சுகோதயம் பத்திரிக்கை
சுகோதயம் என்னும் தமிழ் வாராந்தரப் பத்திரிகை ஆரணியிலிருந்து ஸ்ரீமான். வி.என். ரெங்கசாமி ஐயங்காரவர்களை ஆசிரியராகக் கொண்டு சுமார் நான்கு வருட காலமாக தமிழ்நாட்டில் உலவி வருவது தமிழ் மக்கள் அறிந்த விஷயம். அப்பத்திரிக்கையின் ஆசிரியர் யாதொரு ஊதியமும் இல்லாமல் கௌரவ ஆசிரியராய் இருந்துகொண்டு குறைந்த சந்தாவாகிய வருடம். ரூ 2-8-0 வீதம் ஏழைகளும் படிக்கும்படியான கவலையின் பேரில், எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் நடத்தி வந்திருப்பதைத் தமிழ் மக்கள் பாராட்டாமலிருக்க முடியாது. அதனுடைய ராஜீயக் கொள்கைகள் தமிழ் நாட்டிலுள்ள மற்ற பெரும்பான்மையான பத்திரிக்கைகள் போல் காற்றடித்த பக்கம் சாயாமல் ஒரே உறுதியாகவே இருந்துவந்தது மற்றுமோர் பாராட்டத்தக்க விஷயம்.
வகுப்பு விஷயங்களில் ஒருக்கால் நமக்கும் அதற்கும் அபிப்பிராய பேதம் ஏற்பட்டிருந்தபோதிலும், ராஜீய விஷயங்களில் பெரும்பாலும் மகாத்மாவையும், சில சமயங்களில் தீவிர ஒத்துழையா தத்துவத்தையுமே அனுசரித்து வந்திருக்கிறது. அவ்விதப் பத்திரிக்கை இது சமயம் சென்னை பிரசிடென்ஸி மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு ஒரு வழக்கில் இழுக்கப்பட்டு பத்திராதிபர்களின் உரிமைக்கும், சுயமரியாதைக்கும் பங்கம் வரத்தக்க மாதிரியில் கஷ்டப்படுத்தப்பட்டு வருகிறது. இது சமயம் பொறுப்புள்ள பத்திராதிபர்களும், பத்திரிக்கையின் சுதந்திரத்தில் கவலையுள்ளவர்களும் முன்வந்து, ³ பத்திரிகைக்கு ஆதரவு அளிக்கவேண்டியது ஒவ்வொரு வரின் கடமையென்பதை நாம் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள் ளுகிறோம். சுகோதயம் பாதுகாப்பு நிதிக்காக நம்மால் கூடிய ஓர் சிறுதொகை யாகிய ரூ.10 இன்று அனுப்பியிருக்கிறதை, ³ பத்திராதிபர் அன்புடன் ஏற்றுக்கொள்ளவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம். சுகோதயம் பத்திரி கைக்கு வெற்றி உண்டாகுக.
குடி அரசு – குறிப்புரை – 13.12.1925