வினாக்கள்… விடைகள்…
காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்கள் கோயில் கட்டி தினமும் வழிபாடு நடத்தி வருகிறார்கள். – செய்தி
கடவுள் இருக்கிறார் என்று சொல்லக்கூடிய ஒரே கோயில் இதுவாகத்தான் இருக்கும்!
மது பாட்டில்களில் – இந்து கடவுள்களின் படங்களை அச்சிடும் ஆஸ்திரேலியா நாட்டைக் கண்டித்து சென்னையில் இந்து முன்னணி போராட்டம். – செய்தி
நியாயம்தாங்க… இதேபோல் இந்துமதச் சின்னங்களை நெற்றியிலும் கழுத்திலும் போட்டுக் கொண்டு மதுபாட்டில்களை உடைக்கும் இந்து குடிமகன்களை எதிர்த்தும் ஒரு போராட்டம் நடத்துங்க!
தமிழக மீனவர்களை நாங்கள் தாக்கவில்லை என் கிறது இலங்கைக் கடற்படை. அப்படியானால் தாக்குவது யார் என்று அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். – இந்திய கடற்படை துணை தளபதி பேட்டி
திமிங்கிலங்களும் முதலைகளும் தமிழக மீனவர்களை மட்டும் குறி பார்த்து தாக்கிவிட்டு பிறகு கடலுக்குள் ஓடி விடுகின்றன என்று இலங்கை கடற்படை விளக்கம் கூறலாம். அந்த விளக்கத்தை இந்தியக் கடற்படையும் ஏற்கலாம். காதுல பூ சுத்தாதீங்கய்யா…
60 கோடி இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. – உலக வங்கி அதிர்ச்சி தகவல்
அதுவா இப்ப முக்கியம்! எங்கள் கடவுளர்களுக்கே கோயில்களில் கழிப்பறை இல்லை. முதலில் அதைக் கவனியுங்கள்!
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த அமைச்சர்கள் பதவி பறிபோனதால் இந்த ஆண்டு தீபத் திருவிழாவில் எந்த அமைச்சரும் கலந்து கொள்ளவில்லை. – தினமலர் செய்தி
அமைச்சர்களுக்கு பகுத்தறிவை ஊட்டிய ‘அண்ணாமலையானு’க்கு ‘அரோகரா!’
காவல்துறையில் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட மோப்ப நாய்கள் பணி ஓய்வுக்குப் பிறகு உரிய பராமரிப்பு இன்றி அவதிப்படுகின்றன. – செய்தி
பாவம்! பொய் வழக்குப் போடத் தெரியாத இந்த வாயில்லா ஜீவன்களுக்கு தமிழக அரசின் பரிசுத் தொகையும், பதக்கமுமா கிடைத்துவிடப் போகிறது?
எந்தக் குற்றமும் செய்யாத கொளத்தூர் மணியை நள்ளிரவில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது, கண்டனத்துக்குரியது. – தொல் திருமாவளவன்
சட்டம் தெரியாமல் பேசக் கூடாது. நள்ளிரவில் வீட்டில் உறங்குவதே இந்திய இறையாண்மைக்கு ஆபத்தானது தான்!
மகளிரால் மகளிருக்காக நடத்தப்படும் ‘பாரதிய மகளிர்’ வங்கியை மும்பையில் மன்மோகன் திறந்து வைத்தார். – செய்தி
அது என்ன ‘பாரதிய’? அது இந்தியாவில் தான் இருக்கிறதா?
திருவண்ணாமலை, ராமேசுவரம் கோயில்களுக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்திய பசுமாடுகள் மாயம். – தினமலர் செய்தி
இதுக்கெல்லாம் சி.பி.அய். விசாரணை நடத்த முடியாதுங்க… அவுங்க மாயமான கோப்புகளைத் தேடுவதற்கே நேரம் போதல்ல.
அமேதி தொகுதியில் மக்களை சந்தித்து குறைகளைக் கேட்க 100 காங்கிரஸ் தொண்டர் களுக்கு பிரியங்கா ‘மோட்டார் பைக்’குகளை பரிசு வழங்கினார். – செய்தி
மக்கள் தரும் புகார் மனுக்களை ஏற்றிக்கொண்டு வருவதற்கு அப்படியே ஆளுக்கொரு ஜீப்பும் கொடுத்துடுங்க.
பெரியார் முழக்கம் 28112013 இதழ்