தலையங்கப் பக்கம் மாற்றங்கள்
தொடக்கத்தில் தலையங்கங்கள் இதழ்களின் நடுப்பக்கத்தில் வெளிவந் துள்ளன. 10.02.1935 (மாலை 9 – மலர் 27) முதல் 09.06.1935 (மாலை 9 – மலர் 44) முடிய உள்ள குடி அரசு இதழ்களில் மூன்றாம் பக்கத்தில் தலையங்கங்கள் வெளி வந்துள்ளன.
02.05.1925 (மாலை 1 – மலர் 1) முதல் இதழ் தலையங்கப் பக்கத்தில் கை இராட்டினமும்
பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க
மிழிந்த பிறப்பாய் விடும்.
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின் (குறள்)
என்ற மூன்று குறட்பாக்களும் இடம் பெற்றுள்ளன. 23.08.1925 இதழி லிருந்து குறள்கள் எடுக்கப்பட்டு கை இராட்டினத்துடன்
அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி
அரும்பசி யெவற்கும் ஆற்றி
மனத்துளே பேதா பேதம்
வஞ்சம் பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப்பா யாகில்
செய்தவம் வேறொன் றுண்டோ
உனக்கிது உறுதியான
உபதேசம் ஆகும் தானே.
என்ற பாடல் இடம் பெறுகிறது. 08.05.1927 இதழில் “அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி” எடுக்கப்பட்டு கை இராட்டினம் மட்டுமே இடம் பெறுகிறது. 13.11.1927 இதழில் மீண்டும் “அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி” பாடல் இடம் பெறுகிறது. அவ்வப்போது ‘அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி’ என்ற பாடல் மட்டும் இடம் பெற்றும், கை இராட்டினம் மட்டும் இடம் பெற்றும், இராட்டினம் – பாடல் இரண்டும் இல்லாமலும் இதழ்கள் வெளி வந்துள்ளன.
10.08.1930 குடி அரசு இதழிலிருந்து “அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி” பாடலும் கை இராட்டினமும் தலையங்கப் பக்கத்தில் இடம் பெறவில்லை. 25.12.1938 இதழ் வரை இந்நிலை தொடர்கிறது.