தலையங்கம் ரிசர்வ் வங்கி கடிதமும் பார்ப்பன அலறலும்!
கேரளத்திலுள்ள குருவாயூர் கிருஷ்ணன், பத்மநாபசாமி உள்ளிட்ட கோயில்களில் ஏராளமான தங்கம் முடங்கிக் கிடக்கிறது. நாட்டின் அன்னிய செலாவணிக்கு பதிலாக தங்கத்தின் கையிருப்பைக் காட்டினால் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீறும் வாய்ப்புகள் உண்டு என்ற நிலையில் கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ரிசர்வ் வங்கியின் கணக்கில் கொண்டு வர முடியும். அந்தத் தங்கத்தை ஒரு சில வருடங்களில் மீண்டும் கோயிலுக்கு எடுத்துக் கொள்ளவும் முடியும். ஆனாலும், நாட்டின் பொருளாதாரத்தைவிட கோயில்களில் ‘கடவுள்களிடம்’ முடங்கிக் கிடக்கும் தங்கத்தில் கை வைக்கக் கூடாது என்று பார்ப்பன சக்திகள் அலறுகின்றன.
அண்மையில் இந்தியன் ரிசர்வ் வங்கி கேரளாவிலுள்ள கோயில்களில் தங்கத்தின் இருப்பு குறித்த விவரத்தைக் கேட்டு கடிதம் எழுதியது. உடனே பார்ப்பன அமைப்புகள் அலறத் தொடங்கிவிட்டன. ஒரு கடிதம் எழுதி விவரங்களைக் கேட்கும் உரிமைகூட இல்லை என்கிறார்கள். கடிதத்துக்கு பதிலே எழுதக் கூடாது என்று குருவாயூர் கிருஷ்ணன் கோயில் நிர்வாகத்தை சில இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளதாம். திருவாங்கூர் தேவஸ்தானமும், ரிசர்வ் வங்கி கடிதம் அனுப்பியது உண்மைதான் என்றும், அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
தங்கத்தின் இருப்புக் குறித்து அறிந்து கொள்ளவே கடிதம் எழுதப்பட்டது என்றும், கோயில்களிலுள்ள தங்கத்தை வாங்கும் எந்தத் திட்டமும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் அல்பான சிவாலா கூறியுள்ளார். அறநிலையத் துறை, தேவஸ்வம் போர்டு என்ற அமைப்புகள் அரசின் கட்டுப் பாட்டுக்கு உட்பட்டவை. அரசு நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் தங்கத்தின் இருப்பு எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளும் உரிமைகூட நிதித் துறையை நிர்வகிக்கும் ரிசர்வ் வங்கிக்குக் கிடையாது என்று பார்ப்பனர்கள் ‘இந்து’ மதம் என்ற போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு மிரட்டுவது பார்ப்பன ஆதிக்கத்தின் வெளிப்பாட்டையே உறுதிப்படுத்துகிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாக கோயில் சொத்துகளை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது பனகல் அரசர் தலைமையில் நடந்த நீதிக்கட்சி ஆட்சியில்தான். அது வரை கோயில்களின் நகைகள் பார்ப்பன அர்ச்சகர்களின் வீட்டுப் பொருளாகவே இருந்தன. இதை கேள்வி கேட்டாலே ‘கடவுள் குற்றம்’ என்று அச்சுறுத்தி வந்தார்கள். அர்ச்சர்கள் மட்டுமின்றி கோயில்களுக்கு ‘ஆலோசகர்கள்’, ‘வழக்கறிஞர்கள்’ என்று பார்ப்பனர்கள் தங்களை நியமித்துக் காண்டு, கோயில் பணத்தையும், சொத்தையும் கொள்ளையடித்து வந்தனர். இந்த கொள்ளைகளைத் தடுத்து, கோயில் சொத்து, நகைகளின் கணக்குகளை முறைப்படுத்தி, அரசு கண்காணிப்பின் கீழ் கொண்டு வர ‘இந்து அறநிலையப் பாதுகாப்பு மசோதா’வை கொண்டு வந்தபோது, ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’ போன்ற பார்ப்பன ஏடுகள், கடுமையாகக் கண்டித்து எழுதியதோடு, அன்று ‘தேசிய’த் தலைவராக வலம் வந்த சத்தியமூர்த்தி அய்யர், நீதிக்கட்சியினர், “மதத்தையே அழிக்க முனைந்து விட்டார்கள். ஆண்டவனையே சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தும் அடாத செயலை எவருமே ஆதரிக்க மாட்டார்கள்” என்று சட்டசபையில் பேசினார். நீதிக்கட்சியின் முதல் ஆட்சியில் (1920-23) கொண்டு வரப்பட்ட இந்த மசோதா நிறைவேற்றப்பட முடியாமல் இரண்டாவது அமைச்சரவையில் தான் (1923-26) நிறைவேற்ற முடிந்தது. அப்போது காங்கிரசில் இருந்தாலும் பெரியார், நீதிக்கட்சியின் இந்த மசோதாவை அழுத்தமாக ஆதரித்துப் பேசினார்.
பார்ப்பனர் சொந்த சொத்தாக இருந்த கோயில் நகைகளும், சொத்துக்களும் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கே அவ்வளவு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. இப்போது, அரசு கட்டுப்பாட்டில் கோயில் நிர்வாகம் கொண்டுவரப்பட்ட பிறகும்கூட ‘கோயில் நகைகளில் கை வைக்க பார்ப்பனர்கள் எதிர்ப்பது ‘சத்தியமூர்த்தி அய்யர்களின்’ குரலைத்தான் நினைவு படுத்துகிறது. தில்லை நடராசன் கோயில் தீட்சதர்களின் நிர்வாகத்தில் இருந்தபோது கோயில் நகைகளை தீட்சதப் பார்ப்பனர்களே திருடிக் கொண்டு போய் அவர்களுக்குள்ளே பங்கு போடுவதில் தகராறு ஏற்பட்டு, அடிதடி மோதலாகி நீதிமன்றம் வரை வழக்குகள் வந்ததையும் குறிப்பிட வேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டின் பொருளாதாரத்தை அடகு வைத்த பா.ஜக., காங்கிரஸ் ஆட்சியினர் எப்படி மக்கள் விரோதிகளாக தங்களை அடையாளம் காட்டிக் கொள் கிறார்களோ, அதேபோல், மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, கடவுள் நகைகளை எடுக்கக் கூடாது என்று கூக்குரல் போடும் பார்ப்பன சக்திகளும் மக்கள் விரோதிகள் தான்.
கோயில் நகைகளை பொருளாதார நெருக்கடிக்குப் பயன்படுத்தும் ‘துணிவு’ ரிசர்வ் வங்கிக்கு இருக்கும் என்று நாம் நம்பத் தயாராக இல்லை. ஆனால், கோயிலும் கடவுளும் பார்ப்பன அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொள்ளும் நிறுவனங்களே என்று பெரியார் சுட்டிக் காட்டிய கருத்தின் நியாயம் இப்போது புரிகிறது அல்லவா?
பெரியார் முழக்கம் 12092013 இதழ்