தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு -அறிமுகமும் நோக்கமும்

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் சமூகநீதிக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடி வருகிற இயக்கங்கள் தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) உரிமைக்காக ஒன்றுபட்டுள்ளோம். இலங்கை அரசுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய பல்வேறு பாதிப்புகளிலிருந்து தப்பி இலட்சக்கணக்கான ஈழ மக்கள் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து வந்துள்ளனர். தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகப் போராடுகிற நாம் நம் மண்ணில் திறந்த வெளி முகாம்களிலும் சிறப்பு முகாம்களிலும் வாழ்கிற அம்மக்களின் உரிமைகளுக்காகக் காத்திரமான மக்கள் இயக்கங்களை முன்னெடுக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

தமிழீழத்திற்காக நாம் நடத்துவது விடுதலைக்குத் துணை செய்யும் ஆதரவுப் போராட்டங்களே! ஆனால் இங்குள்ள தமிழீழ ஏதிலியர்கள் தமக்கான கோரிக்கைகளைத் தாமே முன்னெடுத்துச் செல்வதற்கான சனநாயக வெளி இல்லாது புழுக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர். இறுக்கம் தளர்ந்து அவர்களுக்கான கோரிக்கைகளைப் பொதுச் சமூகத்திடம் முன்வைத்து பரந்த அளவில் மக்கள் கவனத்தைத் தம் பக்கம் திருப்பத் தமிழீழ ஏதிலியர்க்கு இந்நாட்டுக் குடியுரிமை வேண்டும். நாளை அவர்கள் தாயகம் திரும்பும் வாய்ப்புள்ளதாலும் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பில் பங்குபெறும் தேவையைக் கருத்தில் கொண்டும் இடைக்காலக் குடியுரிமை கோருகிறோம். இந்திய அரசு அண்மையில் குடியுரிமைத் திருத்தச் சட்ட முன்வடிவை நாடாளுமன்ற பொறுப்புக் குழுவிற்கு அனுப்பியுள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு மேல் இந்நாட்டில் தங்கியுள்ள அண்டை நாடுகளான வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஏதிலியர்க்கு இந்தியக் குடியுரிமை வழங்க மொழிந்துள்ளது.

இப்பட்டியலில் இலங்கையைச் சேர்க்க வேண்டும் எனக் கோரப் பொருத்தமான அமைப்பு வடிவம் எமது கூட்டமைப்பு எனக் கருதுகிறோம். இப்படிப் பலவகையில் இக்கூட்டமைப்பு காலத்தின் தேவை என்றே கருதுகிறோம்.

இந்தக் கோரிக்கையோடு அவர்களின் கல்வியுரிமை, வேலைவாய்ப்புரிமை, மனித உரிமை, சிறப்பு முகாம் மூடல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான ஒட்டுமொத்தத் தமிழக மக்கள் ஆதரவைத் திரட்ட வேண்டும். அதற்குத் தொடர்ச்சியான மக்களியக்கம் நடத்துவதன் மூலம் கோரிக்கைகளை அரசுகளிடம் கொண்டு சேர்த்து வென்றெடுக்க தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், மனித உரிமை அமைப்புகள் – ஆர்வலர்கள், திரைத்துறையினர், வழக்கறிஞர்கள், முன்னாள் இன்னாள் ஆட்சியர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் அமைப்புகள், திருநங்கை அமைப்புகள், தமிழக மக்கள் அனைவரின் ஆதரவை வேண்டுகிறோம்.

கூட்டமைப்பின் கட்டமைப்பு

தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு

தலைவர் : கொளத்தூர் தா.செ.மணி

தலைமைக் குழு : பெ.மணியரசன், கோவை கு.இராமகிருட்டிணன்

கூட்டமைப்பின் முதற்கட்டச் செயல்திட்டம் :

பத்து இலக்கம் கையப்ப இயக்கம்

ஒருங்கிணைப்பாளர் : வே.பாரதி

பொருளாளர் : கரு.அண்ணாமலை

கூட்டமைப்பில் அங்கம் பெற்றுள்ள அமைப்பு ஒவ்வொன்றின் தோழர்கள் இடம்பெற்றது ஒருங்கிணைப்புக் குழு:

தோழர்கள் ஆ.பாரத்குமார், இல.பாண்டியராசன், பட்டுராசன், மு.சா.தமிழ்பாலன், ரமேசு பெரியார், வி.கோகுலகிருட்டிணன்,

கு.கண்ணன் மு.சா.தமிழ்பாலன், புரட்சிநம்பி, மு.கவியரசன், சு.செந்தமிழ்ச் செல்வன், வே.இராதா பார்த்திபன், சௌ.சுந்தரமூர்த்தி,

இரா.உமாபதி, பன்னீர்செல்வம்

கையப்ப இயக்கக் கோரிக்கைகள்:

இந்திய அரசே! தமிழக அரசே!.

* தமிழீழ ஏதிலியர் அனைவர்க்கும் இடைக்காலக் குடியுரிமை வழங்குக!

* ஏதிலியர் சிறப்பு முகாம்களைக் கலைத்திடுக!

* தமிழீழ ஏதிலியர் வாழ்வில் காவல் துறை, வருவாய்த் துறை அத்துமீறல்களைத் தடுத்திடுக!

* தமிழீழ ஏதிலியரின் கல்வி, வேலைவாய்ப்புத் தடைகளை நீக்குக!

* இலங்கை திரும்ப விரும்பும் ஏதிலியர்க்குத் தண்டம் விதிப்பதைக் கைவிடுக!

 

செயல்திட்டம் அறிவிப்பு :

கூட்டமைப்பு சார்பாக வருகிற 27.08.2016 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு மெரினா கடற்கரையில் முதற்கட்டக் கையப்ப இயக்கம் தொடங்கும். கூட்டமைப்பின் தலைவர், தலைமைக் குழு, அமைப்புகளின் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர் அனைவரும் தொடக்க நிகழ்வில் பங்கேற்பர். இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரங்களில் கையப்ப இயக்கம் தொடங்கி நடத்தப்படும். பத்து இலக்கம் கையப்பம் பெறும் வகையில் கூட்டமைப்பு சார்பில் தொடர்ச்சியான மக்கள் இயக்கங்கள் நடத்தப்படும்.

 

கூட்டமைப்பில் அங்கம் வகித்துள்ள அமைப்புகள் :

அம்பேத்கர் சிறுத்தைகள்

அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம்

இளந்தமிழகம் இயக்கம்

கலகம்

காஞ்சி மக்கள் மன்றம்

குமுக விடுதலைத் தொழிலாளர்கள்

சிபி (எம்-எல்) மக்கள் விடுதலை

தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தமிழ்த் தேச மக்கள் கட்சி

தமிழ்த் தேசியப் பேரியக்கம்

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தமிழக மக்கள் முன்னணி

தமிழர் நலம் பேரியக்கம்

தமிழர் விடுதலைக் கழகம்

திராவிடர் விடுதலைக் கழகம்

மே 17 இயக்கம்

துண்டறிக்கை படிக்க இங்கே சொடுக்கவும்

14051559_1793714514245774_665802904571021691_n 14054907_1793714414245784_1450508790416269205_n 14063777_1793714390912453_8040423882262094451_n

You may also like...