சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு ‘தமிழ் இந்து’ தலையங்கம்

‘தமிழ் இந்து’ நாளேடு மார்ச் 24ஆம் தேதி பாரூக் படுகொலைக் குறித்து எழுதிய தலையங்கம்.

கோவையில் நடந்திருக்கும் இளைஞர் ஃபாருக் கொலை அதிர்ச்சியைத் தருகிறது. இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்பது அதிர்ச்சியைத் தாண்டி ஆழ்ந்த கவலையை உருவாக்கு கிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செய லாற்றிவந்த ஃபாருக், சமூகத்தின் சாதி, மதப் பாகுபாடு களையும் மூடநம்பிக்கைகளையும் சாடிவந்தவர். தொடர்ந்து இறைமறுப்புக் கொள்கைகளைப் பேசிவந்தவர். அவருடைய செயல்பாட்டின் காரணமாகவே நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு.

தமிழகத்துக்கு நாத்திகப் பிரச்சாரம் புதிதல்ல. அதற்கென்று நீண்ட நெடிய மரபு இங்கு இருக்கிறது. குறிப்பாக, நவீன அரசியல் வரலாற்றில் சாதிக்கு எதிராக இங்கு பெரியார் தொடங்கிய கலகம் அதன் மையத்திலேயே கடவுளுக்கும் மதத்துக்கும் எதிரான குரலைத் தாங்கியது. ஆத்திகர்கள் இதற்குக் காலம் முழுவதும் கடுமையாக எதிர்வினையாற்றி வந்திருக்கிறார்கள். ஆனால், அது ஆகப் பெருமளவில் கருத்துத் தளத்திலேயே அமைந்து வந்திருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி பொதுவெளியில், ஒரு கடைவீதியில் இன்னும் சொல்லப்போனால், கோயில்கள் அருகில் இருக்கும் இடங்களிலேயே மேடை போட்டு கடவுள்களுக்கும் மதத்துக்கும் எதிராகப் பேசுவதும், கூட்டத்தில் பங்கேற்பவர்களைத் தாண்டி, ஏனையோர் அதை வேடிக்கை பார்த்தவாறே கடப்பதும் அநேகமாக தமிழ்நாட்டில் தான் இத்தனை சாதாரணமாக நடக்கும். இந்த ஜனநாயகமும் சகிப்புத்தன்மையும் ஒருவகையில் தமிழகத்தின் மிகப் பெரிய சொத்துகள். இந்து மதத்தைத் தாண்டியும் கிறிஸ்தவம், இஸ்லாம் என்று எல்லா மதத்தினரிடமுமே ஏனைய பிராந்தியங்களைக் காட்டிலும் வலுவான ஜனநாயகத்தன்மை உண்டு. ஆனால், இன்றைக்கு அந்தச் சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. இந்த முறை அதற்கான வெளிப்பாடு முஸ்லிம் சமூகத்திலிருந்து நிகழ்ந்திருக்கிறது.

தமிழகத்தில் இன்று செல்வாக்கு அடைந்திருக்கும் சில முஸ்லிம் அமைப்புகள் ஒற்றைக் கலாச்சாரத்தை முன்னிறுத்துகின்றன. அவை தமிழ் முஸ்லிம் சமூகத்துக்குள் ஒலிக்கும் ஜனநாயக, பன்மைத்துவமிக்க குரல்களை அச்சுறுத்துகின்றன என்பதை முஸ்லிம் அறிவுஜீவிகள் பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்திருக்கின்றனர். ஆனால், அவர்களின் குரலை அமுக்கத்தான் பெருமளவில் முயற்சிகள் நடக்கின்றனவே தவிர, அந்தக் குரல்களிலுள்ள நியாயத்தைப் பரிசீலிக்கவோ, இந்தப் புதிய போக்கின் பின்னுள்ள அபாயங்களைப் புரிந்துகொள்ளவோ அந்தப் போக்கிலுள்ள பலர் தயாராக இல்லை. மதவாதத்தை மதவாதத்தைக் கொண்டு எதிர்க்க முடியாது. ஜனநாயக சக்திகள் இந்த உண்மைக்கு முகம்கொடுக்க வேண்டும். ஜனநாயகத்துக்கு மட்டும் அல்ல; சக உயிர் வாழ்வதற்கான சூழலையும்கூடக் கேள்விக்குள்ளாக்கிவிடக் கூடியது சகிப்பின்மை. தமிழ் முஸ்லிம் சமூகமானது, இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களைக் காட்டிலும் பன்மைத்துவமும் சகிப்புத்தன்மையும் கொண்ட முன்னுதாரணச் சமூகம். எல்லாக் கலாச்சாரங்களுக்கும் இடமளிக்கும் இந்த தாராளவாதப் போக்குதான் இன்னமும் தமிழகத்தை மதவாத சக்திகளிடமிருந்து விலக்கிவைத்திருக்கிறது. தூய்மைவாதிகள் – அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயினும் சரி – உண்மையில் அந்த மதச்சார்பின்மைக் கோட்டையைத்தான் இன்று தங்கள் சகிப்பின்மையால் உடைக்க உதவுகிறார்கள்!

பெரியார் முழக்கம் 30032017 இதழ்

You may also like...