மகாநாட்டு உபந்நியாசங்களும், பார்ப்பனரல்லார் பத்திரிகைகளும்
இம்மாதம் நடந்த மகாநாடுகளில் உபசரணை அக்கிராசனர். மகா நாட்டுத் தலைவர் ஆகியவர்களின் பிரசங்கங்களைப்பற்றி பார்ப்பனப் பத்திரிகைகள் தங்கள் ஆதிக்கத்திற்கு அநுகூலமாய் பேசியவற்றையும் பேசினவர்களையும் புகழ்ந்தும் அதற்கு விரோதமாய் பேசியவர்களை இகழ்ந்தும் எழுதியிருக்கின்றன என்றாலும் பார்ப்பனரல்லாதார் பத்திரிகை களில் பெரும்பாலும் தங்களுக்கென கொள்கையும் சுயமரியாதை உணர்ச்சியும் இல்லாமல் அவற்றையே பின்பற்றித் திரிகின்றன. இதற்காக பொதுமக்கள் பணமும் நேரமும் எவ்வளவு வீணாய்போகிறதென்பதைக் கவனிப்பவர்களுக்கு துக்கம் ஏற்படாமலிருக்க முடியாது.
சிலபத்திரிகைகள் “பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுத் தலைவர் ஒத்துழைப்பைப்பற்றி பேசிவிட்டார். ஆதலால் பார்ப்பனரல்லாதாருக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டது” என்பதாக அளவுக்கு மீறி துக்கப் படுவதாகவும் வெட்கப்படுவதாகவும் வேஷம் போட்டிருக்கின்றன. ஆனால் பார்ப்பனர்களில் சிலர் அதாவது மாதம் 5000, 10000 சம்பளம் வாங்கியவர் களும் தங்கள் வீட்டு பூனைக்குட்டிக்கு முதல் சர்க்காரில் மாதம் 500, 1000, 2000, 3000 உத்தியோகம் பெற்று கொள்ளை அடிக்கிறவர்களும் ஒன்று சேர்ந்து மிதவாத மகாநாடு என்பதாகக் கூட்டி “சர்க்காரோடு ஒத்துழைக்க வேண்டும். தங்கள் பிள்ளை குட்டிகளுக்கும் சர்க்கார் பெயர் வைக்க வேண்டும்” என்றும் பேசிக் கொண்டதைப் பற்றி இந்த ரோஷமுள்ள, தேசாபிமானமுள்ள, சுயமரியாதையுள்ள பார்ப்பனரல்லாதார் பத்திரிக்கைகள் ஒன்றும் எழுதவேயில்லை என்ற இவர்களின் தேசாபிமானத்தையும் சுயமரியாதையையும் என்னவென்று சொல்வது என்பது நமக்குத் தெரியவில்லை.
இதுவரை பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் மிதவாதப் பார்ப்பனர் களைப் பின்பற்றி ராஜ விசுவாசத் தீர்மானம் என்பதாக வருஷாவருஷம் பல்லவி பாடிவந்த ஒரு தீர்மானத்தை இவ்வருஷம் தீர்மானிக்கப்படவில்லை என்பதை ஒரு பார்ப்பனரல்லாத “தேசீயவாதியும்” அவர்களது பத்திரிகையும் பாராட்டவே இல்லை. நம் கூட்டத்திலேயே இப்படி ஆட்கள் மலிந்திருக்கும் போது இந்த சமூகம் சுயமரியாதை பெறுவது சுலபமான காரியமாவென்று கேட்கிறோம்? தவிர, அஸ்ஸாம் காங்கிரசின் உபசரணை அக்கிராசனரின் பிரசங்கமானது எவ்வளவு கேவலமான தென்றும் பார்ப்பனரல்லாதாருக்கு எவ்வளவு இழிவையும் அவமானத்தையும் கொடுக்கத்தக்கதென்பதையும் ஒரு பார்ப்பனரல்லாத “தேசீய பத்திரிகை”யாவது கவனித்ததாகச் சொல்ல முடியவில்லை. உபசரணை அக்கிராசனர் ஸ்ரீ பூக்கன் ஒரு பார்ப்பனர். அதாவது ஆரியரென்று சொல்லிக்கொள்ளுபவர். அவர் தனது பிரசங்கத்தில் ஆரியரல்லாதார் (பார்ப்பனரல்லாதார்) ஆகிய நம்மைப்பற்றி கூறியிருக்கும் இழி மொழிகளும், நம்மை அசுரரென்று குறிப்பிட்டிருப்பதும், நமது அரசர்களை அசுர அரசர்கள் என்று குறிப்பிட்டிருப்பதும், நமது கலாஞானம் வித்தை பண்டை வழக்க ஒழுக்கம் நமது நாகரீகம் முதலியவைகளை இழிவுபடுத்தி இருப்பதும், அவற்றைத் தாங்கள் ஒழித்ததையே தங்களது பெருமையாகக் குறிப்பிட்டிருப்பதும், சங்கராச்சாரியார், மத்துவாச்சாரியார் முதலிய அரிய மதஸ்தாபகர்கள் நமது கலை, பண்டைய ஒழுக்கம், நடையுடை பாவனை, நாகரீகம் முதலியவைகளை அழித்து வெற்றிபெற்றதையும், பார்ப்பன ஆதிக்கம் வேரூன்றினதையுமே பெருமையாகப் பேசியிருக்கிறார். “தமிழ்நாடு அரசியல்” மகாநாட்டின் அக்கிராசனர் ஸ்ரீமான் கே.வி. ரங்கசாமி அய்யங்காரும் தனது அக்கிராசனப் பிரசங்கத்தில் இதேமாதிரியாகவே பார்ப்பனரை உயர்த்தியும் பார்ப்பனரல்லாதாரை இழிவுபடுத்தியுமே பேசியி ருக்கிறார். இதுகள் ஒன்றும் நமது “தேசீய பத்திரிகை”களுக்குத் தெரிவ தில்லை. பார்ப்பனரல்லாதார் எதுபேசினாலும், எழுதினாலும் குற்றமாகவே தோன்றுவதும், பார்ப்பனர் நம்மை எவ்வளவு இழிவாகவும் தாழ்வாகவும் பேசினாலும் அது தேசீயமாகத்தோன்றுவதும் தான் பார்ப்பனரல்லாத் தேசீயவாதிகளுக்கும் அவர்களது பத்திரிகைகளுக்கும் ஜன்மக் குணமாய் போய்விட்டது. வெட்கம்! வெட்கம்!! இதைவிட வெட்கம்!!! என்ன?
குடி அரசு – துணைத் தலையங்கம் – 09.01.1927