காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக்கோரி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம், மன்னை ஒன்றிய ம.தி.மு.க.வும் இணைந்து ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் மன்னார்குடியில் தொடங்கியது. தமிழர்களை இனபடுகொலை செய்த இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது. இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். தமிழீழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த ஆதரவு கொடுக்க வேண்டும். போர் குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுதர முயற்சி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழகம், மன்னை ஒன்றிய ம.தி.மு.க. தமிழன் சேவை மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கழக மாவட்ட அமைப்பாளர் காளிதாசு, ம.தி.மு.க. மன்னை ஒன்றிய செயலாளர் சேரன் குளம் செந்தில்குமார், தமிழன் சேவை மைய நிறுவனர் வாட்டார் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் திருவாரூரில் ஒரு லட்சம் தமிழர்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் மன்னார்குடியில் தொடங்கியது. மன்னை வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வி.அய்யப்பன் முதல் கையெழுத் தினை இட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மன்னை நகர கழகச் செயலாளர் மணிகண்டன், லாரி உரிமையாளர்கள் சங்க துணைத் தலைவர் காசங்குளம் பாலு, பொருளாளர் சேரன்குளம் செந்தில்குமார், கௌரவ தலைவர் ராஜ், எஸ் .ஆர்.எஸ் . நாகேந்திரன், தமிழ்நாடு லாரி சர்வீஸ் பாலு, சலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 10102013 இதழ்

You may also like...