவில் ஒரு தாழ்த்தப்பட்டவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பளித்த துரைசாமி ராஜு, ராஜேந்திர பாபு ஆகிய நீதிபதிகள் அர்ச்சகராக தாழ்த்தப் பட்டவர் நியமிக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்தனர். ஆனால் தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்ச்சகராகலாம் என்ற அரசின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது அதே உச்ச நீதிமன்றம். ஆனால் அன்றைக்கு கேரளாவிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது தமிழகப் பின்புலத்தில் வந்த நீதிபதிகள், ஆனால் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்திற்கு தடை வழங்கியது வட நாட்டு நீதிபதிகள் என்று கூறி, ஒரு சட்டப் புத்தகத்தில் உள்ள நீதியானது ஒவ்வொரு வருக்கும் எவ்வாறு மாறுபடுகிறது என்பதைச் சுட்டிக் காட்டினார். எனவே தான் நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்பதை திராவிடர் விடுதலைக் கழகம்  வலியுறுத்துகிறது என்றார். இறுதியாக மாவட்ட மகளிரணி அமைப்பாளர் தோழர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.

பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தைச் சுற்றிலும் சீருடை அணியாத உளவுத் துறையினர் 13 பேர், தலைவர்கள் பேசுவதைக் குறிப்பெடுத்துக் கொண்டும், வீடியோ எடுத்தும், செல்பேசியில் பதிவு செய்தவாறும் இருந்தனர்.

10.08.2013

காலை 11 மணிக்கு ஜோலார்பேட்டை பெரியார் சிலை அருகில் பரப்புரை நடைபெற்றது. கழகம் நடத்தும் இந்தப் பரப்புரையை வரவேற்று, திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய பொதுவுடைமைக் கட்சி, மனித உரிமை பாதுகாப்பு இயக்கம், விவசாய ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புகளின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

ம.ஜ.க.வைச் சார்ந்த கார்த்திகேயன் பாடல் பாடினார். நெமிலி பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் திலீபன் வரவேற்புரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்ந்த இரா. முல்லை, ம.ஜ.க.வைச் சார்ந்த மனோகர், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த பகுத்தறிவாளன் ஆகியோர் பயணத்தை வாழ்த்தி உரையாற்றினர். பயணத்தின் நோக்கங்களை விளக்கி கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார்.

இளைஞர் இயக்கத்தைச் சார்ந்த குடியாத்தம் சிவா நன்றி கூறினார்.

முன்னதாக கழகத்தின் பொதுச்செயலாளரை மதிமுக நகரச் செயலாளர் ரகுநாத் சால்வை அணிவித்து வரவேற்றார்.

பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், வழக்கறிஞர் ஜேக்கப் கரிகாலன், திமுகவைச் சார்ந்த மகி அன்பழகன் ஆகியோர் தோழர்களுக்கு தேநீர் வழங்கினர். நிகழ்வில் மதிமுக ஒன்றியச் செயலாளர் காளிங்கன், மகஇக வைச் சார்ந்த குணாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயணக்குழுவில் கலந்து கொண்ட தோழர் களிடம் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உரையாற்றினார்.

மதியம் 1 மணிக்கு வாணியம்பாடி வாரச் சந்தை திடலில் பரப்புரை நடைபெற்றது.தமிழ்தேச மக்கள் கட்சியைச் சார்ந்த செவ்வேள் தலைமை வகித்தார். வாணியம்பாடி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் புருஷோத்தமன் வரவேற்புரையாற்றினார். சமூக சமத்துவப் படையைச் சார்ந்த தோழர் கசேந்திரன், தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் தோழர் புலவர். சகாதேவன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் மதனகவி, ஒடுக்கப் பட்டோர் விடுதலை இயக்கத் தோழர் பிரதாபன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நா.வேலு, ஹோசிமின் ஆகியோர் பயணத்தை வாழ்த்திப் பேசினர். கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் பயணத்தின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினார்.

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் சீனி. பழனி நன்றி கூறினார். தோழர் மதனகவி இல்லத்தில் மதியம் அசைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாலை 6 மணிக்கு நெமிலி பேருந்து நிலையத்தில் பரப்புரை நடைபெற்றது. அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார் உரையாற்றினார். நெமிலி பகுதி திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர் திலீபன் நன்றி கூறினார்.

மாலை 8 மணிக்கு காஞ்சிபுரம் பெரியார்

சிலை அருகில் பரப்புரை நடைபெற்றது.

பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் உரையாற்றினார்.

மாலை 8.30 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பரப்புரை நடைபெற்றது. அய்யம் பேட்டை தோழர் ரவிபாரதி உரையாற்றினார். பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரை யாற்றினார்.  காஞ்சி மாவட்ட அமைப்பாளர் செங்குட்டுவன் நன்றி கூறினார். உணவு மற்றும் தங்கும் ஏற்பாடுகளை காஞ்சி மாவட்ட கழகத் தோழர்கள் செய்திருந்தனர்.

11.08.2013

காலை 11 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் பரப்புரை நடைபெற்றது. டேவிட் பெரியார் பாடல் பாடினார். முனைவர் ஜீவானந்தம் உரையாற்றினார்.

நண்பகல் 12 மணிக்கு பூந்தமல்லி குமணன் சாவடியில் பரப்புரை நடைபெற்றது. முனைவர் ஜீவானந்தம் உரையாற்றினார்.

மதிய உணவு ஏற்பாடு காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் மாங்காடு சேகர் இல்லத்தில் செய்யப்பட்டிருந்தது.

மாலை 6 மணிக்கு சென்னை பாலவாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தர்மபுரி இளவரசன் பெயரில் நினைவு மேடை அமைக்கப் பட்டிருந்தது. மாவட்ட துணைச் செயலாளர் வேலு தலைமை வகித்தார். சென்னை மாவட்டத் தலைவர் ஜான்சன் வரவேற்புரையாற்றினார்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் துரை.அருண், திருமூர்த்தி ஆகியோர் பயணத்தை வாழ்த்திப் பேசினர்.

சென்னை மண்டல அமைப்புச் செயலாளர் அன்பு தனசேகர் உரையாற்றினார்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினிகாந்த பேசும் போது, சமூக நீதிக் காவலர் என்று பட்டம் சூட்டிக் கொண்ட மருத்துவர் இராமதாஸ் இன்று மனுநீதிக் காவலராகச் செயல்படுகிறார் என்று சாடினார்.

தர்மபுரி இளவரசன் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, திவ்யாவுடன் தொடர்பு கொண்டு பேசி, இந்த பிரச்சினையில் தனக்கு உதவும்படி கோரியதையும், தலைவர் அவர்களும் தான் உதவி செய்வதாகக்

கூறி இருந்த நிலையில் எதிர்பாராத வகையில் இளவரசன் மரணம் நிகழ்ந்து விட்டது என்றும் கூறினார்.

கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசும் போது, “மனிதன் சமத்துவமாக வாழ்வதுதான் சுயமரியாதை என்றும், அந்த சமத்துவத்திற்கு ஜாதி, மதம், ஆகியவை தடையாக உள்ளது என்றும், சுயமரியாதையும் சமத்துவமும் ஒன்றாகப் பயணிக்க வேண்டிய காலகட்டம் இது என்று குறிப்பிட்டார்.

பார்ப்பனர்கள் நம்மில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். அவர்களின் மொழி வேறு, உணவுமுறை வேறு, பழக்க வழக்கம் வேறு. நம்மவனை உன் மாநிலம் எது? மொழி எது என்று கேட்டால், என் மாநிலம் தமிழ்நாடு, என் மொழி தமிழ் என்பான். அது போலவே மற்ற மாநிலத்த வனும் சொல்லுவான். ஆனால் பார்ப்பானைக் கேட்டால், அவன் தாய்மொழி சமஸ்கிருதம், கீதை, வேதங்கள்  தான்  அவன் இலக்கியம் என்பான். இன்றைக்கு மத்திய அரசில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு உள்ள பிரதி நிதித்துவம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இல்லை. பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொடுக்க பார்ப் பனர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி கவலையில்லை, பிற்படுத்தப்பட்டோர்களை நினைத்துதான் கவலை, அவர்கள் மத்திய அரசுப் பணிக்கு வந்தால் தங்களுக்குப் போட்டியாக இருப்பர் என்று பார்ப்பனர்கள் நினைக்கின்றனர் என்று கூறிய பொதுச்செயலாளர் மேலும் பேசுகையில்,

பா.ஜ.க.வாக இருந்தாலும், காங்கிரஸாக இருந் தாலும் இரண்டுமே மக்களின் வாழ்வியலைப் பாதிக்கும் கொள்கையைத்தான் எடுக்கின்றனர். நாடாளுமன்ற செயலகத்தில் உள்ள 140 உயர்பதவி களில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் இல்லை என்பதை மத்திய அமைச்சர் நாராயணசாமியே கூறியுள்ளதை நினைவு கூர்ந்தார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசும் போது, “நமது இயக்கத்திற்கு இது போன்ற பயணங்கள் புதிதல்ல, ஏற்கனவே இது போன்ற பல பரப்புரைகளை நடத்தி உள்ளோம். இதற்கு முன்பு கூட தனியார் துறையில் இடஒதுக்கீடு கோரி சம்பூகன் சமூக நீதிப் பயணத்தை நடத்தினோம் என்று குறிப்பிட்ட கழகத் தலைவர், கடவுள் என்ற ஒன்று இருந்தால் அவருக்கும் பக்தர்களுக்கும் இடையில் தரகர்கள் ஏன்? என்று பெரியார் கூறியதை நினைவு கூர்ந்தார்.

பெரியார் இந்திய அரசியல் சட்டத்தை எரித்த போது, அதிலுள்ள பழக்க வழக்கங்கள் என்று குறிப்பிடப்படும் பிரிவை எரித்தார். இந்தப் பிரிவைக் கொண்டுதான் இன்றைக்கு வரை அரசுகள் நம்மை ஏமாற்றுகின்றன.

இதை பெரியார் 1929 இல் நடந்த ஆதி திராவிடர் சுயமரியாதை மாநாட்டிலேயே “இப்போது அரசியலில் பழக்க வழக்கங்கள் என்ற ஒரு புதிய பிரிவைக் கூறுகிறார்கள். இந்த வார்த்தை நமக்கு ஆபத்து” என்று பெரியார் அன்றே எச்சரித்ததை நினைவு கூர்ந்தார்.

இந்து மதத்தின் ஒடுக்குமுறைகள் தாங்காமல் ஏராளமானோர் மதம் மாறிய பிறகு தான், இந்து மதத்தில் சில சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டு கோவில் நுழைவுக்கு அனுமதி கொடுக்கப் பட்டதைக் கூறிய கழகத் தலைவர், அன்றைக்கு பார்ப்பன வீதியில் நடக்க முடியாத நிலையில் இருந்த பிற்படுத்தப்பட்டவர்கள் இன்று தன்னுடைய தெருவில் தாழ்த்தப்பட்டவனை நடக்கக் கூடாது என்கிறார்கள், இந்த நிலை மாற வேண்டும் என்று கூறினார். ஜாதிப் பஞ்சாயத்தில் ஈடுபடும் நபர்களுக்குச் சிறை தண்டனை விதிக்கும் ஒரு அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை

விடுத்தார்.

இறுதியாக இராயப்பேட்டை பகுதிச் செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார். கூட்டத்தில் சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் டேவிட் பெரியார், மாவட்டப் பொருளாளர் ஈழவேந்தன், மோகன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

உண்டியல் நிதி

ஒவ்வொரு இடத்திலும் பரப்புரை நடைபெறும் போதெல்லாம் வசூல் குழுவினரான நங்கவள்ளி கிருஷ்ணன், திருப்பூர் மூர்த்தி, பல்லடம் மணிகண்டன், செல்வக்குமார், திருப்பூர் சம்பூகன் ஆகியோர் ஒவ்வொரு கடைக்கும் சென்று துண்டறிக்கைகளை விநியோகித்து, பயணத்தின் நோக்கங்கள் குறித்து பரப்புரையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் உண்டியல் ஏந்தி வசூலிலும் ஈடுபடுகின்றனர்.

வாகனம் ஓட்டிய தோழர்கள்

பரப்புரைப் பயணத்தில் 20 நாள்களும் வாகனத்தை ஓட்டிய தோழர்கள் காவலாண்டியூர் அவிநாசி, மேட்டூர் அணை தங்கமணி.

செய்தி : ஈரோடு சிவக்குமார்

படங்கள்: கோகுல கண்ணன்

பெரியார் முழக்கம் 15082013 இதழ்

You may also like...