தமிழ்நாடு
ஒத்துழையா இயக்கம் காந்தியடிகளால் இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் தமிழ்நாடுதான் அவ்வியக்கத்திற்கு முதன்முதலாக ஆதரவளித்தது. எண்ணிக்கைக்குக் கிடைக்காத ஏதோ சிலர் தேச முன்னேற் றத்திற்கல்லாது வேறு பல காரணங்களைக் கொண்டு பின் வாங்கியிருந்த போழ்தினும் தமிழ்மக்கள் சாதி, வகுப்பு வித்தியாசமின்றி ஒத்துழையாமை யின் திட்டங்களில் உடல், பொருள், ஆவி மூன்றையும் சிறிதும் மதியாது தியாகமே கடவுள், தியாகமே வீட்டைப் பெறுவிப்பது, தியாகமே உலகம் என நினைத்து எல்லாவற்றையும் துறந்த துறவிகள் போன்று தொண்டாற்றி வந்ததை உலகம் நன்கு அறியும். பெருந்தலைவர்களெனப்படுவோராகிய தாஸர், நேரு, அலி சோதரர், லஜபதிராய், அஜ்மல்கான் முதலிய பெரியோர் களெல்லாம் ஒத்துழையாமைக்கு மாறுதலாக நின்ற காலத்திலும் வணங்கா முடி மன்னனாய் நின்று ஒத்துழையாமையின் தத்துவத்தை அழியவிடாமல் நிலையிலிருத்திவந்ததும் உலகம் அறிந்ததே. அந்நிலையிலிருந்த தமிழ்நாடு, சாதி இருமாப்பிலும், சாதிச்சண்டையிலும், பட்ட வேட்டையிலும், ஓட்டு வேட்டையிலும், உத்தியோக வேட்டையிலும் ஆழ்ந்து கிடக்கக் காரணம் யாது? அதுகாலை தலைமையாக நின்றவர்கள் இதுகாலை மறைந்து விட்ட னரா? அதுகாலை இருந்த தமிழ் மக்கள் இதுகாலை வேறு மக்களாக மாறி விட்டனரா? அவ்வமயம் தியாகத்திற்குத் துணிந்து நின்றவர்கள் இவ்வமயம் அத்தியாகத்திற்குப் பயந்துவிட்டனரா? அல்லது அப்பொழுது நமக்கு ஒத்துழையாமை தேவையாகவிருந்தது; இப்பொழுது அரசாங்கத்தார் ஒத்துழையாமை நமக்குத் தேவையில்லாத நிலைக்கு நல்லவர்களாகி விட்டனரா? இவற்றை ஆராய்ந்தால் ஒன்றும் மாறவில்லையென்றும், சிலரின் சுயநல சூழ்ச்சியால் ஏற்பட்ட மக்களில் ஒருவருக்கொருவர் சந்தேகமும், நம்பிக்கையின்மையும்தான் காரணமென்றும் தோன்றும். இக்காரணம் தமிழ்நாட்டு அரசியல் வாழ்வை மட்டும் அழிக்காது இந்தியாவின் அரசியல் வாழ்வையும் பின்னப் படுத்திவிட்டது. அரசியல் வாழ்வில் தீவிரமாய் வேலை செய்து வந்தவர்கள் அவ் வேலை நின்றவுடன் சமூக வாழ்வில் பிரவேசிக்க நேர்ந்ததும், சமூக வாழ்விலுள்ள ஊழல்கள் வெளியானதும், அவை திருந்த ஒருப்படாத பலர் தேசத்தில் மறைந்து நின்று செய்யும் விஷமங்களும், தந்திரங்களும், மக்கள் மனதைக் கெடுத்துவிட்டன.
நமக்கு எதற்காக சுயராஜ்யம் வேண்டும் என்றும், தற்பொழுது இருக்கும் அரசாங்கம் மாறிவிட்டால் பிறகு நமக்கு எக்கெதி நேரிடுமென்றும் ஐயுற வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்துவிட்டன. இந்நிலை மாறாது நிலைத்து வருமானால் தேசத்தில் இனியும் ஒற்றுமைக் குறைவும் அவநம்பிக் கையும் பலப்பட்டு கிளர்ச்சிகளும், பயங்கரக் கலாபங்களும்தான் நடை பெறும். காந்தியடிகளும் இதற்கு என் செய்வதெனத் தோன்றாமலோ அல்லது இவை ஓரளவிற்குச் சென்றவுடன்தான் தாம் தலையிட வேண்டு மென்றோ அவற்றைக் கவனியாதவர்போல் இருந்து வருகிறார். தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் புது நன்மைகள் ஒன்றும் ஏற்படாவிடினும் தீமைகளாவது ஏற்படாமலிருக்கவேண்டுமாயின் சாதி, மதம், கட்சி பேதம் இல்லாமல் தமிழ்மக்கள் எல்லோரும் ஒன்று கூடி மனதிலுள்ளவற்றை வெளியிற் கூறி தங்களுக்குள் இருக்கும் அவநம்பிக்கை ஒழியுமாறு தமிழ்நாட்டிற்கேற்ற ஓர் திட்டத்தைக் கண்டு அதை மனம், மொழி, மெய்களால் நிறைவேற்றப் போதிய களங்கமற்ற ஓர் கூட்டத்தார் வெளிக்கிளம்ப வேண்டும். அப்படியின்றி, மக்களை ஏமாற்றுவதாக நினைத்துக் கூட்டம் கூடிக்கொண்டு, தேசத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டும், சமூகத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டும் ஓட்டும் உத்தியோகமும் சம்பாதிப்பதற்கு அலைவது தங்களையே ஏமாற்றிக் கொள்வதாகத்தான் கடைசியில் முடியும்.
நிற்க, சிறிது காலமாய் நாட்டினிடை பிராமணர், பிராமணரல்லாதார் என்றவருக்குள் தோன்றியிருக்கும் உணர்ச்சியானது தமிழ்நாட்டைக் கலக்கியதுமன்றி வெளிநாடுகளையும் கலக்கி வருகின்றது. உதாரணமாக, மத்திய மாகாணத்தில் நடந்த பிராமணரல்லாதார் மகாநாட்டில் தலைமை வகித்த ஸ்ரீ பாக்தே அவர்களின் பேச்சு அந்நாட்டு பிராமணரல்லாதாரின் உணர்ச்சியைக் காட்டுகின்றது. அதுபோலவே தமிழ்நாட்டிலும் ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடு, கலியாணசுந்தர முதலியார், ராமசாமி நாயக்கர் முதலி யோர் செய்துவரும் பிரசாரங்கள் தமிழ்நாட்டுப் பிராமணரல்லாதாரின் உணர்ச்சியைக் காட்டுகின்றது. இப்படி ஒரு சமூகத்தாருக்கு திருப்தி அளிக்கக் கூடாததான பிரசாரத்தை இவர்கள் ஏன் நடத்துகின்றனர்? இவர்களுக்கு முன்பின் துவேஷமா? அப்படி இல்லாமல் சில நாட்களுக்கு முன்பு சகோதரர் கள் போன்று அந்நியோந்நியமாய் வேலைசெய்து வந்தவர்களுக்கு திடீரென இப்படிப் படுவானேன்? இவர்களில் எவராவது தங்கள் சுய நலத்திற்காவது அல்லது தங்கள் தனிப்பட்டவருடைய இலாபத்திற்காகவாவது ஆர்வம் கொண்டு தொண்டு செய்கின்றனரா? இவர்கள் கிளர்ச்சி வெற்றிபெற்றால் இவர்களுக்கு ஏதாவது சுயநல லாபம் ஏற்படுமா? ஏன் தங்கள் சிநேகிதர் முன்னிலையிலும் அன்பர்கள் முன்னிலையிலும் அவர்கள் மனம் வருந்தும் படி நடந்து கொள்கின்றனர் என்பதைக் கவனித்தல் வேண்டும். மற்றொரு பக்கம் பம்பாயில் சில நாட்களுக்கு முன்னர் கூடிய ஒரு வைதீகக் கூட்டத்தில் மகாத்மா காந்தியை இதுவரை உயிருடன் வைத்திருந்தது தப்பு என்றும், அடித்துக் கொல்ல வேண்டும் என்றும் சொன்னார். ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரி யார் போன்ற பிராமணத் தலைவர்கள் ஒருவேளை சாப்பாடு ஒரு பிராமண ரல்லாதார் குழந்தையுடன் ஒரு பிராமணக் குழந்தை உட்கார்ந்து சாப்பிட்டு விடுமேயாகில் யான் ஒரு மாதம் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும், மனிதனுக்கு மனிதன் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லையென்று சொன்னால் அரை நிமிடம் கூட காங்கிரஸில் இருக்கமாட்டேன் என்றும், காந்தியடிகள் இதை ஒப்புக்கொள்வார்களாயின் அவரையும் எதிர்த்துதான் ஆகவேண்டும் என்றும் எதற்காகச் சொல்லுகிறார்? பாரத தர்ம மண்டலம் என்று சொல்லு கின்ற ஓர் பெரிய வைதீக சபையார் மனிதனுக்கு மனிதன் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்ற தீர்மானத்தை ஏன் கண்டனம் செய்கின்றனர்? திருச்சி யில் கூடி இத்தீர்மானம்* செய்தபின் சிலர் ஏன் ராஜிநாமாச் செய்தனர்? இது இந்நாட்டுப் பிராமணர்களின் உணர்ச்சியைக் காட்டுகிறது. இவர்களுக்கு எல்லாம் மற்ற சமூகத்தாரின் மீது துவேஷமா? அல்லது விரோதமா? ஒவ் வொருவரும் தங்கள் தங்கள் மனப்பூர்வமாய் சத்தியமென்று கருதுவதை நம்பி வாதாடுகின்றனரேயன்றி இதனால் ஒருவருக்கொருவர் மீது துவே ஷமோ விரோதமோவென்று நாம் கருதக்கூடாது. ஆயினும் இப்படித் தாங்கள் நம்புவதையே ஆதாரமாக வைத்துக் கொண்டு இரு கட்சியாரின் பிரசாரங் களும் கிளர்ச்சிகளும் வளர்ந்து கொண்டே போகுமாயின் முடிவு எங்கே? கடைசியாக பலமுள்ளவன் வெற்றி பெறுவான், பலமற்றவன் தோல்வி அடைவான் என்பதையும் அல்லது ஒருவேளை நமது அரசாங்கத்தார் பீரங்கி, வெடிகுண்டு, ஆகாயக் கப்பல்களை நம்பியிருப்பது போன்று இவ்விரு கட்சிகளிலேயும் ஒருவருக்கொருவர் தங்களுடைய தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும் நம்பிக் கலகத்தை நடத்த ஒருப்படுவார்களாயின் முடிவில் சத்தியம்தான் வெற்றிபெறும் என்கின்ற வாசகம் என்னாகும் என்பதையும் கவனித்தல் வேண்டும். நமது நாடு இப்பொழுது கோருவதெல்லாம் சமத்து வமும், ஒற்றுமையும்தான். இவ்விரு குணத்திற்காக நமது தினசரி வாழ்க்கை யில் உண்மையாக நாம் என்ன செய்தோம், என்ன செய்ய நினைத்தோம், என்ன செய்யப் போகின்றோம் என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளவேண்டும். மற்றவர்களுடைய மெப்புதலுக்காக “யான் இதைச் செய்தேன், யான் இதைச் செய்து கொண்டிருக்கிறேன்” என்று சொல்வதினால் சத்தியம் ஏமாந்து போகாது. ஒன்று சத்தியத்திற்கு யோக்கியதை இல்லை என்று சொல்லியாக வேண்டும் அல்லது நாம் சத்தியமாய் நடக்கவில்லை யென்று சொல்லியாக வேண்டும். இதையன்றி வேறு ராஜி கிடையாது.
குடி அரசு – தலையங்கம் – 14.06.1925
* இந்திய சமூக வாழ்க்கையில் பிறப்பினால் எவருக்கும் ஏற்றத் தாழ்வு ஏற்படுத்தக் கூடாதென்றும், இக்கொள்கையை தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட °தாபனங்கள் அவசியம் அனுஷ்டிக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப் பட்டது.
29.1.25 திருச்சி, தமிழ்நாடு காங்கிர° கமிட்டி (குடிஅரசு17.5.1925.பக்கம் 11 )