குடி அரசு : ஆசிரியர், பதிப்பாளர் மாற்றங்கள்

‘குடி அரசு’ முதல் இதழின் ஆசிரியர்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வா.மு.தங்கப்பெருமாள் பிள்ளை ஆகியோர்ஆவர். 07.06.1925 இதழில் வா.மு.தங்கப்பெருமாள் பிள்ளையின் ‘சாதி’ப் பட்டம் நீங்குகிறது. 26.07.1925 இதழிலிருந்து ஈ.வெ.ராமசாமி நாயக்கர் மட்டுமே ஆசிரியராகிறார். 25.12.1927 இதழிலிருந்து ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பெயரிலுள்ள ‘சாதி’ப்பட்டம் நீங்குகிறது. 1931 இல் பெரியார் உலகப்பயணம் மேற்கொண்டதால் 01.11.1931 முதல் சாமி. சிதம்பரனார் ஆசிரியராகப் பொறுப்பு ஏற்கிறார். பயணம் முடிந்து ஈரோடு திரும்பும் வரையில் அப்பொறுப்பில் இருக்கிறார். 29.11.1931 குடி அரசு முதல் 19.11.1933 குடி அரசு வரை அட்டையில் ஆசிரியர் பெயர் இல்லாமல் இதழ் வெளிவருகிறது. 19.11.1933 இதழோடு இதழ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் 13.01.1935 முதல் வெளிவரத் தொடங்குகிறது. அப்போது ஆசிரியர் ஈ.வெ.கிருஷ்ணசாமி. 25.12.1938 வரை அவரே ஆசிரியராக நீடிக்கிறார்.

முதல் இதழின் பதிப்பாளரான க. அப்பையா 20.09.1925 இதழ்வரை பதிப்பாளராக இருக்கிறார். 27.09.1925 முதல் ஈ.வெ.ராமசாமி நாயக்கரும் 18.04.1926 முதல் சா. ராமசாமி நாயக்கரும் பிறகு 09.01.1927 முதல் ஈ.வெ.ரா. நாகம்மாளும் பதிப்பாளர் ஆகிறார்கள். குடி அரசு அலுவலகம் சென்னைக்கு மாறியது முதல் 16.06.1929 இதழில் இருந்து ஜே.எஸ்.கண்ணப்பர் பதிப்பாளர். மீண்டும் ஈரோட்டுக்கு அலுவலகம் மாறியதும் 19.01.1930 இதழில் இருந்து ஈ.வெ.ரா. நாகம்மாள் பதிப்பாளர் ஆகிறார். அவரது மறைவு வரை அவர்தான் பதிப்பாளர். 16.07.1933 இதழ் முதல் சா.ரா.கண்ணம்மாள் ( பெரியாரின் சகோதரி) பதிப்பாளர் ஆகிறார். 19.11.1933 வரை இவரே நீடிக்கிறார். 13.01.1935 இதழில் இருந்து ஆசிரியர் மற்றும் பதிப்பாளராக ஈ.வெ.கிருஷ்ணசாமி (பெரியாரின் சகோதரர்) வருகிறார்.

‘குடி அரசு’ இடையில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து வெளிவந்த ‘புரட்சி’ வார ஏட்டுக்கு 26.11.1933 லிருந்து 28.01.1934 வரை சா.ரா.கண்ணம்மாள் அவர்களே பதிப்பாளராகத் தொடர்கிறார். முதல் நான்கு ‘புரட்சி’ இதழ்கள் அட்டையில் ஆசிரியர் பெயர் இல்லாமலேயே வெளி வருகிறது. 24.12.1933 ஒரு இதழில் மட்டும் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி. 31.12.1934 முதல் ஈ.வெ.கிருஷ்ணசாமி ஆசிரியராகிறார். 04.02.1934 முதல் 17.06.1934 வரை ஈ.வெ.கிருஷ்ணசாமி பதிப்பாளராகிறார். பெரியார் தொடங்கிய ‘பகுத்தறிவு’ 26.08.1934 முதல் வார இதழாகவும், பிறகு மே 1935 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது. பகுத்தறிவு வார இதழுக்கு ஆசிரியராகவும் பதிப்பாளரா கவும் ஈ.வெ. கிருஷ்ணசாமியே நீடிக்கிறார். பகுத்தறிவு மாத இதழுக்கு பொறுப் பாசிரியராக ஈ.வெ.கிருஷ்ணசாமியும் முதன்மை ஆசிரியராக பண்டிதர் சாமி. சிதம்பரனாரும் இருக்கின்றனர். பதிப்பாளர் பொறுப்பில் ஈ.வெ. கிருஷ்ண சாமியே நீடிக்கிறார்.

You may also like...

Leave a Reply