தலையங்கம் முக்கியத்துவம் பெறும் தீர்ப்பு!

7 நீதிபதிகளடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு மதச்சார்பின்மை குறித்து அளித்துள்ள தீர்ப்பு மிகவும் முக்கியத்துவமானது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 1990ஆம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அபிராம் சிங், ‘இந்து ராஜ்யம்’ அமைப்பேன் என்று கூறி வாக்கு கேட்டார். மதத்தின் அடிப்படையில் வாக்கு கேட்பது தேர்தல் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு (பிரிவு 123(3)) எதிரானது. மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. தேர்தல் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் கூறியது. 1995இல் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டுக்கு வந்தபோது வழக்கை விசாரித்த ஜே.எஸ். வர்மா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “இந்துமதம் அல்லது இந்துத்துவா என்பது இந்திய உபகண்டத்தில் மக்களின் வாழ்க்கை நெறி, அதை மதமாகக் கருத முடியாது” என்று கூறிவிட்டது. சங்பரிவாரங்கள் ஆனந்தக் கூத்தாடின. அன்றிலிருந்து இன்றுவரை “இந்து என்பது வாழ்க்கை நெறி” என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது என்று வாதிட்டு வருகிறார்கள்.

இந்தத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தெளிவான விளக்கம் தரவேண்டும் என்று சில சமூக ஆர்வலர்கள் மீண்டும் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 7 நீதிபதிகளடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. “தீர்ப்பு குறித்து கருத்து கூற முடியாது. வழக்கை மட்டும் விசாரிக்கிறோம்” என்று அறிவித்தனர் நீதிபதிகள். இப்போது டி.எஸ். தாக்கூர், எம்.பி. லோக்குந்,

எஸ்.ஏ. பாட்தே, எல்.என். ராவ் ஆகிய நான்கு நீதிபதிகள் ஒரு கண்ணோட்டத்திலும், நீதிபதிகள் யு.யு. லலித், ஏ.கே. கோயல்,

டி.ஒய். சந்திரசூட் ஆகிய மூன்று நீதிபதிகள் மாறுபட்ட கண்ணோட்டத்திலும் தீர்ப்பளித்துள்ளனர்.

தேர்தல் என்பது மதத்துக்கு அப்பாற்பட்டது என்று கூறும் பெரும்பான்மை நீதிபதிகள், “ஜாதி, மதம், மொழி, இனம், தேசிய அடையாளம், தேசியக் கொடி என்ற அடிப்படையில் வாக்குகள் கோருவது தவறான நடத்தை. இது மக்களைப் பிளவுபடுத்தும், மக்கள் பிரதிநிதித்தவ சட்டம் இதைத் தான் கூறுகிறது” என்று கூறியிருக் கிறார்கள்.  இத்தீர்ப்பு வேட்பாளருக்கு மட்டுமல்ல, வேட்பாளரின் முகவர், வாக்காளர்களுக்கும் பொருந்தும் என்றும் தீர்ப்பு கூறுகிறது. “இந்துக்களின் ஓட்டு இந்துக்களுக்கே; இந்துக்கள் அல்லாதவர் களுக்கு ஓட்டு போடாதீர்; நம் ஜாதி வேட்பாளருக்கே நாம் வாக்களிக்க வேண்டும்” என்று மதம், ஜாதி அடிப்படையில் வாக்கு கேட்கக் கூடாது என்ற கருத்து வரவேற்கக் கூடியதே. ‘இந்துமதம் வாழ்க்கை நெறிதான்’ என்று திரிபுவாதம் பேசிவரும் சங்பரிவாரங்களுக்கு இத் தீர்ப்பு வாய்ப் பூட்டு போட்டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

அதே நேரத்தில் வேறு கண்ணோட்டத்தில் 3 நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பும், ஆழமான பரிசீலனைக்கும் கவலைக்கும் உரியது. ஜனநாயகத்தை இலட்சியப் பார்வையில் பெரும்பான்மை தீர்ப்பு அணுகுகிறது என்றால், மூன்று நீதிபதிகளின் தீர்ப்பு, நடைமுறையில் ஜாதி, மொழி, இனத்தின் இயங்கு நிலையை கருத்தில் கொண்டு ஆராய்ந்திருக்கிறது.

“சமூக வாழ்வில் – ஜாதி, மதம், மொழி, இனம் ஆகியவற்றின் முக்கிய பங்கை அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது. நீண்ட காலமாக திணிக்கப்பட்ட அடையாளங்களால், தனி நபர்கள், வெகுமக்கள், சமூகங்கள் புறக்கணிப்புக்கும் பாகுபாட்டுக்கும் உள்ளாக்கப்பட்டிருக் கிறார்கள். இந்த அடையாளங்களிலிருந்து தங்களை மீட்டுக் கொள்ள முயற்சிப்போர், அந்த நோக்கத்தோடு சமூக அடையாளங்களைப் பயன்படுத்துவதைத்  தடுப்பது, ஜனநாயகத்தின் மீது அவர்களை நம்பிக்கை இழக்கச் செய்து விடும்” என்று சுட்டிக்காட்டியுள்ளனர். இதில் உயிரோட்டமாக நிற்கும் சமூக விடுதலைக் கருத்தியலை புறந்தள்ளிவிட முடியாது.

“என்னுடைய மொழி புறக்கணிக்கப்படுகிறது; நான் பிறந்த ஜாதி காரணமாக எனது உரிமை மறுக்கப்படுகிறது; நான் தமிழனாக பிறந்து விட்டதால்தான் இந்த பாகுபாடு; எனது மொழிக்கான சமஉரிமை இல்லை” என்று தேர்தலில் ஒடுக்கப்பட்ட சமூகம், இனம் பேசுவதும், அதனடிப்படையில் தேர்தல் களங்களை அணுகுவதும் தடை செய்யப் படுவதற்கு உரியதுதானா? என்பது நியாயமான கேள்வியேயாகும்.

‘இந்துக்களுக்கு வாக்களியுங்கள்’ என்றால், அந்த முழக்கத்துக்குள் சமத்துவம் மறுக்கப்படுகிறது. அதற்குள் பார்ப்பன மேலாண்மை ஆதிக்க சிந்தனை அடங்கியிருக்கிறது. அத்தகைய ‘இந்துக்கள் இராஜ்யம்’ ஆபத்தானது என்று பாதிக்கப்பட்டவர்கள் தேர்தல் களத்தை அணுகும் போது அதில் சமூக  ஜனநாயகத்துக்கான உரிமைக்கான குரல் பொதிந்து நிற்கிறது.

இரண்டுமே மதச்சார்பின்மைக்கு எதிரானது என்ற ஒரே தராசில் எடை போட முடியாது.

பார்ப்பனர்கள் கூறும் ஜாதி ஒழிப்பு இடஒதுக்கீட்டு முறைகளில் மட்டும் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்கிறது. சமூகத்தில் திருமண உறவுகளில் பண்பாடுகளில் ஜாதியைக் காப்பாற்ற வேண்டும் என்ற இரட்டைத் தன்மையை கொண்டது. ஒடுக்கப்பட்டோர் பேசும் ஜாதி ஒழிப்பு – இடஒதுக்கீட்டில் மட்டும் ஜாதி வேண்டும்; சமூகத்தில் வேண்டாம் என்று கோருகிறது. இரண்டுக்கும் வெவ்வேறு அளவுகோல், வெவ்வேறு பார்வை அவசியமாகிறது.

தேர்தல் என்றாலும் ஜனநாயகம் என்றாலும் அடிப்படை நோக்கமே சமத்துவத்தை உருவாக்குவதுதான் என்ற புரிதலில் இப்பிரச்சினையை அணுகினால் அதில் குழப்பங்களுக்கு இடமிருக்காது. பெரியார் கூறுகிறார்:

“பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்பந்தப் பட்டு, அம்மதம் பாமர மக்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும் அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும் அதை மாற்றாமல் – அதை மாற்றுவதற்கு தகுந்த முயற்சி எடுக்காமல் மேல் நாட்டுச் சமதர்மம் பேசுவது பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவேயாகும்.”                                    – குடிஅரசு 15.9.1935

பெரியார் முழக்கம் 12012017 இதழ்

You may also like...