‘திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடர்பயணம்’
‘இலக்கு நோக்கிய பயணத்தில் இணைய வரும் தோழர்களே, வாருங்கள்!’ என்ற அழைப்பை ஏற்று வந்த தோழர்களுடன் 2012 Aug 12 ஆம் நாள் திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோட்டில் உதயமானது. 2001 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த பெரியார் திராவிடர் கழகத்தில் தலைவராக இருந்த கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விடுத்த அழைப்பை ஏற்று, விலகி வந்த பெரும்பாலான பெரியார் திராவிடர் கழக மத்தியக் குழு உறுப்பினர்களுடன் தொடங்கப் பட்ட இந்த அமைப்பு, திராவிடர் விடுதலைக் கழகம் என்ற தனிப் பெயரை சூட்டிக்கொண்டு, தனது பயணத்தைத் தொடர்ந்தது. இயக்கம் தொடங்கியதிலிருந்து – ஜாதி, தீண்டாமைக்கு எதிராக கழகத்தின் பணிகள் பெரியார் காட்டிய வழியில் தீவிரம் பெற்றன. புதிய சவால்களையும் கழகம் எதிர்கொண்டது. சமூக நீதியான இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பயன்படுத்தி, தங்களை மீட்டெடுத்துக்கொண்ட, பிற்படுத்தப் பட்ட ஜாதிகளைச் சார்ந்த சில தலைவர்கள் ஜாதிய அமைப்புகளை ஒன்று சேர்த்துகொண்டு, தலித் மக்களுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்தனர்.
அந்த சக்திகளை நேரடியாக களத்தில் எதிர் கொண்ட கழகம், ஜாதி எதிர்ப்பு இயக்கங்களையும் மாநாடுகளையும் நடத்தியதோடு, பெரியார், அம்பேத்கர் எரித்த பார்ப்பனிய கொடுங்கோல் “சட்டமான” மனு சா°திரத்தைத் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை தமிழகம் முழுதும் பெண்கள் தலைமையில் 18 மய்யங்களில் நடத்தியது. மனு சா°திரப் போராட்டத்தை அறிவிக்க, ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய இரண்டு நாள் மாநாடு, கழகத்தின் எழுச்சிமிகு வளர்ச்சியையும் கொள்கை உறுதியை யும் பறைசாற்றியது. பரப்புரை போராட்டம் – கைது என்று தொடர்ந்து களப்பணியாற்றிய திராவிடர் விடுதலைக் கழகம் கடந்து வந்த பயணங்களின் நிகழ்வுகள் பற்றிய ஒரு தொகுப்பு:
ஆக°டு 12 இல் புதிய பெயரோடு களமிறங்கிய திராவிடர் விடுதலைக் கழகம், ஆக°டு 17 முதல், மாவட்டந்தோறும் தோழர்களை சந்திக்கும் பயணத்தைத் தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் இரத்தினசாமி உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள், நெல்லை, திண்டுக்கல், திருச்சி, சென்னை, புதுச்சேரி, திருப்பூர், ஈரோடு, கோவை, மேட்டூர், சேலம், குமாரபாளையம், காவேரிப்பட்டிணம் ஆகிய ஊர்களில் தோழர்களை சந்தித்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.
செப்.11 – சத்துணவுக் கூடங்களில் தலித் பெண்கள் உணவு தயாரிக்க எதிர்ப்புத் தெரிவித்த ஜாதிவெறி சக்திகளையும் அதற்கு துணைப் போன தமிழக அரசையும் கண்டித்து, சென்னை, சேலம், ஈரோடு, பட்டுக்கோட்டை, திருச்சி, கிருட்டிணகிரி, திருவாரூரில் கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
அதே நாளில், இடிந்தகரையில் கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது காவல்துறையும் துணை இராணுவமும் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, அணுஉலை எதிர்ப்பு கூட்டியக்கத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சென்னையில் சாலை மறியல் நடந்தது. 300 தோழர்கள் கைதானார்கள்.
2012 செப்டம்பர் 21, 22, 23 தேதிகளில் கோவை மேட்டுப்பாளையத்தில் கோவை மண்டல கழகத் தோழர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் சிறப்புடன் நடந்தது. செப்டம்பர் 23 அன்று ஆண்டுதோறும் விநாயகன் சிலை ஊர்வலத்தை நடத்தும் மதவெறி சக்திகளுக்கு எதிராக சென்னையில் பெரியார் கைத் தடி ஊர்வலம் நடத்தி தோழர்கள் கைதானார்கள்.
செப்டம்பர் 21 ஆம் தேதி சென்னையில் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை கழகத்தினர் நடத்தி, 80 தோழர்கள் கைதானார்கள். ம.பி. பா.ஜ.க. அரசு இனப் படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது. இதே செப்டம்பரில் கோவையில் ஈஷா ஆன்மிக மய்யத்துக்கு தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப் படுவதைக் கண்டித்து (தமிழ்நாடு முழுதும் கடும் மின்வெட்டு தொடர்ந்த சூழலில்) முற்றுகைப் போராட்டம் நடத்தி தோழர்கள் கைதானார்கள். சூலூர் அருகே வினாயக பூஜை தொடர்பாக மதவாத சக்திகளுக்கும் தோழர்களுக்கும் இடையே உருவான பிரச்சினையில் தோழர்கள் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
அக்டோபரில் கழகத்தில் முன்னணி அமைப்புகளில் ஒன்றான சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் கொளத்தூர் அருகே உக்கம்பருத்திக் காட்டில் 6 நாள் வீதி நாடகப் பயிற்சி நடந்தது. சேலம் மாவட்டம் கண்ணாமூச்சி கிராமத்தில் ஊர்ப் பொது மேடையில் பிள்ளையார் சிலையை அமைக்கும் முயற்சிகளை தோழர்கள் முறியடித்தனர்.
அரசு ஆணைகளுக்கு எதிராக ஆயுத பூஜை போட்ட அரசு அலுவலகங்கள், காவல் நிலையங் களுக்கு எதிராக களமிறங்கி செயல்பட்டனர். கழகத் தோழர்கள், சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ஆயுத பூஜை போடுவதை நிறுத்தச் சென்ற கழகத் தோழர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பழனியில், பழனி ஆண்டவர் கோயில் கலை பண்பாட்டுக் கல்லூரி ஆசிரியர் நியமனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து, கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
பல்லடத்தில் ‘சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழக’ (சு.க.ப.க.) சார்பில் ஒரு நாள் குறும்பட பயிற்சி நடத்தப்பட்டது. சங்கராபுரம் அருகே உள்ள சேது சமுத்திர கிராமத்தில் தலித் மக்கள் சாமி ஊர்வலத்தை பொதுச் சாலைகள் வழியாகக் கொண்டு செல்வதற்கு ஆதிக்க ஜாதிகள் தடை விதித்ததைக் கண்டித்து கழகத் தோழர்கள் போராட்டம் நடத்தி 58 பேர் கைதானார்கள்.
நவம்பர் 18 ஆம் தேதி சேலத்தில் கழகத்தின் செயற்குழு கூடியது. தர்மபுரி மாவட்டத்தில் தலித் கிராமங்களில் புகுந்து, ஜாதி வெறியர்கள் கொடூர தாக்குதல் நடத்தி, வீடுகளை சூறையாடியதைக் கண்டித்தும், ஈழத் தமிழர் மீதான இனப் படு கொலைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யும், சமூக நீதியால் பயனடைந்த பார்ப்பனரல்லாத இடைநிலைச் சாதிகளில் சிலர் வெளிப்படையாக ஜாதி வெறியைத் தூண்டிவிடுவதைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு, ஈரோடு மாநாடு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
லண்டனில் பிரித்தானியா தமிழ்க் கழகம், பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து நவம்பர் 7, 8 தேதிகளில் நடத்திய உலகத் தமிழர் மாநாட்டிலும் தொடர்ந்து, நவம்பர் 27 ஆம் தேதி லண்டனில் நடந்த மாவீரர் நாள் நிகழ்விலும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றார்.
தர்மபுரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஜாதி வெறிக் கும்பல் நடத்திய தாக்குதலைக் கண்டித்து திண்டுக்கல், சென்னை, பெரம்பலூர், தர்மபுரி, மேட்டூர், கோவை, கிருட்டிணகிரியில் கழகச் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஈரோட்டில் நிகழவிருக்கும் மனுசா°திர எரிப்பு மாநாட்டின் நோக்கங்களை விளக்கி, சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் 7 நாள் பரப்புரைப் பயணம் நடத்தினர். நவம்பர் 23, 24இல் ஈரோட்டில் மனுசா°திர எரிப்புப் போராட்ட விளக்க மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. பல்லாயிரக் கணக்கில் இளைஞர்கள் திரண்டனர். மேடைகளில் ஜாதி மறுப்பு திருமணங்கள் நடந்தன. தலைவர்கள், சமூகவியலாளர்கள் பங்கேற்ற கருத்தரங்குகள், விவாத அரங்குகள், கலை நிகழ்ச்சிகள் என்று மாநாடு கருத்துச் செறிவுடனும் உணர்ச்சிப்பூர்வமாக நடந்து முடிந்தது.
2013 ஆம் ஆண்டில்…
2013 ஜனவரி மாதத்தில் மருத்துவர் ராமதாசு, தமது வன்னியர் சங்கத்துடன் சில பிற்படுத்தப்பட்ட ஜாதி அமைப்புகளையும், ‘பிராமண’ சங்கத்தையும் இணைத்துக்கொண்டு அனைத்து சமுதாயக் கூட்டமைப்பு என்ற பெயரில் மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார். வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கடுமையான பிரிவுகள் நீக்கப்பட வேண்டும் என்றும், ஜாதி மறுப்புக் காதல் திருமணங்கள், நாடகத் திரு மணங்கள் என்றும்; பெற்றோர்களின் சம்மதத்துடன் நடக்கும் ஜாதி மறுப்புத் திருமணங்களே செல்லும் என்று சட்டமியற்ற வேண்டும் என்றும் அக்கூட்டங்களில் தீர்மானங்கள் போடப்பட்டன. தமிழ்நாட்டை மீண்டும் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த ‘மனுசா°திரக்’ கோரிக்கைகளுக்கு எதிராக திராவிடர் விடுதலைக் கழகம் எதிர் நடவடிக்கைகளிலும் பரப்புரைகளிலும் இறங்கியது. இந்த ஜாதியமைப்புக் கூட்டங்கள் நடைபெற்ற இடத்துக்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி, கழகத் தோழர்களும் ஒத்த கருத்துள்ள தோழமை அமைப்பினரும் கைதானார்கள். கோவை, கரூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல ஊர்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சென்னையில் தியாகராயர் நகரில் இதேபோல் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தபோது, ஜாதியமைப்பைச் சார்ந்தவர்கள் கழகத் தோழர்களைத் தாக்க வந்தனர். தோழர்களும் திருப்பித் தாக்க தயாரான நிலையில் காவல்துறை தலையிட்டு தடுத்தது. கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
பிப்ரவரி மாதம் முழுதும் மாவட்டந்தோறும் ஜாதி எதிர்ப்பு மாநாடுகளை கழகம் நடத்தியது. பிப்ரவரி 4 ஆம் தேதி சென்னையிலும், பிப்.16 ஆம் தேதி சேலத்திலும், பிப். 18 ஆம் தேதி திண்டுக் கல்லிலும், பிப். 23 ஆம் தேதி திருவாரூரிலும், மார்ச் 9 ஆம் தேதி நெல்லையிலும், மார்ச் 18 ஆம் தேதி கோவையிலும், மார்ச் 23 ஆம் தேதி திருச்சியிலும் மாநாடுகள் எழுச்சியுடன் நடைபெற்றன. சென்னை மாநாட்டில் பேரணிக்கு காவல்துறை திடீரென மாநாட்டுக்கு முதல்நாள் அனுமதி மறுத்தது. சேலம் மாநாட்டுக்கு காவல்துறை விதித்த தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் வழியாக அனுமதி பெற்று, மாநாடு சிறப்புடன் நடந்தது.
மாநாடுகளைத் தொடர்ந்து, “எங்கள் தலை முறைக்கு ஜாதி வேண்டாம்” என்ற முழக்கத்தை முன்வைத்து, சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மார்ச் 15 தொடங்கி மார்ச் 24 வரை பரப்புரை இயக்கம் நடத்தினர். அம்பத் தூரில் தொடங்கிய பரப்புரை இயக்கம், காஞ்சி புரத்தில் நிறைவடைந்தது. ஜாதிவெறி அமைப்புகள் தலைதூக்குவதை எதிர்த்து, மக்களிடம் தோழர்கள் கருத்துகளை முன்வைத்து, பல்லாயிரக் கணக்கில் துண்டறிக்கைகளையும் வழங்கினர். மனு சா°திர எரிப்புப் போராட்டம் ஏன் என்று மக்களிடம் விளக் கப்பட்டன. ஜாதி தீண்டாமைக்கு எதிராக கழகம் தொடங்கிய இயக்கம் ‘விஜய்’ தொலைக்காட்சியில், ‘நீயா? நானா?’ நிகழ்விலும் எதிரொலித்தது. கிராமங் களில் நடக்கும் தீண்டாமைக் கொடுமைகள் பற்றி உரத்துப் பேசிய நிகழ்ச்சியாக அது அமைந்திருந்தது. இதே கருத்தை முன்வைத்து நடிகர் பிரகாஷ்ராஜ் ‘கவுரவம்’ என்ற திரைப்படத்தை தயாரித்தார். அப் படத்தின் பாடல் ஒலி நாடா, இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலேயே வெளியிடப் பட்டது.
மனு சா°திரம் எரிப்பு
திட்டமிட்டபடி புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில், தமிழ்நாட்டில் 18 மய்யங்களில் மனு சா°திரம் எரிக்கப்பட்டது. தூத்துக்குடி, கோபி, ஒட்டன் சத்திரம், குமாரபாளையம், புதுச்சேரி, திருப்பூர், மேட்டூர், கோவை, சென்னை, கல்லக்குறிச்சி, மயிலாடுதுறை, திருச்சி, கரூர், பொள்ளாச்சி, ஈரோடு, ஓசூர், காஞ்சிபுரம், சேலம் ஆகிய ஊர்களில் மனு சா°திரத்தை எரித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் கைதானார்கள். போராட்டங்களுக்கு பெண்களே தலைமை தாங்கினார்கள்.
கழகத்தின் ஜாதி-தீண்டாமை ஒழிப்புப் பணியைப் பாராட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஏப்.14 ஆம் தேதி நடத்திய அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு ‘பெரியார் ஒளி விருது’ வழங்கியது.
ஏப். 20 ஆம் தேதி, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கன்யாகுமரியிலிருந்து கூடங் குளம் நோக்கி முற்றுகைப் பயணம் தொடங்கிய போது கொளத்தூர் மணி உள்ளிட்ட 200 தோழர்கள் கைதானார்கள்.
ஏப். 30 ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் சென்னை இராயப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதியில் கழகத்தை கோட்டையாக்கி வீரமரண மடைந்த தோழர் பத்ரி நாராயணன் நினைவு நாளில் தோழர்கள் குருதிக் கொடை முகாமை நடத்தி னார்கள். அன்று மாலையே மரணதண்டனைக்கு எதிராக 7 நாள் பரப்புரை இயக்கத்தை சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தொடங்கினர். சென்னை தியாகராயர் நகரில் வைகோ தொடங்கி வைத்த பயணம் மாங்காட்டில் நிறைவடைந்தது.
மே 15 ஆம் தேதி கிணத்துக்கடவு பகுதியில் தொட ரும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக கோவை மாவட்டக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மே 26 ஆம் தேதி திருப்பூரில் மாநில செயற்குழு கூடியது. ஜாதியைக் காக்கும் புதிய நிறுவனமாக அரசியல் கட்சிகள் உருவாகி வருவதை சுட்டிக் காட் டியும், மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர் புகுத்துவதைக் கண்டித் தும்; உலக மய சுரண்டல், இ°லாமியர் மீது பொய் வழக்குகள், ஆசிரியர் தேர்வில் அநீதிகளைக் கண்டித் தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆதிக்க ஜாதி அமைப்புகள் நடத்தும் வன்முறைகளை ஒடுக்கு வதில் தமிழக அரசின் முயற்சிகளை வரவேற்கும் அதே நேரத்தில் அடக்குமுறைச் சட்டங்களை (தேசிய பாதுகாப்பு, குண்டர் சட்டம்) பயன்படுத்து வது கூடாது என்றும் செயற்குழு சுட்டிக்காட்டியது.
மே 17, 18, 19 தேதிகளில் கழகத்தின் முன்னணி அமைப்பான தமிழ்நாடு அறிவியல் மன்றம் குழந்தைகளுக்கான மூன்று நாள் ‘பழகு மகிழ்வு முகாமை’ திண்டுக்கல்லில் நடத்தியது.
இதே மே மாதத்தில் சென்னிமலை அருகே வடுகபாளையம் என்ற கிராமத்தில் சுடுகாட்டுக்கு இடம் கோரி போராடி கைதான தலித் மக்களுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டக் கழகம் களமிறங்கியது. உரிமைக்குப் போராடிய மக்களுக்கு வழக்காட வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து, அவர்கள் பிணையில் வெளியே வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உயர்நீதிமன்றம் வரை வழக்கைக் கொண்டு செல்ல கழகம் உதவியது.
மே 30 ஆம் தேதி சென்னையில் சத்ய சாய்பாபா கோயில் விரிவாக்கத்துக்காக அப்பகுதி ஏழை மக்களுக்கு கல்வி தந்த பள்ளியை இடித்ததைக் கண்டித்து கோயில் நிர்வாகத்தை எதிர்த்து கோயிலை முற்றுகையிடச் சென்ற கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜூன் 8, 9 தேதிகளில் ஏற்காட்டில் கழகத்தில் புதிதாய் இணைந்த தோழர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
ஜூன் 17 ஆம் தேதி கோவை கிணத்துக்கடவு பகுதியில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை பட்டியலிட்டு சுட்டிக் காட்டியப் பிறகும், நட வடிக்கை எடுக்க முன் வராத கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது, 178 தோழர்கள் கைதானார்கள்.
ஜூன் 30 ஆம் தேதி கோபி அலுக்குளியில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
ஜூலை : தர்மபுரியில் இளவரசன் என்ற தலித் இளைஞரும் திவ்யா என்ற வன்னிய ஜாதிப் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்து கொண்டு வாழ்ந்ததை சகிக்க முடியாத ஜாதி வெறி சக்திகள், இளவரசன் வாழ்ந்த கிராமத்தை சூறையாடியதோடு, அந்த இளம் காதலர்களையும் அச்சுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பிரித்தனர். மனம் உடைந்த இளைவரசன், இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தமிழகம் முழுதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது இந்நிகழ்வு. இளவரசன் மரணத்துக்குக் காரணமான ஜாதி வெறியர்களைக் கண்டித்து, ஜூலை 7ஆம் தேதி பல்லடத்தில் தடை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 68 தோழர்கள் கொளத்தூர் மணி தலைமையில் கைது செய்யப்பட்டனர்.
ஜூலை 20, 21 தேதிகளில் சென்னை மாவட்டக் கழக சார்பில் புதிய தோழர்களுக்கு மாமல்லபுரத்தில் பயிற்சி முகாம் நடந்தது.
20 நாள் பரப்புரை
ஜூலை 24 ஆம் தேதி மயிலாடுதுறையில் தொடங்கிய ‘சுயமரியாதை-சமதர்ம பரப்புரைப் பயணம்’ கழகத் தலைவர் தலைமையில் 20 நாள் தொடர்ந்து 58 ஊர்களில் பரப்புரை செய்து ஆக°டு 12 இல் புதுவையில் நிறைவடைந்தது.
ஜூலை 27 ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்றத் தில் கோவை மாநகர மாவட்டக் கழகத் தலைவர் பன்னீர்செல்வம் சார்பில் ஒரு வழக்கு தொடரப் பட்டது. தீண்டாமைக் குற்றத்தைத் தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் துறை அதிகாரியை பதவி நீக்கம் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்பின் அடிப்படையில் அந்த வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டில் இந்த அடிப்படையில் நீதிமன்றம் வந்த முதல் வழக்கு இதுதான்.
செப்டம்பர் முதல் நாள் சென்னையில் நாத்திகர் விழா, நாத்திகர் பேரணி, மாநில மாநாடு போல் நடந்தது. பேரணிக்கு காவல்துறை தடைபோட்டது. உயர்நீதிமன்றத்தில் கழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, வழக்கை நாத்திகர் விழா நடக்கும் தேதிக்குப் பிறகு தள்ளிப் போட்டார். அன்றைய தினமே உயர்நீதிமன்ற மேல் அமர்வுக்கு முறையீடு செய்தது. அடுத்த நாள் விடுமுறை நாளாக இருந்தும், நீதிபதியின் இல்லத்திலேயே வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு பேரணிக்கு அனுமதி பெறப்பட்டது.
இது, கழக வழக்கறிஞர்கள் மேற்கொண்ட இடைவிடாத முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. வெகு அபூர்வமான வழக்குகளில் மட்டும், விடுமுறை கால விசாரணைகள் நடப்பது வழக்கம். அந்தப் பெருமை, நாத்திகர் விழா பேரணிக்குக் கிடைத்தது வரலாற்றுச் சிறப்பாகும்.
செப். 13 ஆம் தேதி, நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கோயிலில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ரிசர்வ் வங்கிக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்டந்தோறும் கழக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
செப்.15 ஆம் தேதி சென்னையில் இந்து முன்னணி நடத்தும் விநாயகன் சிலை ஊர்வலத்தை நிறுத்தக் கோரி, பெரியார் கைத்தடி ஊர்வலம் நடத்தி, கொளத் தூர் மணி தலைமையில் தோழர்கள் கைதானார்கள்.
செப்.26இல் திருச்சி வந்த குஜராத் முதல்வர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டி கழகத் தோழர்கள் கைதானார்கள்.
அக்டோபர்: அக்.7 ஆம் தேதி அரசு அலு வலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகளை நிறுத்தக் கோரி கழகம் மாவட்டந்தோறும் ஆர்ப்பாட் டங்களை நடத்தியது. மயிலாடுதுறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சட்டவிரோதமாக நடந்த ஆயுத பூஜையைத் தடுக்கச் சென்ற தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 15 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு, பிணையில் விடுதலையானார்கள். மேட்டுப்பாளை யத்தில் ஆயுத பூஜையின் மடமைகளை விளக்கி துண்டறிக்கை வழங்கிய தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு, 15 நாள் கழித்து பிணையில் விடுதலையானார்கள்.
அக்.20 இல் சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம், கழகக் குடும்பங்களை இணைத்து திராவிடர் வாழ்வியல் விழாவையும் திராவிடர் உணவுத் திருவிழாவை யும் நடத்தியதோடு திராவிடர் பண்பாட்டு மலர் ஒன்றையும் வெளிக்கொண்டு வந்தது.
அக். 28 ஆம் தேதி, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை எதிர்த்து, சென்னையில் அஞ்சலகங்களில் தாக்குதல் நடத்தியதாகவும், சேலம் வருமான வரித் துறை அலுவலகத்தில் சாக்குத் துணியை கெரசனில் நனைத்து, தீ வைத்து வளாகத்துள் எறிந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு, 7 கழகத் தோழர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதானார்கள். கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியையும் குற்றச்சாட்டில் இணைத்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்தது. சென்னை சேலம் சிறைகளில் 8 தோழர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதைத் தவிர, பரப்புரைக் கூட்டங்களும், பயிற்சி வகுப்புகளும் நடந்தன. தொய்வின்றி திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கியது முதல் களத்தில் பரப்புரை – போராட்டம் – கொள்கைப் பயிற்சி என்று இயங்கிக் கொண்டிருக்கிறது.
– நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் இதழ் 12122013