வினாக்கள்… விடைகள்…
ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள, டீசல் விலையை கடுமையாக உயர்த்தி எண்ணெய் நிறு வனங்களின் வருவாய் இழப்பை குறைக்க வேண்டும். – பிரதமரின் பொருளாதார ஆலோசகர் கி. ரெங்கராஜன்
எண்ணெய் நிறுவனங்கள் நெருக்கடியி லிருந்து மீண்டுவிடும். ஆனால், எண்ணெயைப் பயன்படுத்த மக்கள் தான் இருக்க மாட்டார்கள். அதனாலென்ன? பொருளாதாரம், முக்கியம் பிரதமரே!
ட நிலக்கரி சுரங்க ஒதுக்கிடு கோப்புகள் திருடப் பட்டுள்ளன. இது தொடர்பாக எப்போது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப் போகிறீர்கள்? – சுஷ்மா சுவராஜ் கேள்வி!
முதல் தகவல் அறிக்கையும் காணாமல் போகும் என்பது உறுதியானால், இப்போதே தாக்கல் செய்ய தயார்!
ட 7 வயதில் பள்ளிப் படிப்பையும் 13 வயதிலேயே பட்டப் படிப்பையும் முடித்து சாதனைப் புரிந்த உ.பி. மாநில சிறுமி சுஷ்மா வர்மா மேல் படிப்புக்கு உதவிட பல்கலைக் கழகங்கள் போட்டிப் போட்டு ஆர்வம். – செய்தி
… ப்பூ … இது ஒரு சாதனையா? எங்க ஊருல திருஞானசம்பந்தன் குழந்தையாக பிறந் தவுடனேயே ‘பதிகம்’ பாடியவன், தெரியுமோ?
ட ரிசர்வ் வங்கி கொள்கைகளை உருவாக்குதில் வெளிப் படையான அணுகுமுறை வேண்டும். – புதிய கவர்னர் ரகுராம் ராஜன்
…. அப்ப இதுவரை ரிசர்வ் வங்கி வெளிப் படையாக செயல்படவில்லைன்னு சொல்ல வர்றீங்க… அப்படித் தானே!
ட தமிழ்நாடு முழுதும் உள்ள கோயில்களில் மாற்று மின் சக்தியான சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. – அறநிலையத் துறை அமைச்சர் தனபால்
மாற்று மின் சக்தியை ஆகமம் ஏற்றுக் கொள்ளும். ஆனால், பார்ப்பன அர்ச்சகருக்கு பதிலாக மாற்று ஜாதி அர்ச்சகரை மட்டும் ஆகமம் ஏற்காது; அப்படித்தானே?
ட வினாயகன் சிலைகளை பூஜைக்குப் பின், ஆறு, குளம் ஏரிகளில் கரைப்பது, ‘மண்ணில் பிறக்கும் நீ மண்ணுக்கே சொந்தம்’ என்ற தத்துவத்தை விளக்கு வதற்குத்தான். – ‘தினமலர்’ கட்டுரை
சும்மா கதை விடாதீங்க… பார்ப்பான் வேதம் ஓதி ‘புனித சக்தி’ ஊட்டப்படாத வினாயகன் சிலைகளை மக்கள் கோயில் கட்டி வழிபட்டு விடக்கூடாது என்பதுதான் தண்ணீரில் கரைக்கச் சொல்லும் ரகசியம். அது எங்களுக்கும் புரியும். அது சரி, மண்ணில் பிறப்பவர் மண்ணுக்குச் சொந்தம் என்றால், வினாயகனை மண்ணில் குழித் தோண்டி புதைக்க வேண்டியது தானே? ஏன் தண்ணீரில் கரைக்க வேண்டும்?
ட கிரிமினல் குற்றத்தில் சிறையில் இருப் பவர்கள் சிறையிலிருந்தபடியே தேர்தலில் போட்டியிட நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறை வேறியது. – செய்தி
அப்போ, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் என்ற பெயரை கிரிமினல் பிரதிநிதித்துவ சட்டம் என்று மாற்றிடுங்க!
ட போடி தொழிலதிபர் திருப்பதி ஏழுமலை யானுக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் தங்கத்தில் ‘பாதம்’ செய்து காணிக்கை யாக்கினார். திருப்பதியிலிருந்து அர்ச்சகர்கள் நேரில் வந்து பூஜை செய்து எடுத்துச் சென்றனர். – செய்தி
ஏழுமலையானுக்கு ஒரு பக்தர் தங்கத்தில் ‘மூளை’ செய்து தர விரும்புகிறார். ஏழுமலை யான் அர்ச்சகர்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்வார்களா?
ட ‘கடவுள் அவதார சாமியார்கள் மற்றும் சோதிடர்’களை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் மக்களுக்கு சேவை செய் கிறார்கள். அதற்காக ஊதியத்தையும் பெறு கிறார்கள். அவர்களும் ‘தொழில் முனைவர்’கள் தானே? – அலகாபாத்உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தீர்ப்பு (செப்.3)
அப்படின்னா, ஒரு சந்தேகம்! சீட்டுக் கம்பெனி நடத்தி மோசடி செய்தவர்கள்; வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக மோசடி செய் பவர்கள் கூட ‘சேவைக்கு பணம்’ பெறுவோர் தான். அவர்களையும் சோதிடர், சாமியார் களாகவே கருதி அலகாபாத் நீதிமன்றம் தொழில் முனைவோர் பட்டியலில் சேர்த்து விடுமா?
ட பில்லி சூன்ய மோசடிக்கு எதிராக சட்டம் கொண்டு வர வலியுறுத்திய மராத்திய பகுத்தறி வாளர் தபோல்கார், பில்லி சூன்ய நம்பிக்கை யாளர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டார். – செய்தி
பில்லி சூன்யம் உண்மை என்று நம்பும் கும்பல் அதை ஏவி விட்டிருக்கலாமே! ஏன் துப்பாக்கியை தூக்க வேண்டும்?
ட பகவான் கிருஷ்ணரை கடுமையாக அவமதித்து அறிக்கை வெளியிட்ட தி.க. தலைவர் கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி யாதவ மகா சபைத் தலைவர் டி.தேவநாதன், காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். – செய்தி
அடேங்கப்பா…. கிருஷ்ணனுக்காக எப்படி கூவுறாரு பார்த்தீங்களா? அப்படி ஒரு ‘ஃபீலிங்கு’!
ட அரசு கோயில்களில் சேர்ந்துள்ள தங்கம், மக்களின் காணிக்கை. இதனை எடுக்கவோ, கொடுக்கவோ யாருக்கும் அதிகாரம் கொடுக்க வில்லை. – இராமகோபாலன் அறிக்கை
இப்படி அறிவிக்கும் அதிகாரத்தை இராம கோபாலனுக்கு யார் கொடுத்தார்களாம்? எந்தக் கடவுளிடம் இந்த அதிகாரத்துக்கான ‘வரம்’ பெற்று வைத்திருக்கிறார் என்பதையும் விளக்கினால் நல்லது!
ட கோயில் அர்ச்சகர்களை அரசு ஊழியர்களாகக் கருதி, அரசு ஊழியர்களுக்குரிய சலுகைகளை வழங்க வேண்டும். – ஓய்வு பெற்ற அர்ச்சகர் உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு
ஓ…. தாராளமாக கருதலாமே! அரசு ஊழியர்கள் நியமனத்தில் பின்பற்றும் 69 சதவீத தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை அர்ச்சகர் நியமனத்திலும் பின்பற்றினால், அர்ச்சகர்களும் அரசு ஊழியர்களாகிடலாம்!
ட மனித மலத்தை மனிதனே எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துவோரை 5 ஆண்டுகள் தண்டிக்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. – செய்தி
இந்தச் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல் மனிதர் குஜராத் மோடி தான்! அவர் தான் மலம் எடுக்கும் தொழில் தான் மிக உயர்ந்த கடவுள் திருப்பணி என்று நூல் எழுதியுள்ளார்.
ட மத்திய அரசு மகாராஷ்டிராவைப் போல் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். – கலைஞர் அறிக்கை
எதிர்கட்சியாக இருக்கும்போது கலைஞர் கொள்கையில் ‘சொக்கத் தங்கம்’ தான். ஆனால், ஆளும் கட்சியாக இருக்கும்போது மட்டும் கட்சியில் உருவாக்கிய பகுத்தறிவு அணியையும் சரி; ஆட்சியில் உருவாக்கிய சமுதாய சீர்திருத்தக் குழுவையும் சரி செயல்பட விடாமல் முடக்கிப் போட்டுவிடுவார்.
ட இலங்கைக்கு இரண்டு போர்க் கப்பல்களை மத்திய அரசு வழங்குவது, ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தில் எடுத்த முடிவு; இப்போது எடுக்கப்பட்ட முடிவு அல்ல. – அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்
ஏற்கனவே செய்து கொண்ட ராஜீவ்-ஜெய வர்த்தனா ஒப்பந்தத்தை குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டதே இலங்கை. அதைத் தட்டிக் கேட்டீர்களா? சரி; அது போகட்டும்! பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் காந்தியும், இர்வின் பிரபுவும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி நிறைவேற்றப்பட வேண்டிய அம்சங்கள் ஏதாவது இருந்தால், அதையும் சொல்லி விடுங்கள்!
ட இலங்கையில் என்னை சந்தித்த பத்திரிகை யாளர் மற்றும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். – அய்.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை
அய்.நா. மனித உரிமை ஆணைய தலைவரின் உரிமைகளே பறிக்கப்படும் ஒரு நாட்டில் காமன் வெல்த் தலைவர்கள் மாநாடு கூட்டுவதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும்!
ட திண்டுக்கல்லிலிருந்து கச்சத் தீவுக்கு தடையை மீறி இந்து மக்கள் கட்சியினர் கொண்டு செல்ல முயன்ற ‘விநாயகனை’ போலீசார் பறிமுதல் செய்தனர். – செய்தி
நல்ல நடவடிக்கைதான்! ‘வினாயகன்’ திண்டுக்கல்லிலேயே தங்கி ஒவ்வொரு நாளும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதிப்பது, நல்லது!
ட வினாயகர் சதுர்த்தி தினத்தில் கன்னியாகுமரி அருகே சிறப்பு வழிபாடுகள் முடிந்த பிறகு, நள்ளிரவில் கோயில் கதவை உடைத்து, சிலை திருட்டு, போலீசில் புகார். – செய்தி
வினாயகனே கோயில் கதவை உடைத்து, வெளியே போய் கொண்டாட்டங்களைப் பார்வையிட சென்றிருப்பாரா என்ற கோணத்திலும் காவல்துறை புலன் விசாரணை நடத்துவது நல்லது. ட
பெரியார் முழக்கம் 12092013 இதழ்