காலவரிசைத் தொகுப்பு : காலத்தின் தேவை
வரலாறு என்பது ஆட்சியாளர்களின் காலவரிசைப் பட்டியல் அல்ல; அதைவிட ஆழமானது. வரலாறு என்பது மனித வாழ்வு பற்றியது; மனித சமூகத்தின் வாழ்வியக்கம் பற்றியது; வேறு மொழியில் சொல்ல வேண்டு மானால், சமூக மாற்றங்களின் தொகுப்பே வரலாறு.
வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கில் சமுதாயமானது புராதனப் பொதுவுடைமை, அடிமை உடைமை, நில பிரபுத்துவம், முதலாளித்துவம், சோஷலிசம் என்ற படிநிலைகளில் மாற்றம் பெறுவதாக சொல்லப்படுவது உண்டு. ஆனால், இந்தியச் சமுதாயமானது இப்படிப்பட்ட படி நிலைகளை கடந்து வந்தது என்பதை வரலாற்றுச் சான்றுகள் அடிப்படையில் நிர்ணயிக்க இயலாது என்று மார்க்ஸிய வரலாற்று ஆசிரியர் டி.டி.கோசாம்பி கூறுகிறார். இதைத்தான் காரல் மார்க்சும், “ இந்தியாவின் கடந்த காலத்தில் அரசியல் அம் சத்தில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் மிகத் தொல் பழங்காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டின் துவக்க காலம் வரை அதன் சமுதாய நிலை மாற்றமின்றி தேக்க நிலையில் இருந்து வந்துள்ளது” என்று கூறினார். ( கூhந க்ஷசவைiளா சுரடந in ஐனேயை – முயசட ஆயசஒ ) இதையே பெரியார், “ நமது நாட்டு அடிமைத் தனம் எத்தனை காலமாய் இருந்து வருகிறது என்பதை நினைத்துப் பாருங்கள். தர்ம ராஜ்யம், இராம ராஜ்யம், சத்தியமூர்த்தி அரிச்சந்திர ராஜ்யம் முதலிய அவதார ராஜ்யம் முதல், தெய்வீகத் தன்மை பொருந்திய மூவேந்தர் முதலிய சரித்திர ராஜ்யம் வரை இந்திய மக்கள் நிலையை சற்று ஞாபகப்படுத்தி ஆராய்ச்சி செய்து உண்மையைக் கண்டு பாருங்கள்” ( குடி அரசு- 20.9.1931 ) என்று குறிப்பிட்டார். இந்தத் தேக்கமான சமுதாய அமைப்பில் தனி அம்சமாக சாதி அமைப்பு இருந்தது.
1901 ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பு அறிக்கை சென்னை மாகாணத்தில் அன்று நிலவிய சாதியம் பற்றிக் கூறுகையில், “ ஒரு மனிதனின் வாழ்வை, வேலையை, இருப்பிடத்தை, சமூக அந்தஸ்தை, உணவை, பெயரை, உடையை சாதியே தீர்மானிக்கிறது” என்று சுட்டிக்காட்டியது. பிரிட்டிஷார் வருகைக்குப் பிறகுதான் பார்ப்பன மேலாண்மையை நிலைநிறுத்தும் சாதி யமைப்பு சமூகத்தின் உற்பத்தி உறவுகளில், மாற்றங்களுக்கான அறிகுறிகள் தோன்றின.தேக்கங்கள் அசையத் தொடங்கிய அக்காலகட்டத்தில் பார்ப்பன ரல்லாதார் இயக்கங்களின் உரிமைக் குரல்களும் கேட்கத்தொடங்கின. எதிர் அணியில் பார்ப்பனப் பிடியில் காங்கிரசும் – இந்து மகாசபையும்- ‘தேசபக்தி’ என்ற முகத்திரையோடு வெளியே வந்தன. இப்படி சமூக முரண்பாடுகள் செயல்படத் தொடங்கிய வரலாற்றுச் சூழலில் – பார்ப்பனரல்லாத சூத்திர, தீண்டப்படாத மக்களின் உரிமைக்கான முழக்கங்களோடு – பெரியாரும் அவரது இயக்கமும் களத்துக்கு வருகிறது. வரலாற்றுப் போக்கில்- இது ஒரு முக்கிய காலகட்டமாகும். தற்போது நூற்றாண்டு விழா காணும் அறிஞர் அண்ணா இதைத்தான் “பெரியார் ஒரு சகாப்தம்; ஒரு காலகட்டம்; ஒரு திருப்பு முனை” என்று படம் பிடித்தார்.
உற்பத்தியில் பரம்பரை அடிப்படையிலான குலத் தொழிலையும், மறு உற்பத்தியில் ஒரே சாதிக்குள் நடக்கும் அகமண முறையும் தீவிரத்துடன் நிகழ்த்திய செயலாக்கத்தின் மீதும், அதன் காரணிகள் மீதும் பெரியார் அடித்த அடி ‘இரும்பு உலக்கையாக’ வீழ்ந்தது. பார்ப்பனர்களும் ஆதிக்க சக்திகளும் அலறின; சாதியமைப்புக்கான கருத்தியலையும் செயல் திட்டங்களையும் வழங்கிக் கொண்டிருந்த வேத மதமாகிய பார்ப்பன மதத்தின் ஆணிவேரைப் பெரியார் அசைக்கத் தொடங்கினார். அந்த அசைப்புக்குள்ளே வேதம், புராணம், சாஸ்திரம்,மதம், சம்பிரதாயம் மட்டுமல்ல, ‘கடவுளும்’ சிக்கிக் கொண்டது. வீரியத்துடன் – வீறுகொண்டெழுந்த – அந்த “கலகத்தின்” காலப் பதிவுகளாய் சாட்சியங்களாக இன்னும் நிற்பவை, பெரியாரின் எழுத்தையும் பேச்சையும் கொண்டிருந்த அவர் நடத்திய ஏடுகள் தான் என்பதில், இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.
பெரியார் காங்கிரசுக்குள் இருந்த காலம் 5 ஆண்டுகள்தான். அந்த அய்ந்தாண்டுகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவோ அல்லது செயலாளராகவோதான் செயல்பட்டு வந்திருக்கிறார். ‘குடி அரசு’ ஏட்டை காங்கிரசை விட்டு வெளியேறுவதற்கு 6 மாதம் முன்பே காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த காலத்திலேயே தொடங்கிவிடுகிறார்.அப்போதே அவர் ‘குடிஅரசி’ல் எழுதினார்.
“ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். இதை அறவே விடுத்து தேசம், தேசம் என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று. மக்களுக்குள் தன்மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும்”. இப்படி காங்கிரசில் இருக்கும் போதே முதல் ‘குடிஅரசில்’ தனது நோக்கத்தை பெரியார் பதிவு செய்துள்ளார். காங்கிரஸ் முன் வைத்த ‘தேசியம் – காலனியம்’ என்ற வட்டத்துக்குள் சுழன்று கொண்டிராமல், அதற்கு வெளியே நின்று சமூகப் பிரச்சினைகளை பெரியார் முன் வைத்தார் என்ற உண்மையை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அதிகாரப் பசிக்காக உருவான பார்ப் பனர் கூடாரமான சுயராஜ்யக் கட்சியையும், பார்ப்பனரல்லாத உரிமைக்காக அரசியலில் இறங்கிய தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தையும் ( நீதிக்கட்சி) பெரியார் ஒப்பீட்டு அளவில் திறனாய்வு செய்தார். சுயராஜ்யக் கட்சியை முழுமையாகப் புறக்கணித்த பெரியார் – நீதிக்கட்சிக்கான ஆதரவை நிபந் தனைகளுடன்தான் முன் வைக்கிறார். “காலரும், டையும், பூட்சும், சராயும், ஆங்கிலத் தொப்பியுமுள்ளவர்கள் பிராமணரல்லாதார் நன்மையைப் பற்றி பேசினாலாவது தலைமை வைத்து நடத்தினாலாவது, அதோடு ஒரு பயனும் விளையாது. அரசாங்கத்தின் தயவிருந்தால்தான் பிராமணரல்லாதார் முற்போக்கடைய முடியும் என்ற எண்ணத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” என்று பெரியார் இடித்துரைக்கிறார். ( ‘குடி அரசு’ 3.1.1926 )
பார்ப்பனரல்லாதார் யார் என்பதற்கு தெளிவான விளக்கத்தையும், அவர் வரையறை செய்கிறார்.
“ பார்ப்பனரல்லாதார் என்றால், பார்ப்பனரல்லாதார் சமூகத்தில் 100க்கு 90 பேர்களாயிருக்கும் பாமர மக்களையும் ஏழை மக்களையும் குறிக்குமே யல்லாமல், 100க்கு 5 பேர்கூட இல்லாத இராஜாக்களையும், ஜமீன்தார்களையும் மாத்திரம் குறிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்”. ( ‘குடி அரசு’ 26.12.1926 ) காங்கிரஸ் கட்சிக்கு முழுக்குப் போட்டு விட்டு, வெளியேறிய பிறகும் கூட பெரியார் காந்தியாரின் தீண்டாமை ஒழிப்பையும், கதர் பரப்ப லையும் தீவிரமாக ஆதரித்து வந்ததோடு, தென்னிந்திய நலஉரிமைச் சங்க மான நீதிக்கட்சியும், இந்தக் கொள்கைகளை, தமது வசமாக்கிக் கொள்ள வேண்டும் என்றே வலியுறுத்துவதிலிருந்து கட்சிகளைத் தாண்டி சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவரது கொள்கைப் பார்வை கோலோச் சியதைப் புரிந்து கொள்ள முடியும்.
1926 இல் சென்னை மாகாணத்தில் சுயராஜ்யக் கட்சியின் மறைமுக ஒத்துழைப்புடன் சுப்பராயன் தலைமையில் சுயேச்சை அமைச்சரவை அமைந்தபோது, முதலில் சுப்பராயனை ஆதரித்த சுயராஜ்ய கட்சி, பிறகு, சுப்பராயன் அமைச்சரவையைக் கவிழ்க்கும் முயற்சிகளில் இறங்கியபோது, பெரியார் மேற்கொண்ட அணுகுமுறைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்காக ராயல் கமிஷன் ( சைமன் குழு ) வருகை புரிந்த காலமும் அதுதான். அந்தக் குழுவைப் புறக் கணிக்கும் முடிவையே காங்கிரசுடன் சேர்ந்து நீதிக்கட்சியும் எடுத்திருந்தது. அப்போது பெரியார் குரல் மட்டும் தனித்து ஒலித்தது. சைமன் குழுவைப் புறக்கணிக்கக் கூடாது என்று வலியுறுத்திய பெரியார், புறக்கணிப்பாளர் வைத்த வாதங்களை தகர்த்து எறிந்தார். மீண்டும் நீதிக்கட்சி ஆதரவோடு சுப்பராயன் அமைச்சரவையை நீட்டிக்கச் செய்து உறுதியான ஆதரவு தந்து, தடுமாற்றத்திலிருந்த நீதிக்கட்சித் தலைவர் பனகல் அரசரை இடித்துரைத்து, சைமன் குழுவை பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் சூழலை உருவாக்கிக் காட்டியவர் பெரியார்.
1926 இல் நீதிக்கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில் அடுத்த தேர்தல் வரை துக்கம் கொண்டாடப் போகிறீர்களா? அல்லது பார்ப்பன ஆதிக்கத்தை அழித்து பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையைக் காப்பாற்றப் போகிறீர்களா? என்று நீதிக் கட்சியினரைப் பார்த்து, வினா எழுப்பியதோடு, பார்ப்பனரல்லாதார் மாநாடு ஒன்றைக் கூட்டி, செயல் திட்டங்களை உருவாக் கும் யோசனையை முன்வைத்தார். அக்காலகட்டத்தில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, பார்ப்பனரல்லாதாரை எழுச்சிப் பெறச் செய்தார். துவண்டு கிடந்த நீதிக்கட்சியை நிமிர்ந்து நிற்கச் செய்தார். பெரியாரின் ஆலோசனையை ஏற்றுத்தான் 1926 டிசம்பர் 26 ஆம் தேதி மதுரையில் நீதிக்கட்சி பார்ப்பனரல்லாதார் மாநாட்டை கூட்டியது. அதற்கான வேலைத் திட்டங்களையும், பெரியாரே முன் வைத்தார். “ பார்ப்பனரல்லாதார் சுயமரி யாதைச் சபைகள்” மாவட்டம், வட்டம், கிராமங்கள் தோறும் தொடங்கப் பட வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, பார்ப்பனரல்லாத காங்கிரசு கட்சி யினரையும் மாநாட்டில் பங்கேற்க அழைத்தார். “ இந்த மாநாடு எவ்வித அபிப்பிராய பேதமுள்ள பார்ப்பனரல்லாதாருக்கும் பொதுவானதென்றே சொல்லுவோம்” (‘குடி அரசு’ 19.12.1926) என்று பெரியார் சுட்டிக் காட்டுவதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கட்சி எல்லைகளுக்கு அப்பால் சுய மரியாதை கொள்கைகளுக்கான தளத்தை விரிவுபடுத்தும் பெரியாரின் செயல் உத்தியை இதில் காண முடிகிறது.
தென்னிந்திய நல உரிமைச் சங்கமான நீதிக்கட்சி நடத்தி வந்த ‘திராவிடன்’ நாளேட்டை அவர்களால் நடத்த முடியாதபோது பெரியாரிடம் அதன் பொறுப்பு வந்தது. பெரியாரும் அதற்கு ஒப்புக்கொண்டார். அப்போது பெரியார் எழுதினார்:
“ திராவிடன்” கொள்கை ‘குடி அரசு’ க் கொள்கைப்படியே தான் இருக்கும்” என்று அறிவித்த பெரியார், “ இதற்கு ‘திராவிடன்’ சொந்தக் காரர்கள் சம்மதிக்காத போது நாம் விலகிவிடுவோம் என்பது உறுதி” என்று அறிவித்து விட்டே, ‘திராவிடன்’ பொறுப்பை ஏற்றார். சொல்லியவாறே செயல்பட்டார்.
நீதிக்கட்சியில் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவை அக்கட்சி எடுத்தபோது அதே ‘ திராவிடன்’ ஏட்டில் பெரியார், நீதிக் கட்சியை கடுமையாக கண்டிக்கத் தயங்கவில்லை. கடும் விமர்சனங்களைத் தாங்க முடியாத நீதிக்கட்சி தலைவர்கள் ‘ திராவிடனை’ பெரியாரிடமிருந்து திரும்பப் பெறும் முயற்சிகளில் இறங்கினர். பொருள் இழப்போடுதான் பெரியார் ‘திராவிடன்’ ஏட்டின் பொறுப்பிலிருந்து விலகினார். சில மாதங் களில் அலர்மேலு மங்கைத்தாயார் எனும் அம்மையாரை ஆசிரியராகக் கொண்டு, ‘திராவிடன்’ நாளேட்டை நீதிக்கட்சி வெளிக்கொண்டு வந்தது. அதில் இப்படி ஒரு அறிவிப்பு இடம் பெற்றது. “திராவிடன் மதவேறுபாடு, வகுப்பு வேறுபாடு காட்டாமல் இனி வெளியிடப்படும்.” இந்த அறிவிப்பே, பெரியாரிடமிருந்து ‘திராவிடன்’ மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டதன் நோக்கத்தை சுட்டி நிற்கிறது.
இவற்றை எல்லாம் நாம் இங்கே சுட்டிக்காட்டுவதற்கு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. பெரியாரையும் அவரது இயக்கத்தையும் பற்றிய எந்த ஒரு சரியான புரிதலுக்கு பெரியார் இயங்கிய வரலாற்றுச் சூழல்களோடு இணைத் துப் பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். அச் சூழலோ டும், சூழலுக்குள்ளும் பெரியாரைப் பொருத்திப் பார்க்கும்போதுதான் முழு மையான பெரியாரியலின் வெளிச்சத்தைப் பெறமுடியும். காலவரிசைப்படி, பெரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுக்கப்பட வேண்டும் என்பதில் பெரியார் திராவிடர் கழகம் உறுதி காட்டி வருவதற்கும் இதுவே அடிப்படையான நோக்கம்.
நாம் தொடக்கத்திலேயே சுட்டிக்காட்டியதுபோல் வரலாற்று நிகழ்வு களை வரிசைப்படுத்திப் பார்ப்பதல்ல இதன் நோக்கம். வரலாறுகளோடு பெரியார் இயக்கத்தை இணைத்தும் பொருத்தியும் பெரியாரியலின் முழுமை யான பரிமாணத்தை புரிதலுக்கு உட்படுத்தும் முயற்சியே இதன் நோக்கம். இந்த நோக்கம்தான் பெரியார் எழுத்து – பேச்சுகளின் காலவரிசைத் தொகுப்பை நிர்ப்பந்தப்படுத்துகிறது.
1925 இல் தனது பயணத்தைத் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் 1938ம் ஆண்டு வரை முழுமையான வீச்சோடு சூறாவளியாக சுழன்றடித்தது. சுயமரியாதை இயக்கத்தின் வரலாற்றில் உன்னதமான இக்காலக்கட்டத்தை உள்ளடக்கிய பெரியார் எழுத்துகளையும், பேச்சுகளையும் முழுமையாக ஒரே நேரத்தில் வெளியிட பெரியார் திராவிடர் கழகம் திட்டமிட்டது. இக் கால கட்டங்களில் பெரியார் காந்தியத்தை ஆதரித்துள்ளார்; எதிர்த்துள்ளார்; நீதிக்கட்சியை ஆதரித்துள்ளார்; எதிர்த்துள்ளார்; கட்சிகளைக் கடந்து பார்ப்பனரல்லாதார் ஒற்றுமைக்கு களம் அமைத்திருக்கிறார். கொள்கைப் பார்வையில் கடும் வார்த்தைகளால் – கண்டித்தவர்களையும் – பிறகு – அதே கொள்கைக்காக அரவணைத்துமிருக்கிறார்; தனது சுயமரியாதை கொள்கை களைக் கொண்டு செல்ல சிறு வெளி கிடைத்தாலும் கூட அதையும் தவறாமல் பயன்படுத்தியிருக்கிறார்; அடக்கு முறைகளுக்கு அவர் ஒரு போதும் அஞ்சியதில்லை. அரிமாவாக எதிர் கொண்டிருக்கிறார். எப்படியாவது – இந்த மக்களை மானமும் அறிவும் உள்ள மக்களாக மாற்றியே தீருவதற்கு அவர் கொடுத்த விலைகள் ஏராளம்; அவரது கருத்துப் போர்க்களங்களான ஏடுகள் – சந்தித்த அடக்குமுறைகள் ; ஒவ்வொரு முறையும் ஜாமீன் பணம் கட்டச் சொல்லி அரசின் கெடுபிடிகள்; இவ்வளவு தியாகத் தழும்புகளுக்குமி டையே பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும் வழங்கிய பட்டம் ‘பிரிட்டிஷ் விசுவாசி’ . அடக்குமுறைகளை எதிர்கொள்வதில் கூட சொந்தப் பெருமைக் கும், புகழுக்குமின்றி கொள்கைக்காகவே சந்தித்த அவரது நேர்மைப் பண்பு வியக்க வைக்கிறது.
பெரியார் வரலாற்றை தமிழர்களுக்கு படைத்தளித்த சாமி.சிதம்பரனார் பெரியார் பற்றி கூறும் போது
“ இவர் இந்தியாவிலேயே பெரியார்தான். மனித இயற்கைக்கு மாறு பட்டவர். தோல்வி என்பது அவருடைய வீரத்தையும் அறிவையும் போட்டு காய்ச்சும் நெருப்பு. இத்தீயில் வைத்துக் காய்ச்ச காய்ச்ச அவருடைய இவ் விரண்டு பண்புகளும் ருசியில் அதிகப் பட்டுக் கொண்டே இருக்கும். இதைப் போலவே வெற்றி கிடைத்தாலும் அதற்கு மேல் செய்ய வேண்டியதைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட அதிகப் பொறுப்பைப் பற்றியும் தான் கவலைப் படுவார். சில இழி மக்களைப் போல் வெற்றி மயக்கத்தால் கூத்தாடும் சிறுமைக் குனம் அவரிடமில்லை. சுருங்கக்கூறினால், பெரியார் ஒரு பிறவிப் போர் வீரர்” என்று துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
7 சதவீதம் பேர் மட்டுமே எழுதப் படிக்க தெரிந்த காலக்கட்டத்தில் ( இதில் 5 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்ப்பனர்கள் ) வாரம் தோறும் 10000 ‘குடி அரசு’ பத்திரிகைகளை அச்சேற்றிய பெரியார், பணம் கிடைக்கக் கூடிய விளம்பரங்களைக்கூட அதிகம் வெளியிட முடியாது என்ற அறிவிப் பையும் வெளியிட்டு, வருவாயையும் இழக்கத் தயாராகியிருக்கிறார். விளம் பரத்துக்கு கூடுதல் பக்கங்கள் ஒதுக்குவதால், கருத்துக்களை சொல்ல முடியா மல் போய்விடுகிறது என்று வருவாயையும் ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்.
…….. “கொஞ்ச நாளைக்கு ‘குடி அரசு’ 16 பக்கத்துடனே வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. என்றாலும் இதனால் வாசகர்களுக்கு அதிகமான குறை ஏற்படாதிருக்கும் பொருட்டு இப்போது விளம்பரத்திற்காக உபயோகப்படுத்தி வரும் சுமார் 7, 8 பக்கங்களை இனி 3 அல்லது 4 பக்கங் களுக்கு அதிகப் படாமல் செய்துவிட்டு சற்றேறக்குறைய 12 அல்லது 13 பக்கங் களுக்கு குறையாத விஷயங்கள் வெளியாக்க உத்தேசித்திருக்கின்றோம். இதனால் ஒரு சமயம் விளம்பர வியாபாரிகளுக்கு சற்று அதிருப்தி இருக் கலாம்”…… ( ‘குடி அரசு’ – 23.12.1928 )
பெரியாரின் இந்தப் புரட்சிகர ‘எழுத்தும் பேச்சும்’ புதைகுழிக்குள் புதையுண்டு போய்விடக் கூடாது என்ற கவலையோடு, இவை சமுதாய மாற்றத்துக்கான ‘படைக்கலன்களாக’ மாற்றப்பட்டாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான் கொள்கை உணர்வுள்ள தொண்டர்களின் வலிமையில் மட்டுமே செயல்படும் பொருளாதார வலிமை ஏதுமற்ற பெரியார் திராவிடர் கழகம் ‘குடி அரசு’ 27 தொகுதிகளையும் ‘ரிவோல்ட்’ வார ஏட்டில் வெளி வந்த முக்கிய கட்டுரைத் தொகுப்புகளையும் தமிழ்கூறும் நல்லுலகத்தின் முன் பணிவுடன் சமர்ப்பிக்கிறது: இதில் பெருமையடைகிறது. உன்னதமான கடமையைச் செய்தோம் என்ற உணர்வில் தலை நிமிர்ந்து நிற்கிறது.
2003 ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட ‘குடி அரசு’ 1925 முதல் தொகுப்புக்கான வெளியீட்டாளர் உரையில் சுட்டிக் காட்டியதையே மீண்டும் குறிப்பிடுகிறோம்:
“ தமிழர் உரிமை மீட்பர் பெரியார்………………. “ அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண் டாற்றி வருகிறேன்”……. என்று கூறுவது போலவே தான் எங்கள் முயற்சியும் என்பதைத்தான் இந்த நிலையில் நாங்கள் கூறிக்கொள்ள முடியும்”.
– தொகுப்புக்குழு