ஈரோடு முனிசிபாலிட்டி
ஈரோடு முனிசிபல் சேர்மன் மீது சில கவுன்சிலர்கள் சென்ற மாதம் ஈரோடு முன்சீப் கோர்ட்டில், உண்மையில் நிறைவேறிய தீர்மானத்தை நிராகரித்து விட்டு , ஒழுங்கற்ற ஓர் தீர்மானத்தை நிறைவேற்றியதாக தனது மினிட் புஸ்த்தகத்தில் சேர்மன் குறித்துக் கொண்டாரென்றும் ஆதலால் அதை அமுலுக்குக் கொண்டுவரக்கூடாதென்றும், ஓர் தற்காலத்தடை உத்தரவு பெற்றதைப்பற்றி 15. 11. 25 “குடி அரசு” பத்திரிக்கையில் வாசகர்கள் வாசித்திருக்கலாம். அவ்வழக்கு நாளது மாதம் 8 -ந்தேதி ஈரோடு டி.மு. கோர்ட்டில் மறுபடியும் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இது விஷயத்தில் பிரவேசிக்க முன்சீப் கோர்ட்டுக்கு அதிகாரமில்லை யென்றும், அக்ராசனாதிபதி என்ற ஹோதாவில் தான் செய்ததற்கு தானே தான் எஜமானென்றும், தன்னுடைய காரியத்தைச் சரியென்று நிரூபிக்க, சில கவுன் சிலர்களின் பிரமாண வாக்கு மூலங்கள் ஆஜர் செய்யப்பட்டிருக்கின்ற தென்றும், பிரஸ்தாபத் தடை உத்திரவினால், சிங்காரவனத்தின் வேலைகள் தடைப்பட்டு அதற்கென்று வாங்கி வைத்திருக்கும் செடிகளும், கொடிகளும் காய்ந்து வருகிறதென்றும், ஜில்லா கலெக்டரும் தனது காரியத்தைச் சரியென்று ஒப்புக்கொண்டிருக்கின்றாரென்றும் ஆகிய இவை முதலிய காரணங்களால், தடை உத்திரவை நீக்கவேண்டு மென்றும், சேர்மன் சார்பாக வாதிக்கப்பட்டது. மற்றொருபுறம், சேர்மன் சொல்லுவது தப்பென்று ருஜுப் படுத்துவதற்கும், ஒழுங்காய் நிறைவேறிய தீர்மானம் இன்னதெனக்கண்டு பிடிப்பதற்கும், மீட்டிங்கின் தீர்மானப் புஸ்தகமே போதுமான ஆதாரமென்றும், அதில் கிரமமான தீர்மானங்கள் எழுதப்பட்டும் அடிக்கப்பட்டுமிருக்கின்ற தென்றும் சேர்மன் செய்த காரியங்கள் சரியா, தப்பாவென்று சொல்லுவதற்கு சேர்மனே தான் அதிகாரியென்று ஏற்படுமானால், உலகிலுள்ள முனிசிபாலிடி களெல் லாம் சேர்மேனுடைய சொத்தாகிவிடலாமென்றும், கலெக்டருக்கு இதை பற்றிக் கவுன்சிலர்கள் எழுதியதற்குத் தனக்கு அதிகாரமில்லையென்று கலெக் டரிடமிருந்து பதில் வந்துவிட்டதென்றும், மற்றபடி அவர் எழுதியிருப்பது ஒரு பக்ஷத்தை மாத்திரம் கேட்டுக்கொண்டு எழுதிய எழுத்துக்களென்றும் கவர்மெண்டுக்கு எழுதியதற்கு இன்னும் பதில் வராமலிருக்கின்றதென்றும், செடி கொடிகள் காய்ந்து போவதால் 20, 30 ரூபாய் நஷ்டம் தான் வரு மென்றும், தடைஉத்திரவை இப்போது நீக்கிவிட்டால், விவகாரம் தங்கள் பக்ஷ மாய் ஜெயித்தால் ஆயிரக்கணக்கான நஷ்டத்தை ஈடு செய்ய முடியா தென்றும், இம்மாதிரியான விஷயங்களில் நியாயஸ்தலத்திற்கு அதிகார மில்லாமற் போய்விட்டால், முனிசிபல் நிர்வாகமே பாழ்பட்டுப் போய்விடு மென்றும், இது முதலான காரணங்களால், தடை உத்திரவை இவ் விவகாரம் தீரும் வரையில் காயமாக்க வேண்டுமென்று சில கவுன்சிலர்களின் சார்பாக வாதிக்கப்பட்டது. கோர்ட்டார் இருவருடைய விவாதங்களைக் கேட்டு, இவ்விஷயத்தில் பிரவேசிக்கத் தனக்கு அதிகாரமிருக்கின்ற தென்றும், தற் காலம் தன்முன் விஷயங்களிருக்கும் நிலைமையில், தடை உத்திரவைக் காயப்படுத்த வேண்டியது அவசியமென்றும் சொல்லி, இவ் விவகாரம் தீரும் வரை தடை உத்திரவைக் காயப்படுத்தி விட்டார். முனிசிபல் தீர்மானப் புஸ்தகத்தைச் சேர்மன் திருப்பிக் கேட்டபோது, எதிர் கவுன் சிலர்கள், அதைச் சேர்மெனிடம் கொடுக்கக்கூடாதென்றும், திருப்பிக் கொடுத்தால், அதில் ஏதாவது திருத்தங்கள் ஏற்பட்டு விடலாமென்றும், ஆnக்ஷபித்ததின் காரணமாகத் தீர்மான புஸ்தகத்தில் கண்ட விஷயங்களை பொட்டகிறாப் படம் எடுத்துக்கொண்டு வாபீஸ் செய்யப்பட்டது.
குடி அரசு – கட்டுரை – 13.12.1925