கக்ஷிக்காரன் பணத்தைக் கையாடிய ஓர் பிராமண வக்கீல்
இரண்டொரு வாரங்களுக்கு முன்புதான், சென்னை ஐக்கோர்ட்டு வக்கீல் ஸ்ரீமான் எம்.ஆர். சுந்தரம் ஐயர் என்கிறவர் ஆறுமாதக் கடுங்காவலும் 1000 ரூபாய் அபராதமும் பெற்றிருந்ததை எழுதியிருந்தோம். இந்த வாரம் மற்றொரு பிராமண வக்கீலின் தண்டனையைப் பற்றி எழுத நேர்ந்திருக்கிறது. அதாவது:-
சென்னை ஐக்கோர்ட்டு வக்கீல் ஸ்ரீமான் ஏ. துரைசாமி ஐயர் என்பவர் தனது கக்ஷிக்காரன் பணத்தைக் கையாடியதாக அவர் மீது ஓர் வழக்கு ஏற்பட்டு ருசுவானதின்பேரில், அவர் இனிமேல், வக்கீல் வேலையே செய்ய லாயக்கில்லையென்று சொல்லி அவருடைய பெயரை வக்கீல் ஜாப்தாவிலி ருந்து நீக்கிவிடுமாறு ஐக்கோர்ட் ஜட்ஜ் தீர்ப்புச் செய்துவிட்டார். கக்ஷிக்காரன் பணத்தைக் கையாடாத வக்கீல், வக்கீல் வேலைக்கே லாயக்கில்லையென்று ஓர் பழமொழி சொல்லுவதுண்டு. அதற்கேற்றாற் போலவே நமது பக்கங்களில் கக்ஷிக்காரன் பணத்தைக் கையாடாத வக்கீல்கள் மிகவும் அபூர்வம். இப் பொழுது எத்தனையோ வக்கீல்கள் கக்ஷிக்காரர்களின் பணத்தைப் பல வழிகளிலும் சாப்பிட்டுவிட்டு, கல்லுப் போலிருக்கிறார்கள். அப்படியிருக்க, ஸ்ரீமான் ஏ. துரைசாமி ஐயருக்கு மாத்திரம் ஏன் இந்த தண்டனை ஏற்பட்டதோ தெரியவில்லை.
உலகத்தில் எத்தனையோ பெயர்கள் திருடினாலும், கொலை செய்தாலும், போர்ஜரி செய்தாலும், அகப்பட்டுக் கொள்வதினாலும், போலீசா ருக்கும் நியாயாதிபதிகளுக்கும் லஞ்சம் கொடுக்காததாலும், நன்றாய்க் குண்டுப் புரட்டு புரட்டத் தெரிந்த வக்கீல் வைக்காததினாலும், தண்டனை யடைய நேர்வது போல், ஐயோ பாவம்! நமது ஐயர்வாளும் சிக்கிக் கொண்டார் போலும்.
குடி அரசு – செய்தி விளக்கம் – 10.01.1926