தஞ்சையில் பிராமணரல்லாதார் மகாநாட்டுக்குப் போட்டியான தேசீய பிராமணரல்லாதார் மகாநாடு
ஜ°டி° கட்சியாரால் ஏமாறப்பட்ட தேசீய பிராமணரல்லாதார் களெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்தார்கள். தேசீயவேலை தீவிரமாய் நடந்து கொண்டிருந்த காலத்தில் இவர்கள் எங்கு போயிருந்தார்கள்?
தேசீய பிராமணரல்லாதாரென்பதற்கு என்ன யோக்கியதை வைத்திருக் கிறார்கள்?
சுயராஜ்யக்கட்சியைப் போல் கைச்சாத்து மட்டும் போட்டால் போதுமா? அல்லது காரியத்தில் ஏதாவது பரீiக்ஷ உண்டா?
அப்படியானால் இக்கூட்டத்தைத் தவிர வேறு யாரும் அக்காரியப் பரீiக்ஷயில் தேறினவர்கள் இல்லையா?
தேசீயம் என்கிற வார்த்தைக்கு என்னதான் அர்த்தம்?
உத்தியோகத்திற்கு ஆசைப்படுவதாக இருந்தாலே போதுமா?
பிறரை ஏமாற்றுவதாக இருந்தால் போதுமா?
மற்றொருவரைத் திட்டுவதாக இருந்தால் போதுமா?
அல்லது ஏழைகளின் நன்மைக்கு ஏதாவது செய்யவேண்டுமா?
இன்னும் எப்படி இருந்தாலும் சரி. ஒரு விசேஷம் என்னவென்றால் மகாத்மா பெயரையும் காங்கிர° பெயரையும் சொல்லிக்கொண்டு சுயநலத்திற் காகத் திரியும் தமிழ்நாட்டு சுயராஜ்யக் கட்சியைவிட எத்தனையோ மடங்கு இது மேலானதுதான், மற்றொரு விசேஷம் என்னவெனின் சில தேசீய பிராமணரல்லாதாரைப்போல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றாலே உடம்பு சிலிர்க்கவும் மனச்சான்றுக்காக வருந்துவதும் போலல்லாமல் சுயராஜ்யத்தைச் சீக்கிரத்தில் அடைவதற்கு சகல வகுப்பாரும் உத்தியோகம் முதலியவைகளை அவரவர் வகுப்புகளுக்கு ஏற்றவாறு சமமாகப் பிரித்துக் கொடுக்கவேண்டு மென்றும் ஒற்றுமையடைய வகுப்பு வித்தியாசமில்லாமல் எல்லோருக்குள்ளும் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் ஓர் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இம்மகாநாட்டைக் கூட்டினவர் யாராக இருந்தாலும், அவருடைய உத்தேசம் ஏதாயிருந்தாலும் தற்காலம் தேசத்திற்கு வேண்டியதும் இன்றியமையாததுமான ஓர் தீர்மானத்தை தேசீய பிராமணரல்லாதார் பெயரால் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தமட்டில் நாம் உண்மையாக மகிழ்ச்சி அடைகிறோம்.
குடி அரசு – கட்டுரை – 30.08.1925