பாரூக் படுகொலை: இஸ்லாமிய எழுத்தாளர்கள் – ஜனநாயக சக்திகள் அதிர்ச்சி
தமிழ்நாட்டில் இஸ்லாமிய அடிப்படை வாதம் தலைதூக்குவது மோசமான விளைவுகளை உருவாக்கி விடும் என்று இஸ்லாமிய எழுத்தாளர்கள், ஜனநாயக சக்திகள் கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் பாரூக்கின் படுகொலை – பல இஸ்லாமிய சிந்தனை யாளர்கள், முற்போக்கு இஸ்லாமிய குழுவினரிடம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் உருவாக்கியிருப்ப தோடு, அரை நூற்றாண்டுக்கு மேலாக திராவிடர் இயக்கத்துக்கும் இஸ்லாமியர்களுக்கிடையே நிலவிய நட்பு உறவையும் சிக்கலாக்கி இருக்கிறது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (மார்ச் 24, 2017) எழுதியிருக்கிறது.
கீரனூர் ஜாகிர் ராஜா, நாவல் சிறுகதைகளை எழுதி வரும் இலக்கியவாதி. தன்னுடைய நாவல்களில் பகுத்தறிவு, முற்போக்கு கருத்துகளை எழுதி வருகிறார். ‘மீன்காரத் தெரு’ என்ற அவரது நாவலில் திண்டுக்கல் கீரனூர் இஸ்லாமியர்களிடையே நிலவும் வர்க்க குழு பாகுபாடுகளை சித்தரித்திருந்தார். தொழில் வணிகத்தில் வசதியுடன் வாழும் ‘இராவுத்தர்’ பிரிவினர், மசூதிகளில் சேவை பணி செய்யும் வசதி யற்ற ‘லப்பை’ பிரிவினருடன் திருமண உறவுகளை தடை செய்திருப்பதை அந்த நாவல் பேசுகிறது. பாரூக் படுகொலைக் குறித்து அவர் தனது கவலையையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். இனி தனது எழுத்துகளில் ஒலிக்கும் நீதிக்கான குரல் தொடர்ந்து கேட்குமா? அல்லது மவுனமாக்கப்படுமா என்று அஞ்சுகிறேன். அல்லா உருவாக்கிய இஸ்லாம் பகுத்தறிவுக்கு இடமளிப்பதாகவே நான் கருதுகிறேன். அரபு பழங்குடியினர் ஆயிரக்கணக்கான உருவங்களை வழிபட்டு வந்ததை நிறுத்தி உருவ வழிபாடு கூடாது என்று கூறியது இஸ்லாம் மார்க்கம். இஸ்லாம், கடவுள் மறுப்பான நாத்திகத்தை ஏற்கவில்லை. ஆனாலும் நாத்திக சிந்தனை கொண்ட பல முஸ்லிம் புலமையாளர்கள் இருக்கிறார்கள்” என்றார் ஜாகிர் ராஜா.
பாரூக் கொலைக்கு யார்காரணம் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் இஸ்லாமிய இலக்கிய வட்டத்தில் இந்தக் கொலை அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளே திட்டமிட்டு, இந்தக் கொலையை நடத்தியிருக் கிறார்கள் என்றே அவர்கள் கருதுகிறார்கள். இந்த நடவடிக்கைகளால் இதுவரை அச்சுறுத்தல், மிரட்டல் கருத்துகளை பேசி வந்த ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து பிற்போக்கு அமைப்புகள் இனி தங்கள் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கான களம் தயாராகி வருகிறது என்ற உணர்வுக்கு வரக்கூடும். பாரூக் படுகொலையைவிட இஸ்லாமிய சமூகம் காக்கும் மவுனம்தான் மிகப் பெரும் அச்சமூட்டுகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். படுகொலையைக் கண்டித்து இஸ்லாமிய சமூகத்தின் ஒருமித்த கண்டனக் குரல் எழுந்திருக்க வேண்டும். அப்படி ஏதும் அழுத்தமான கண்டனங்கள் எழ வில்லை என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது.
பெண் கவிஞரும் தி.மு.க.வைச் சார்ந்தவருமான தோழர் சல்மான், “அந்தக் கொலை எங்கள் அனைவரையும் அச்சுறுத்துகிறது. பெரியாரிஸ்ட் பாரூக் படுகொலை செய்தி கோவையை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்ப தோடு, முஸ்லிம் சமூகத்துக்கே பின்னடைவை உருவாக்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.
ஏற்காட்டில் முற்போக்கு சிந்தனைக் கொண்ட எழுத்தாளர்கள் ஒன்று கூடி தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள். ‘சங்கமம்’ என்ற பெயரில் இந்த ‘ஒன்றுகூடல்’ நிகழ்ந்தது. பாரூக் படுகொலை நிகழ்ந்த நேரத்தில் ஏற்காட்டில் நடந்த ஒன்று கூடலில் இந்தப் பிரச்சினையே மய்யமாக விவாதிக்கப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரைக்கதை வசனம் எழுதுவோர், சமூக செயல்பாட்டாளர்கள் என பல்வேறு பிரிவினரும் பங்கேற்ற இந்த இரண்டு நாள் மாநாட்டில் பலரும் தெரிவித்த கருத்து இது தான்.
“சாகித்ய அகாடமி விருது பெற்ற பகுத்தறிவாளர் எம்.எம். கல்புர்கி கொல்லப்பட்டபோது உருவான அதிர்ச்சிதான் பாரூக் படுகொலையும் எங்களிடம் உருவாக்கியிருக்கிறது. எங்களுக்கு கருத்துரிமை உண்டு என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக் கிறோம். நடந்த சம்பவம் அந்த உரிமை மறுக்கப்பட்டு விடும்போல் தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ். திசை வழியை நாம் செயல்படுத்துகிறோமோ என்று அஞ்சு கிறோம்.” – என்பதே பலரும் தெரிவித்த கருத்து, சென்னை பல்கலைக்கழக ‘அரசியல் ஆய்வுத் துறை’ பேராசிரியர் இராமு. மணிவண்ணன், “ஏற்கனவே முற்போக்கு சிந்தனை கொண்ட இஸ்லாமியர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவே தயங்கு கிறார்கள். பாரூக்கின் இந்தக் கொடூர படுகொலை அவர்களை மேலும் அச்சுறுத்தி முழுமையாகவே மவுனிக்கச் செய்துவிட்டது. நாட்டில் வாழும் இஸ்லாமிய பொது மக்கள் இத்தகைய அடிப்படைவாதிகளின் சகிப்புத் தன்மையற்ற செயல்பாடுகளை ஆதரிக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்” என்று கூறினார்.
ஆவணப்பட இயக்குனர்கோம்பை அன்வர், எழுத்தாளர் இமயம், கவிஞர் சுகிர்தரணி, எழுத்தாளர் மீரா மொய்தீன், படத் தயாரிப்பாளர் தாமிரா, கவிஞர் ஆதவன் தீட்சண்யா, நடனக் கலைஞர் சுவர்ணமால்யா கணேஷ் உள்ளிட்ட ஏராளமான கலைஞர்கள் இதில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முழுதும் 300 மசூதிகளில் சமூகப் பணியாற்றும் முகம்மது சையது, இந்த மாநாட்டில் பேசும்போது இஸ்லாமியர்களை (மதம் தவிர்த்த) சமூகப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். “இறைவனை வணங்குதலைவிட சமூகத்துக்குப் பணியாற்றுவதே உண்மையான இறைப்பணி என்ற கருத்தை பரப்ப வேண்டும்” என்றார்.
– டைம்ஸ் ஆப் இந்தியா’ இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
பெரியார் முழக்கம் 30032017 இதழ்