திருவாங்கூர் ராஜ்யத்தில் சாதிக் கொடுமை
திருவாங்கூர் ராஜ்யத்தில் சாதிக் கொடுமை
ராஜ்யத்தின் விஸ்தீரணம் சதுர மைல் – 7,625
அதிலுள்ள கிராமங்கள் – 3,897
இவற்றின் பட்டணங்கள் – 38
பட்டணங்களிலுள்ள வீடுகள் – 72,011
கிராம வீடுகள் – 681,816
ஜனத்தொகை மொத்தம் – 4,006,062
இதில் மலையாள பிராமணர்கள் – 15,000
(நம்பூதிரிகள்)
பரதேச பிராமணர்கள் – 45,000
பிராமணரல்லாத தீண்டக்கூடியவர்கள் – 800,000
தீண்டாத வகுப்பார் – 1,650,000
மகம்மதியர் – 275,000
கிருஸ்தவர் – 1,200,000
தீண்டாதவர்கள் என்பவர்களின் பிரிவு
ஈழுவர்கள் – 675,000
நாடார்கள் – 200,000
கம்மாளர் – 163,000
புலையர்கள் – 200,000
குரவர்கள் – 75,000
பறையர்கள் – 63,000
வண்ணார்கள் – 14,000
நாவிதர்கள் – 27,000
வாணியர்கள் – 19,000
தண்டான் – 30,000
வேலன் – 13,000
வாலன் – 18,000
குயவர்கள் – 9,000
பரவர் – 11,000
பள்ளர் – 16,000
மாரன் – 12,000
கணியான் – 12,500
கிருஷ்ணவகார் – 10,000
அரையான் – 9,000
இடையன் – 7,500
இலவாணியன் – 4,500
மன்னான் – 9,500
மறவன் – 10,000
குடுமி – 7,500
சக்கிலி – 5,500
சாலியன் – 8,500
வேதன் – 6,500
இந்தக் கணக்குகளின்படி தென்னாட்டில் தீண்டக்கூடியவர்கள் என்று சொல்லப்படுகிற அநேக வகுப்பார்களை, திருவநந்தபுரத்தில் தீண்டாதார் வகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அவைகளில் கம்மாளர், இடையர், வாணியர், நாடார், இலவாணியர் முதலிய அநேக நல்ல சாதிகளையும், சுபாவத்திலேயே எவ்விதத் தனிக்குற்றமும் சொல்லுவதற்கில்லாமல் பரிசுத்த மாகவும் இருக்கிற அதாவது, தமிழ்நாட்டில் தீண்டக்கூடியவர்களென்று பழக்கத்தில் சொல்லப்படுகிற அநேகர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர் களல்லாத அநேக சாதியார்களான ஈழுவர், கணியர், கிருஷ்ணவகார், மாரன், சாலியன், வேலன் முதலிய அநேக நல்ல சாதியார்களையும் தீண்டாதவர் களைப் போலவே நடத்தி வருகிறார்கள். இந்தக் கொடுமைகளால் 40 லட்சம் ஜனத்தொகையில் எட்டு லட்சம் தீண்டக்கூடியவர்கள் என்போர் 16 லட்சம் பேரைத் தீண்டாதவர்களாக நடத்திக் கொடுமைப்படுத்துவதோடு அல்லாமல், சென்ற முப்பத்தைந்து வருஷங்களுக்குள்ளாக 7 லட்சம் பேர் இந்து மதத்தை விட்டு அந்நிய மதத்திற்குச் சென்றுமிருக்கின்றனர். அது எப்படியென்றால் 1891- ம் வருஷத்திய ஜனக்கணிதப்படிக்கு திருவாங்கூர் சமஸ்தானத்திலுள்ள கிறிஸ்தவ மகாஜனங்களின் எண்ணிக்கை 526,000 பேர். 1921 – ம் வருஷத்திய ஜனக்கணிதப்படி 1,200,000 பேர். இதே வீதப்படி 1920 முதல் 1925 வரையில் உத்தேசமாய்க் கணக்கிட்டோமாகில் ஒரு லட்சம் பேருக்குக் குறையாது. ஆக நாளது தேதி வரை கிறிஸ்துவர்கள் எண்ணிக்கை 1,300,000 என்று ஏற்படுகிறது. முப்பத்தைந்து வருஷத்திற்குள் 770,000 பேர்கள் திருவாங்கூர் சமஸ்தானமென்கிற ஒரு சிறு ராஜ்யத்தில் இந்து மதத்தை விட்டுக் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி இருக்கிறார்கள். இது 10 வருஷத்திற்கு 100 -க்கு 35 ஆகிவிடுகிறது. இதல்லாமல் மகம்மதிய மதத்தையும் அநேக இந்துக்கள் தழுவி இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த முப்பத்தைந்து வருஷத்திய அனுபவத்தை பார்க்கிறபொழுது திருவாங்கூர் சமஸ்தானமானது பொதுஜனங்களுக்கு, கல்வி அறிவு தாராளமாய் புகட்டி வந்த பிறகுதான் இம்மாதிரி மத மாறுதல் ஏற்பட்டிருக்கிறதே அல்லாமல் அதற்கு முன்பு இவ்வளவு அதிகமில்லை என்றே சொல்லலாம். உதாரணமாக இவ்வளவு கல்வி அபிவிருத்தி ஏற்படாத 1891 -ம் வருஷத்திற்கு முந்திய பத்து வருஷத் தில் 100 -க்கு 5 பேர் வீதம் தான் கிருஸ்தவ மதத்தில் அதிகமாயிருக்கிறார்கள். 1891 – ம் வருஷம் திருவநந்தபுரத்தில் ஜனக்கணிதக் கணக்குப்படி கிறிஸ்தவ மகா ஜனங்களின் எண்ணிக்கை 500,000. 1891 ல் 526,000. இதே மாதிரி இனியும் நடக்குமானால் இன்னும் 50 வருஷத்தில் இந்துக்களே இருக்கமாட்டார்கள். ஆகவே அதிகமாக ஜனங்கள் அந்நிய மதத்தைத் தழுவ ஆரம்பித்தது கல்வி அறிவு ஏறி, சுயமரியாதை ஏற்பட்ட பிறகுதான் என்று உறுதியாய்ச் சொல்ல லாம். இவ்விதம் சுயமரியாதை அடைந்த ஓர் பெரிய சமூகத்தை இந்து மதத் தில் இருக்கக்கூடாது என்று உதைத்துத் தள்ளுவதுபோல் ‘நீ இந்து மதத்தில் இருக்கும் வரை உன்னைத் தொடமாட்டேன், பார்க்கமாட்டேன், தெருவில் நடக்க விடமாட்டேன், உன்னுடைய மதத் தத்துவங்களைப் படிக்கவும் சம் மதிக்க மாட்டேன் என்று கொடுமைப்படுத்தி அந்நிய மதத்தில் சேர நாமே கட்டாயப் படுத்தியவர்களாவோம். இந்தப்பழிக்கு முக்கியமாய்ப் பாத்திய மானவர்கள் 15,000 நம்பூதிரி பிராமணர்களும், 45,000 பரதேசப் பிராமணர் களில் பெரும்பான்மையோரும், அந்த ராஜாங்கத்தில் இவர்களுக்குள்ள ஆதிக்கமும்தான் காரணம், ஏனெனில் மேற்படி சமஸ்தானத்தில் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லப்படுபவர்களில் பிராமணர் தவிர மற்றவர் அநேக மாய் நாயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஜனசங்கியில் ஏழு லட்சம் உள்ளவர்கள். இவர்கள் தங்களது முன்னேற்றத்திற்காக நாயர் சமாஜம் என்று ஒரு சங்கம் வைத்திருக்கிறார்கள். அச்சங்கத்தார் வருஷா வருஷம் ஒன்றுகூடி தங்களுடைய முன்னேற்றத்திற்காகவும், மற்றும் பொது நன்மைக்காகவும் பற்பல தீர்மானங்கள் செய்து வருகிறார்கள். அவ்வித, கூட்டங்களில் தீண்டாத வர்களுக்குத் தெருவில் நடப்பதற்கு உரிமை கொடுக்கவேண்டுமென்றும், அதுமட்டுமல்லாமல் ஆலயப்பிரவேசமும் அனுமதிக்க வேண்டுமென்றும் தீர்மானம் செய்திருக்கிறார்கள். அரசாங்கத்தாருக்கும் இதை அனுப்பி அந்தப் படி செய்யக் கேட்டுக்கொண்டு மிருக்கிறார்கள். சட்டசபையில் இதுவிஷயம் விவாதத்திற்கு வந்த காலத்தில் நாயர் கனவான்கள் அநேகமாய் இந்த தீர் மானத்திற்கு அனுகூலமாகவே இருந்திருக்கிறார்கள். பரதேசப் பிராமணர்கள் என்பவர்களிலும் சிலர் இதற்கு அனுகூலமாகவே இருக்கிறார்கள். இந்தக் கொடுமையைப்பற்றி திருவாங்கூர் அரசாங்கத்தாருடைய கொள்கை இன்ன தென்பதும் ஆக்டிங்கு திவான் ஸ்ரீமான் ஆர்.கிருஷ்ணப் பிள்ளை அவர் களால் தெரிந்து போய்விட்டது.
அவர் சமஸ்தானத்து புதிய ராணியார் அவர்களுக்கு எழுதின கடிதத்தின் சுருக்கமாவது :-
“தெருவில் நடக்கக்கூடிய உரிமையை இந்துக்களில் யாருக்காவது கொடுக்கக்கூடாது என்று சனாதன இந்து மதம் கூறவில்லை. சமஸ்தான அரசாங்கத்தாரும் அதை எப்போதும் எதிர்த்ததேயில்லை. பலாத்காரம் உப யோகித்தால் கலகம் ஏற்படுமே என்று அஞ்சித்தான் தடை உத்திரவு போட்டது”.
இந்த வாக்கியங்களில் இருந்து யாவர் எவரிடம் பலாத்காரம் உபயோ கிப்பது, எவருக்குள் கலகம் ஏற்படும் என்று அரசாங்கத்தார் அஞ்சியது என் பதை நிதானமாய் யோசித்தால் விளங்கும்.
ஆகையால் இந்தக்கொடுமைக்கு ஏதாவது பாவமேற்படுமானால் இந்த 15,000 நம்பூதிரி பிராமண கனவான்களைத்தான் முதலில் சேரும். இதைப் பார்த்தால் இந்து சமூகத்திற்கு இந்தப் பிராமணர்கள் தர்மகர்த்தர்களாக இருப்ப தைவிட டயர், ஓட்வியர், லாயிட் ஜார்ஜ், பர்க்கன் ஹெத் சாதியார் தர்மகர்த் தர்களாய் இருப்பது அதிக கெடுதலாகத் தோன்றவில்லை.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 19.07.1925