ஸ்ரீமான் பி. தியாகராய செட்டியாரின் மரணம்

பார்ப்பனர் அல்லாதார் கூட்டத்தின் தலைவராக விளங்கிவந்த ஸ்ரீமான் பி. தியாகராய செட்டியார் அவர்கள் 28.4 .25 ² இரவு 9.45 மணிக்கு இம்மண்ணுலகை நீத்து விண்ணுலகெய்திய செய்தியைக் கேள்வி யுற்று நாம் பெரிதும் வருந்துகின்றோம். இச்செய்தி தமிழ்மக்கள் அனைவரை யும் பெருந்துக்கத்தில் ஆழ்த்தும் என்பதில் ஐயமின்று. அவரது இடது கன்னத்தில் முளைத்த ஒரு சிறு கொப்புளமே அவரது ஆவியைக் கொள்ளை கொண்ட கூற்றுவன்! என்னே மனிதர்தம் வாழ்நாளின் நிலை! அரசியல் உலகில் எமக்கும் அப்பெரியாருக்கும் உள்ள வேற்றுமை வடதுருவம், தென் துருவம் எனின் குன்றக் கூறுதலேயாகும். எனினும், அப்பெரியாரின் அருங் குணங்களையும், அளவில்லா தேசபக்தியையும், ஆற்றலையும் நாம் போற்று கிறோம். ஒரு நாள் சென்னைக் கடற்கரையில் இவரது அரசியல் கொள்கை களை வெகு தீவிரமாகக் கண்டித்துப் பேசின ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்களை மறுநாள் காலையில் சென்னைத் தெருவில் சந்தித்த போது; ஸ்ரீமான் முதலியாரை விளித்து “நண்பனே! நேற்று கடற்கரையில் நீ என்னை வாய்மொழிகளால் கண்டித்தது போதாது; இக்கழி கொண்டு என்னைப் புடைத்திருத்தல் வேண்டும்” என்று தமது கையிலிருந்த கழியை ஸ்ரீமான் முதலியாரிடம் கொடுத்தனராம். அரசியல் கொள்கையில் தம்மினும் வேறுபட்டாரிடம் இப்பெருந்தகையார் நடந்து கொண்ட பெருந்தன்மையைப் பாராட்டுகிறோம்.

சென்னை நகர பரிபாலன சபையில் நாற்பதாண்டுகள் அங்கத்தினராக அமர்ந்து இவர் ஆற்றிய அருந்தொண்டுகள் யாவராலும் மறக்கற் பாலதல்ல. தமது முதுமையிலும், உடல்வலி குன்றித் தளர்வெய்திய காலத்திலும் நகர மாந்தர் நலத்தையே மனத்துட் கொண்டு சென்னை நகர பரிபாலன சபையின் தலைமையையேற்று உழைத்து வந்தமையே இதற்குத் தக்க சான்றாகும்.

நமது நாட்டுப் பண்டைக் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதில் மிக்க ஊக்கங் காட்டி வந்த பெரியார் ஆவார். தமிழ்நாட்டில் கைத்தறி நெசவுச் சங்கம் ஒன்று கண்டு அதில் முதன் முதலாக விசைத்தறியை ( குடல ளாரவவடந ) உபயோகிக்க முயற்சி செய்தவராவார். தமது வாழ்நாள் முழுவதும் வைதிகநெறி பற்றியே வாழ்ந்து வந்தார் என்றும், ஆலயத் திருப்பணிகளில் ஆர்வமிக்குடையராய் அரும்பொருள் உதவிவந்தன ரென்றும் அவரையும், அவரது குடும்பத்தையும் அறிந்தோர் நமக்கறிவிக்கின்றனர்.

தமது இளவயதில், டாக்டர் நாயர் அவர்களின் கூட்டுறவு பெறும் வரையில் காங்கிர°வாதியாகவேயிருந்து தேசத் தொண்டு ஆற்றி வந்தார். நமது தமிழ்நாட்டுத் தவப்பேற்றின் குறைவினால் பார்ப்பனரல்லாதார் கூட்டம் ஒன்று கண்டார்; இறக்கும் வரையில் அதன் தலைவராக விளங்கி வந்தார். அத்தகைய கூட்டம் ஒன்று காணாது, காங்கிர° வழிநின்று தேசத் தொண்டி யற்ற வந்திருப்பாராயின் நமது நாட்டின் நிலைமை இன்று வேறு விதமாகத் தோன்றும் என்பது எமது கொள்கை. அதுகிடக்க, அவரது அரசியல் கொள்கைகளையும், முறைகளையும் ஆராய்ச்சி செய்வதற்காக நாம் இன்று முற்படவில்லை; அவைகளைக் கண்டித்தெழுதவும் கருதவில்லை.

அப்பெரியாரின் அரசியல் கொள்கைகள் எவ்விதமிருப்பினும், அவருடைய தேசபக்தியையும், அருங்குணங்களையும், உறங்கிக் கிடந்த பார்ப்பனரல்லாதார்களை உயிர்ப்பிக்கச் செய்த பேராற்றலையும் நாம் போற்றி அப்பெரியாரைத் தமிழ்நாடு இழக்க நேர்ந்தமைக்குப் பெரிதும் வருந்துகின்றோம். அவரது புதல்வருக்கும், புதல்விகளுக்கும், மனைவிக்கும் எமது அனுதாபத்தை இதன் வாயிலாக அறிவித்துக் கொள்ளுகிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக.


குடி அரசு – இரங்கல் செய்தி – 02.05.1925

You may also like...

Leave a Reply